Search

சைவம் விமர்சனம்

Saivam review

சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார்.

தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.

சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படம் நகர்கிறது. சேவலை விடவும், படத்தின் முக்கிய பங்கு வகித்திருப்பது நாசர் குடும்பம் வசிக்கும் அந்தச் செட்டிநாடு வீடுதான். அவ்வீட்டின் தொழுவம், மாடி, பரண் என அனைத்துமே கதைக்கு உதவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத முகங்களாகப் பார்த்து, கதாபாத்திரங்களுக்குப் பொருந்திகிறாற்போல் கச்சிதமாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். நாசரின் மனைவி ஆச்சி விசாலாட்சியாக நடிக்கும் கெளசல்யா, சாராவின் அம்மாவாக நடிக்கும் விஞ்ஞானி வித்யா, வேலைக்காரி கலாவாக நடிக்கும் மாலதி போன்றோர்கள் அதில் குறிப்பிடத்தக்கவர்கள். துபாய் வாழ் சிறுவன் ஷ்ரவனாக வரும் ரே அசத்துகிறான்.

‘படிக்கிற குழந்தை எங்க நல்லா படிக்கும்ணே’ என்றொரு வசனம் படத்தில் வருகிறது. இந்த வசனத்திற்கு திரையரங்கில் கைத்தட்டவும் செய்கின்றனர். ஆங்கிலத்தில் பேசுவது என்பதுதான் நன்றாகப் படிப்பதின் இலக்கணமா என்ன? படத்தில் இந்த வசனத்தைச் சொல்லும் கதாபாத்திரம், ஏதோ கிராமத்திலிருக்கும் ஒரு நபர் சொல்வதாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. எம்.பி.ஏ. படித்துவிட்டு விவசாயம் செய்யும் கணேஷ் என்ற கதாபாத்திரம் பேசும் வசனமிது. என்னக் கொடுமை இது விஜய்!?

‘கடவுள் பலி கேட்டுச்சாம்மா?’ என்று கேட்கும் அழகிய சிறுமியாக சாரா. படத்தை சாராவை நம்பித்தான் இயக்குநர் எடுத்துள்ளார் எனப் புரிகிறது. ஆனால் படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தட்டையாகப் பயணிக்கிறது. சேவலின் மீதான சாராவின் பிரியத்திற்கு அழுத்தம் தராதது இக்குறைக்குக் காரணமாக இருக்கலாம். சேவல் பலியிடப்படக் கூடாதென்ற பதற்றம் நமக்கு ஏற்படவில்லை.

கதிரேசனாக நாசர். என்ன அற்புதமாக அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துகிறார்! கதிரேசனின் பேரனாக நாசரின் மகன் லுத்ஃபுதின் பாஷா இப்படத்தில் அறிமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் த்வாரா ஈர்க்கிறார். நாசருக்கு 2 மகன், 1 மகள், 3 பேரன், 2 பேத்தி. இவ்வளவு கதாபாத்திரங்களையும் குழப்பமில்லாமல் அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். மேலும் வேலைக்காரராக வரும் ஜார்ஜும், வெத்தலை சாமியாராக வரும் சண்முகராஜன் ஆகியோரும் கலக்கியுள்ளனர்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்தான் நடக்கிறது. ஆனால் அதை நாம் சலிப்பாக உணராமல் பார்த்துக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. நா.முத்துக்குமாரின் வரிகளில், ஜீ.வி.பிரகாஷின் இசையில் உத்ரா உன்னிகிருஷ்ணனின் பாடிய, ‘அழகே அழகே..’ பாடல் மிக ரம்மியமாக உள்ளது.

டாஸ்மாக் பாடல், குத்துப் பாடல், இன்னபிற எந்தக் கோளாறும் இல்லாத படமாக சைவம் உள்ளது. சுவாரசியம் ஏதுமின்றி படம் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தாலும் சலிப்பேற்படாமல் பார்த்துக் கொள்கிறார் விஜய்.