Shadow

டார்லிங் – II விமர்சனம்

Darling 2 vimarsanam

ஐந்து நண்பர்கள் ஒரு மாளிகையில் பேயிடம் சிக்கிக் கொள்வதால், ‘ஜின்’ எனப் பெயரிடப்பட்ட படம் ‘டார்லிங்-II’ ஆனது. படத்தை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியது தலைப்பு மாற்றதுக்கான பிரதான காரணம். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது.

ஒரு விளையாட்டுத்தனம் எப்படி விபரீதம் ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

‘காற்றில் ஒரு’ என்ற பாடலுடன் தொடங்குகிறது படம். அந்தப் பாடல், படத்தைப் பற்றிய முழுப் பிம்பத்தை அளிப்பதோடு, மனப்பிழற்வுக்கு உள்ளாகும் ஒரு இளம்பெண்ணுடைய குடும்பத்தின் மனநிலையையும், குறிப்பாக உடைந்து போகும் அவள் தந்தையின் நிலை குறித்தும் அழகாகப் பதிந்துள்ளது. பீட்சா படத்தில், ‘பீட்சா ஷாப்’ ஓனரான நரேனும் இதே போன்றதொரு பரிதவிப்பில்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

டார்லிங் படத்தில், பேயின் அட்டகாசத்திற்குப் பின் ஒரு வலுவான காரணம் முன் வைக்கப்பட்டது. படத்தை ஒரு கட்டத்தில், அதிக கலகலப்பாக்க கோஸ்ட் கோபால் வர்மாவாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் வருவார். ஆனால், இப்படம் சீரியஸான பேய்ப்படம் என்பதோடு, தனக்குத் துரோகமிழைக்கப்பட்டதென பேய் நம்பும் காரணம் விடலைத்தனமாக உள்ளது. பேயைக் கண்டு கதாபாத்திரங்களின் பயப்படும் பாவனைகளில் தான் முக்கால் வாசி படம் நகர்கிறது. அதுவும் அதெல்லாம் க்ளிஷேவான காரணங்களுக்கு என்பதால் பெரிதும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. வால்பாறை வரதனாக வரும் முனீஸ்காந்தும், ரஃபியாக வரும் காளி வெங்கட்டும் பரிதாபமாக வீணடிக்கப்பட்டுள்ளார்.

ஆங்காங்கே, சிற்சில நொடிகள் காட்டப்படும் அந்த மாளிகையின் வெளிப்புறமும், காடும், மலை முகடுகளும் அவ்வளவு ஈர்க்கிறது (வெளுத்து வாங்கும் வெயிலில் இருந்து தப்பித்து இப்படியொரு இடத்திற்கு ஓடி விட மாட்டாமோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது). இந்தப் படத்தின் நாயகர்கள் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும் ஒலிப்பதிவாளர் ரதனுமே.! ‘ஒளறவா ஒளறவா’ என்ற பாடல் துள்ள வைக்கிறது.

Darling Mayaசதிஷ் சந்திரசேகரின் கதை மேலோட்டமாகவும் வலுவாகவும் இல்லாதது பெருங்குறை. படம் அதன் தொழில்நுட்பச் செறிவையே பெரிதும் நம்பியுள்ளது. மனைவியிடம் செல் ஃபோனில் பேசிக் கொண்டே இருக்கும் அர்ஜூனனைத் தவிர, மற்ற பாத்திரங்களுக்குப் பிரத்தியேக குணவார்ப்புகள் தரப்படவில்லை. ஏன் நாயகர்களான கலையரசனும், ரமீஸும் கூட இதற்கு விதி விலக்கில்லை. ஆயிஷாவாக வரும் மாயா பாத்திரத்தை வேண்டுமெனில் விதி விலக்கில் சேர்த்துக் கொள்ளலாம். மெட்ராஸ் படத்தில் ‘ஜானி’யாகக் கலக்கியிருந்த ஹரி, பயமேற்பட்டால் சிப்ஸ் சாப்பிடும் பாலாஜி எனும் கதாபாத்திரத்தில் இப்படத்திலும் கவனிக்க வைக்கிறார்.

சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு எத்தகையதொரு விபரீதத்தில் முடியுமென்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.