Shadow

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

சக்கர வியூகம் விமர்சனம்

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது!

வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. அதுவும் மகாபாரதக் கதைகளைக் கேட்பதோ, படிப்பதோ எப்பொழுதும் பரவசமான ஒன்று. அதனால் தான் வியாசர் பறந்த வானில் பறக்க தைரியமாக முயல்கிறார் ஜெயமோகன். தெரிந்த கதைகள் தானெனினும், சொல்பவரின் கற்பனைக்கேற்ப புதிய நிறங்களைப் பெற்ற வண்ணமிருப்பதே பாரதத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு, ஐயப்பனின் சிறுகதைத் தொகுப்பான சக்கர வியூகத்திற்கும் உண்டு.

இங்கே, பாரதம் போல் இராமாயணக் கதைகள் பரவலாக விவாதிக்கப்படுவதில்லை. அந்தக் குறை எழுத்தாளர் ஐயப்பனுக்கும் உண்டோ என்னவோ? இராமாயனத்துக்கும் தன் புத்தகத்தில் இட ஒதுக்கீடு செய்துள்ளார். அகலிகை பற்றிய கதையின் தலைப்பில் ‘கல்’ வந்தாலும், இச்சிறுகதையை பூ கொண்டே எழுதியுள்ளார் எண்ணங்கள் இனியவை எனக் கூறும் ஐயப்பன். இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சமும் அதுவே! அந்நேர உணர்ச்சி வசப்படல்களுக்கு ஆளாகின்றனரே தவிர, எப்பொழுதும் கொதிநிலையிலேயே இருப்பதில்லை ஐயப்பனின் பாத்திரங்கள். இதில் இராவணனும் துரியோதனனும் கூட அடக்கம்.

கடைசி நாள் போருக்குப் போகும் முன், இராவணனுக்கும் சூர்ப்பநகைக்கும் நடக்கும் உரையாடல் மிக முக்கியமானது. தங்கையின் மேலுள்ள அன்பிற்காக தன் உயிரைத் துறக்க முன் வந்ததைச் சொல்கிறான் இராவணன். அந்த உரையாடலின் பொழுது, இராவணனின் மனநிலை எப்படி இருந்ததெனச் சித்தரிக்கிறார் ஐயப்பன். இறுதியில், ஒரு ஜோதி இராமனைச் சுற்றி உயரக் கிளம்புகிறது. அது ஏன் இத்தனை கொடுமையான அரக்கர்களுக்கு மட்டும் முக்தி கிடைத்து விடுகிறதென்ற ஐயம் எனக்கு எப்பவும் உண்டு. அதற்கான காரணத்தை யூகித்தறிய இச்சிறுகதை உதவியது.

கிருஷ்ணரை வசை பாடிக் கொண்டே இருக்கும் சிசுபாலனுக்கு முக்தி கிடைக்கும். இறைவனை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கும் பக்திமான்களைப் போல், கிருஷ்ணனை சதா சர்வ காலமும் வஞ்சத்துடன் நினைத்ததால் முக்தி கிடைத்ததாகச் சொல்வதுண்டு. ஏனோ அந்தக் காரணத்தில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டதில்லை. ஆனால் ஐயப்பன், இராவணன் எப்படி ராமன் முன் நின்றானெனச் சொல்கிறார். எல்லாவற்றையும் இழந்து, அனைத்துத் தவறுகளுக்கும் தானே பொறுப்பென உணர்ந்து இறை முன் நிற்கிறார்.

‘துறத்தல்’ என்பது முக்திக்கான மிக முக்கிய தகுதியாகக் கூறப்படுகிறது. எதைத் துறக்க வேண்டுமோ, அதையெல்லாம் மீண்டும் பெற முடியாதபடிக்கு இழக்கிறான் இராவணன். கடைசி நாளில், ஒரு துறவியாகவே ராமன் முன் நிற்கிறான். குற்றங்களைப் பகிரங்கமாக வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால், குற்றவுணர்ச்சியில் இருந்து மீளலாம் என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். சூர்பநகையுடனான உரையாடலில் அதைத்தான் செய்கிறான் இராவணன். இராவணன் முக்தி அடைவதற்கான அனைத்துக் காரணங்களும் சரியாக உள்ளது எனத் தோன்ற வைத்தார் ஐயப்பன்.

இராமாயணம் பற்றிய கதைகளின் விவரணைகளுக்கு கம்பரின் பாடல்களை உபயோகித்துக் கொள்கிறார். ஆனால் மகாபாரதத்தில் நிறைய புது முயற்சிகளைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்துள்ளார். கூறியது கூறலைத் தவிர்த்து மாய எதார்த்த வகை பாணியை முயன்றிருப்பார் போல! வியாச மகாபாரதப்படி, ஏகலவனைக் கொன்றது கிருஷ்ணன். ஆனால் கிருஷ்ணனுக்கு இறுதி மரியாதையை ஏகலைவனைச் செய்ய வைக்கிறார் எழுத்தாளர். அதே போல், குசேலன் கிருஷ்ணனின் நட்பு அவர்களது பதின்மத்தில் குருகுல ஆசிரமத்தில் மலர்ந்ததாக வரும். ஆனால் மிகச் சிறு வயது முதலே இருவரும் நண்பர்களென எழுதியுள்ளார் ஐயப்பன்.

