32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சங்கு சுப்ரமணியம்

Dinesh R சேலம் Published: 09/03/2016 3 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

மாயலோகத்தில்..

Sangu Subramaniyam“சுதந்திரச்சங்கு” என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு பத்திரிகை வெளிவந்து, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. அப்பத்திரிகைதான் “சுதந்திரச்சங்கு”. இதன் தலையங்கம் படிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம் என்பவர்.

கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1905இல் பொருளாதாரத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சுப்ரமணியம்.

“சுதந்திரச்சங்கு” மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு, அப்பத்திரிகையின் பெயரிலிருந்த பின் பகுதியான ‘சங்கு’ ஆசிரியரான சுப்ரமணியத்துடன் இணைந்து பின்பு சங்கு சுப்ரமணியம் என்றே நிலைத்து விட்டது.

காலணா (கால் அணா) வின் மதிப்பு என்னவென்று இப்போது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது இந்திய ஒரு ரூபாய் என்பது இப்போது நூறு (100) பைசாக்களைக் கொண்டது. இந்த பைசா, நயா பைசா சமாசாரமெல்லாம் சமீபத்தில் ஏற்பட்டதுதான். அதற்கு முன்பு ரூபாய், அணா, பைசா என்பது தான் வழக்கத்திலிருந்தது. ஒரு ரூபாய்க்கு, பதினாறு அணா, ஒரு அணாவின் நாலில் ஒரு பங்கு கால் அணா. அந்தக் காலத்தில் ஓட்டைக்காலணா மிகவும் பிரபலம். ஆக ஒரு ரூபாயில் 64 கால் அணாக்கள் அடக்கம். இப்போதைய மதிப்பில் ஒன்றைரப் பைசாவுக்கு சற்று அதிகம். அவ்வளவுதான். லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்ய வைத்து அதிசயக்க வைத்த இப்பத்திரிகையை எதிர்பாராத விதமாக 1933இல் நிறுத்தும்படியாகவும் ஆகிவிட்டது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

“சங்கு” சுப்ரமணியம், சுதேசமித்திரன் பத்திரிகையிலும் சில காலம் பணியாற்றினார். அனுமான், மணிக்கொடி போன்ற இலக்கிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றியவர் சங்கு.

மகாகவி பாரதியுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்ட அனுபவமும் உண்டு. காந்தியின் கொள்கைகள், அதிலும் குறிப்பாகத் தீண்டாமை ஒழிப்பில் பேரார்வம் காட்டியவர்.

அக்காலத்தில் தீண்டத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களுக்கு உணவளித்தார் ஒரு பெண்மணி. இதற்காக இப்பெண்மணி மிகப்பெரிய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்தப் பெண்மணியையே மணந்து கொண்டார் சங்கு சுப்ரமணியம்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியம் உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களின் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து “ஸ்ரீராமானுஜர்” என்கிற திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டு அப்படத்தில் ஸ்ரீராமானுஜராகவும் நடித்தார். அப்படத்திற்கு மணிக்கொடி ஆசிரியர் வ.ரா. வசனம் எழுத, பிரபல எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தி, இலக்கியவாதி இதழியலாளர் ந. ராமரத்தினம் போன்றோரும் நடித்திருந்தனர். பாடல்களை பாவேந்தர் பாரதிதாசன் இயற்றியிருந்தார். இப்படம் 1938இல் வெளிவந்தது.

ஜெமினி கதை இலாகாவில் இருந்தபோதுதுதான் அவர்கள் தயாரித்த ‘சக்ரதாரி’ என்னும் படத்திற்கு திரைக்கதை வசனம், பாடல்கள் பொறுப்பை ‘சங்கு’ சுப்ரமணியம் ஏற்று திறம்பட செய்து முடித்தார். ‘சக்ரதாரி’ படம் ஜெமினிக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.

‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா?
ரவா, லாடு பூரியும் வேணுமா?’

மிகவும் பிரபலமடைந்த இந்தப் பாட்டு ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு. பி. பானுமதி மற்றும் குழுவினரால் பாடப்பட்ட இந்தப் பாடலை இயற்றியவர் சங்கு சுப்ரமணியம்.

பல்வேறு மொழி பேசும் சிப்பாய்கள் மத்தியில் பாடப்பட்ட இந்தப் பாடலில் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அந்தந்தப் பகுதி சிப்பாய்கள் பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜெமினியின் கதை இலாகாவில் பணியாற்றி ‘சந்திரலேகா’, ‘ராஜி என் கண்மணி’ போன்ற படங்களில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவரது மனம் ஆன்மீகத்தை நாடியது. ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இது வெகு காலமாக அச்சில் வராமலிருந்து, பல வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண பிரேமியின் ‘பாகவத தருமம்’ ஏட்டில் பிரசுரம் கண்டிருக்கிறது.

ஆன்மீகத்தில் ஈடுபட்ட சங்கு சுப்ரமணியத்திற்கு பஜனை சம்பிரதாயத்தில் ஆர்வம் கூடி, பஜனைகள் செய்ய ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு தனிப்பாணியையும் உருவாக்கிக் கொண்டார். இவரது பஜனைகளில் ஆழ்வாரின் பாசுரங்கள், பாரதியாரின் பாடல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.

இவர் தனது 64வது வயதில் 1969 ஆம் வருடம் இயற்கை எய்தி, வழிபட்டு வந்த கண்ணனின் திருவடியைச் சேர்ந்தார்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.