தொடர் கொலைகள் செய்யும் சைக்கோவும், அவனைத் தேடும் ஏ.சி.பி. சாலமனும் ஒரே காரில் சவாரி செய்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் எந்தப் பூச்சுகளையும் நம்பாமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடக்கி விடுகிறது. அங்கிருந்தே செழியனின் ஒளிப்பதிவு உங்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. எதையெல்லாம் ரசிகர்களால் யூகிக்க முடியுமோ, அதற்கு இடம் தராமல் இயக்குநரே முந்திக் கொண்டு அதைச் சொல்லி விடுகிறார். இடைவேளை வரை இப்படி விறுவிறுப்பாகச் செல்லும் சவாரி, அதன் பின் சற்றே நிதானமாய்ப் பயணிக்கிறது.
ஏ.சி.பி. சாலமனாக புதுமுகம் பெனிட்டோ நடித்துள்ளார். படத்தின் பலம் அதன் கதாபாத்திரத் தேர்வுகளே! மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டுள்ள படத்தில், நடிகர்கள் நிறைவாக நடிக்காவிட்டால் சோடை போய்விடும். இவ்விஷயத்தில் இயக்குநர் குகன் சென்னியப்பன் மிகத் தெளிவாக தியேட்டர் ஆர்டிஸ்ட்களையும், தேர்ந்த நடிகர்களையும் உபயோகித்து அசத்தியுள்ளார். சாலமனின் பாத்திரம் ஹீரோயிசமின்றி மிகச் சாதாரணமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் பெனிட்டோ தன் இயல்பான நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சனம் ஷெட்டி எண்ணி நான்கே நான்கு காட்சிகளில் மட்டும் ஒப்புக்கு தலை காட்டுகிறார்.
மொபைலில் கேம்ஸ் விளையாடியவாறு அறிமுகமாகிறார் கார்த்திக் யோகி. ‘நாளைய இயக்குநர்’ போட்டியில் நடிகர் காளி வெங்கட்டுடன் இணைந்து, சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர் இவர். அவர் ஏற்றுள்ள ரவி எனும் அப்பாவித்தனமான பாத்திரத்தினைக் கச்சிதமாக தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். படத்தின் நாயகன் இவர் தான். கார் காதலர் எம்.எல்.ஏ. பொன்மலையாக நடித்திருக்கும் அருண் அலெக்சாண்டருக்கு வழக்கமான டெம்ப்ளட் அரசியல்வாதி பாத்திரமெனிலும் ரசிக்க வைத்து விடுகிறார். மரம் வெட்டுதல், மரக் கடத்தலென்ற கிளைக் கதையை ஊறுகாய் போல் பயன்படுத்திவிட்டு கடந்து விடுகிறார் குகன்.
ஒரு ஜாலியான த்ரில்லரைக் கொடுத்துள்ளார் இயக்குநர் குகன் சென்னியப்பன். அதனாலோ என்னவோ, T.K.கார்த்திக்கின் அறிமுகத்திற்குப் பிறகு, சைக்கோ அடுத்த கொலையைச் செய்து விடுவானோ என்ற பதற்றத்தை படம் ஏற்படுத்தவில்லை. ஆனால் செழியனின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படம் பார்க்கும் பொழுது எதையும் யோசிக்கவிடாது.