புனைவு அனைத்துச் சுதந்திரத்தையும் எழுத்தாளருக்குத் தருகிறது. ஆனாலும் சில நெருடல்கள் எட்டிப் பார்க்கவே செய்கின்றன. குசேலனின் இயற்பெயர் சுதாமன். குசேலன் என்பதற்கு வறிய உடைகளை உடுத்துபவன் எனப் பொருள். கல்யாணமாகி தரித்தரனாக சுதாமன் வாழ்ந்த வாழ்க்கையைச் சுட்டிக் காட்ட ‘குசேலர்’ என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார். சிறு வயது சுதாமனுக்கே அந்தப் பெயரைச் சூட்டி விடுகிறார் ஐயப்பன். மேலும் அவர்களது உரையாடல் காலத்தைக் கடந்ததாக உள்ளது. சிறுவர்களான கிருஷ்ணனும் சுதாமனும் உரையாடிக் கொண்டிருக்கும்போது, பாஞ்சால நாட்டு மன்னனை அவனது சீடன் தேர்க்காலில் கட்டினான் எனப் பேசிக் கொள்கிறார்கள். அந்தச் சீடன் அர்ஜூனன். அவன் கிருஷ்ணரை விட ஆறு மாதம் இளையவன் எனச் சொல்கிறார்கள். அந்நிகழ்ச்சி பாண்டவர்களின் குருகுல வாசம் முடிந்த பின்பே நடக்கிறது. சிறுவர்கள் இருவருக்குமே தீர்க்க தரிசனம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இரண்டு சிறுவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதைக் கேட்டால் மிக அழகாக இருக்கும். ஐயப்பனின் குசேலனும் கிருஷ்ணனும் பேசிக் கொள்வது அப்படித்தான் உள்ளது. ஏகலைவனும் அவன் மகனும் பேசிக் கொள்வதும் படிக்க புது அனுபவமாய் உள்ளது. தமிழக மக்கள் மனதில், ஏகலைவன் பற்றியும் கர்ணன் பற்றியும் ஒரு மெல்லுணர்வுண்டு. ஏனெனில் இருவருமே புறக்கணிக்கப்பட்டவர்கள். புறக்கணிப்பின் வலியை உணர்ந்த அனைவருக்கும், இவ்விருவர் மேலும் பரிதாபமும் கரிசணமும் எழுவது இயல்பே! எழுத்தாளருக்கும் ஏகலைவன் மேல் அப்படியொரு மெல்லுணர்வு உண்டென நினைக்கிறேன். துரோணரிடமும் கிருஷ்ணரிடமும் ஏகலைவன் பேசும் பொழுது.. அவனின் ஏக்கத்தையும், அடிப்பட்ட வலியையும், ஞான வேட்கையும் உங்களால் உணர முடியும்.

மகாபாரதம், இராமாயணம் என்ற இரண்டையும் கடந்த ஓர் அழகான கற்பனைக் கதையோடு இப்புத்தகம் முடிகிறது. மிகச் சின்னஞ்சிறிய கதை அது. அதை இன்னும் பெரிதாக இலக்கியத் தரமாக நீட்டியிருக்கலாம். ஏனோ இரத்தினச் சுருக்கமாக முடித்துவிட்டார். அந்தக் கதையின் சிறப்பம்சம், அதில் வரும் மூன்று பெண் கதாபாத்திரங்கள். அவர்கள் மூவரும் சந்திக்கின்றனர் என்ற கற்பனையே பல விஷயங்களை நம்மை யோசிக்கத் தூண்டும். அதிலொருவர், பேரழகியாகவும் கல்லாகவும் இருந்து பேரொளியாக மாறிய அகலிகை ஆவர். மற்றவர் யாரெனத் தெரிந்து கொள்ளவும், அவர்கள் மூவருக்குமுள்ள ஒற்றுமையும் வேதனையும் புரியவும் அவசியம் நீங்கள் புத்தகம் வாங்கவேண்டும்.

ஒரே நாளில் மூன்று தேர் செய்பவர், ஒரு மாதம் முயன்று ஒரு தேர்ச் சக்கரம் செய்தால் அதன் தரமும் வலிமையும் எப்படியிருக்குமென உவமைக்காக உபயோகிக்கும் பழந்தமிழ்ப் பாடல் ஒன்றுண்டு. அந்த உவமைக்கு எடுத்துக்காட்டாக, இரண்டு கதைகள் தொகுப்பில் உண்டு. ஒன்று அஸ்வத்தாமன் பற்றியது. இன்னொன்று சக்கர வியூகம் பற்றியது. இராவணனுக்கும் சரி, துரியோதனனுக்கும் சரி இறக்கும்போது ஒரே எண்ணம் தானெனச் சுட்டிக் காட்டுகிறார் எழுத்தாளர். அபிமன்யுவின் மரணத்தோடு சக்கர வியூகம் நிற்கவில்லை. காலச் சக்கரம் லாவகமாக துரோணரின் மீதேறுவதை எழுத்தாளர் படம்பிடிப்பதோடு அது முடிகிறது.

சக்கர வியூகம்: கிடைக்குமிடம் – அகநாழிகை

– தினேஷ் ராம்