
மலையாளத்தில் வருவது போல் க்ரைம் த்ரில்லர் படங்கள் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வண்ணம் வந்துள்ளது ஜான் டோ திரைப்படம். மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர் ‘ஜான் டோ’ ஆகும்.
கேரளத்து ஏரியில் ஒரு கார் விழ, அதற்குள் இருக்கும் சிறுவன் நீரில் மூழ்கி இறந்து போகிறான். அந்தச் சிறுவனை ஜான் டோ என அடையாளப்படுத்தி விசாரணையைத் தொடங்குகிறார் உதவி ஆய்வாளரான N. சந்துரு. தமிழகத்தில், குறிஞ்சிமேடு எனும் கிராமத்தில் ஹிருதய் எனும் சிறுவன் காணாமல் போகிறான்.
தான் தேடும் ஜான் டோ, ஹிருதயாக இருக்குமோ என்று தமிழகம் வருகிறார் சந்துரு. குறிஞ்சிமேட்டுக் காவல்துறை பெண் அதிகாரியான, A.ராவின் துணையோடு, திடுக்கிட வைக்கும் ஒரு பெரிய க்ரைமை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார் N.சந்துரு.
லக்கி எனும் கதாபாத்திரத்தில், தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் ஜாரா வினீத் சந்தோக் நடித்துள்ளார். அவருக்கும், அவரது அம்மா தர்ஷனாவாக நடித்திருக்கும் ஸ்ருஷ்டி Y, இருவருக்கும் இடையே நிகழும் உணர்வுரீதியான விலகலையும் இணைவையும் மிக அழகாகக் கையாண்டுள்ளார் இயக்குநர் மதுமிதா. பதின் பருவத்தில் இருக்கும் மகளுக்கும், கணவனை இழந்த மனைவிக்குமான அந்த உறவை, ஒரு பெண் இயக்குநராலேயே இவ்வளவு சிறப்பாகத் திரையில் கொண்டு வர முடியும். இருவருமே தாங்கள் ஏற்ற கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
A.ராவ் எனும் காவலதிகாரி பாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். போலீஸ்காரர்களுக்கே உரித்த மிடுக்கையும் கம்பீரத்தையும் அலட்சியத்தையும் அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். தினேஷ் சுப்பராயன், ஆக்ஷன் சந்தோஷ் ஆகியோரின் சண்டை இயக்கத்தில், சஞ்சனா நடராஜன் மற்றும் அர்ஜுன் தாஸின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.
வழக்கை முடித்ததாகக் காவல்துறை கணக்கு காட்டிய பின்னும், N.சந்துருவால் அதைக் கடக்க முடியவில்லை. அந்த அவஸ்தையோடு, அவமதித்துக் கொண்டே இருக்கும் தந்தையின் குரல், N.சந்துருவின் தலைக்குள் ஓடிக் கொண்டே உள்ளது. இந்த உபத்திரவத்தை மீறி, ஜான் டோ யாரென்ற தேடலைக் கைவிடாமல் தொடர்கிறார். இக்கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் அர்ஜுன் தாஸ். மகன் உயிரைக் காப்பாற்ற முடியாத தந்தையை வில்லனாக்கியுள்ளார் மதுமிதா. அதோடு நில்லாமல், இரண்டு பிரதான கதாபாத்திரங்களின் தந்தைகளையும் அப்யூஸராகச் (Abuser) சித்தரித்துள்ளார். யாருடைய தந்தை மிகச் சிறந்த அப்யூஸர் என இரண்டு கதாபாத்திரங்கள் போட்டி போட்டுக் கொள்வது போலும் ஒரு காட்சி வருகிறது.
டயஸ்டெமா (Diastema) உள்ள குழந்தைகளை ஏன் வில்லன் கடத்துகிறான் எனப் புரிந்தாலும், அவர்களை ஏன் கொல்லுகிறான் என்ற காரணம் கன்வின்ஸிங்காக இல்லை. கடைசி வரை சைக்கோ கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸைத் தக்க வைத்துள்ளதால், அது பெரிய குறையாகத் தெரியவில்லை. மதுமிதாவின் KD (எ) கருப்புதுரை படத்தில், பிள்ளைகள் தந்தையைக் கொல்லப் பார்ப்பார்கள்; இப்படத்தில், மகனாக வளர்ப்பவரைத் தந்தை கொலை செய்கிறார் என்பது சுவாரசியமான நகைமுரண். க்ரைம் த்ரில்லர் விரும்பிகளை ஏமாற்றமளிக்காமல், நிச்சயமாக நல்ல அனுபவத்தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்படம்.

