Shadow

ஜில்லா விமர்சனம்

இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார்.

மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை.

பலமுறை பார்த்துச் சலித்துப் போன ‘போக்கிரி’ பாத்திரத்தில் மீண்டும் விஜய். எதிரில் நிற்பவர் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டேங்கிறார். மோகன் லால் எவ்வளவு பெரிய ஆள்? கேரளாவிலிருந்து நமக்காக வந்திருக்காரே என்றாவது மோகன்லாலில் முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் அசின், நயன்தாராவின் பின்புறத்தைத் தொட்டவர்.. இப்படத்தின் ஒரு காட்சியில் சற்று முன்னேறி காஜல் அகர்வாலின் பின்புறத்தை அழுத்திப் பிடிக்கிறார்.

சிவனாக மோகன்லால். வெள்ளை சட்டை வேஷ்டியில் ஈர்க்கிறார். அவரது தாடி ஸ்க்ரீனில் அவரது கம்பீரத்தை இரட்டிப்பாக்குகிறது. படத்தின் பலமும் அவரே; பலவீனமும் அவரே! இடைவேளையின் பொழுது விஜயிடம் சவால்விட்ட பின்னருமே கூட அவர் காட்சிப்பொருளாகத்தான் திரையில் வலம் வருகிறார். அழுத்தமான காட்சிகளோ, படத்தை சுவாரசியப்படுத்தும் காட்சிகளோ மோகன்லாலுக்கு இல்லை. படம் முழுவதும் விஜய்தான் ஓடி ஓடி உழைக்கிறார். மதுரை படங்களின் பலமான வட்டாரத் தொனியை விழுங்கி விடுகிறார் மோகன்லால். அதனால் படத்தில் ‘நேட்டிவிட்டி’ இல்லாமல்.. படத்தோடு ஒன்ற முடியவில்லை. ஆனால் இவரைத்தவிர இப்பாத்திரத்தில் எவர் நடித்திருந்தாலும் படம் இன்னொரு சுறாவாகியிருக்கும். உதாரணத்திற்கு, பிரபுவையோ ராஜ்கிரணையோ கற்பனை செய்து பாருங்கள்.

இமானின் சொதப்பலால், தனது ஒரே வேலையான பாடல்களுக்கு ஆடுவதிலும் சோடை போய்விடுகிறார் காஜல் அகர்வால். மேலும் அறிமுக காட்சியிலிருந்தே கூட நாயகிக்கான பொலிவுடனின்றி மனதில் எள்ளளவும் பதியாமல் ஓரமாக நிற்கிறார். ஏன் படத்தில் எந்த கதாபாத்திரமுமே மனதில் பதியவில்லை.

விறுவிறுப்போ சுவாரசியமோ அற்ற திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் ஆர்.டி.நேசன். ஆனால் கதையளவில் இப்படம் மிக முக்கியமான படமாகப்படுகிறது. கத்தி எடுத்தவன் தலைவன் என்ற அபத்தமான முடிவிலிருந்து விஜயை மடைமாற்றியுள்ளார் நேசன். தமிழ்ப்படங்களில் நாயகனால் கொல்லப்படுபவர்கள், முக்கியமாக கொல்லப்படும் அடியாட்கள் கணக்கிலடங்கா. இப்படத்தில் அத்தகைய கொலை பாதகச் செயல்களில்லை என்பது ஆறுதலளிக்கும் முன்னேற்றம். விஜயின் கைகளால் எவரும் இப்படத்தில் கொல்லப்படவில்லை. இனியாவது, எவரையும் கொல்வதில் அல்ல நாயகத்தன்மை என்று தமிழ்ப்பட நாயகர்களும் இயக்குநர்களும் உணர்ந்தால் நல்லது.

அர்ஜூனனின் தேரில் அனுமாரை கொடியாகப் பறக்கவிட்டு, அர்ஜூனனைக் காப்பாற்றிய கிருஷ்ணர் போல்.. மோகன்லாலை நடிக்கவைத்து தன்னையும் விஜயையும் தற்காத்துக்கொள்கிறார் நேசன்.

Leave a Reply