மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.
ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார்.
நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய் அவனது 3 வயதில் இறந்துவிட்டார் என்று தெரிந்ததுமே, தமிழ் சினிமா நாயகிகளின் இலக்கணத்தை அடியொட்டி அவரும் காதலில் விழுந்து விடுகிறார். இன்னும் எத்தனை நாளுக்கு தமிழ் சினிமாவில், இந்த செண்ட்டிமென்ட் நாயகனுக்கு காதல் மலர உதவுமெனத் தெரியவில்லை.
லஷ்மன் நாராயண்தான் படத்தின் போக்கை மாற்றி முக்கியமான விவாதத்துக்குள் இட்டுச் செல்கிறார். இவர் பாரதிராஜாவால், ‘அன்னக்கொடி’ படத்தில் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தேனி மாவாட்ட கிரிக்கெட் டீம் கேப்டனாகவும் இருந்தவராம். படத்தில் இவர் நேரடியாக முன் வைக்கும் கிரிக்கெட் தேர்வு அரசியல் ஒருபுறம் என்றாலும், “கிரிக்கெட்டுக்காக தான் என் அப்பா திருச்சியில் இருந்து சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தார்” என்று அவர் சொல்லும் வசனமும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சியிலுள்ள ஒரு நபரால் தமிழ்நாடு அணியில் இடம் பெற முடியாது என்பதும் படம் முன் வைக்கும் அரசியலைப் போன்றே துரதிர்ஷ்டவசமானதே!
சுசீந்திரனின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி இருந்தாலும் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவவில்லை. ஆனால், “ஒரு நல்ல டீமுக்கு என்னத் தெரியுமா அழகு? தனது கடைசி பேட்ஸ்மேனை விளையாட க்ரெளண்டுக்கு அனுப்பாம இருக்கிறது” என்ற வசனத்தில் மட்டும் திரையரங்கை கலகலக்க வைக்கிறார். மாரிமுத்து, சார்லி என படத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் சுசீந்திரன். படத்தின் பலம் வசனங்கள். அநாயாசமாக அரசியலையும், கதாபாத்திர மனநிலைகளையும் போகிறப் போக்கில் வசனங்கள் பிரதிபலிக்கிறது.