Shadow

டெஸ்பிக்கபிள் மீ 1

Despicable Me 1 Review

(Despicable Me 1)

‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர்.

க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை ஊசியால் குத்தி மகிழ்வார். இதுதான் க்ரூ.

க்ரூவின் ஒரே லட்சியம், உலகின் ஈடியிணையற்ற வில்லன் எனப் பெயரெடுப்பதுதான். ஆனால், ‘வெக்டர்’ என்பவன் எகிப்தின் பெரிய பிரமிடான கிசாவைத் திருடி விடுகிறான். அதைக் காரணம் காட்டி, ‘எவில் வங்கி (Bank of Evil)’-இல் நமது நாயகரான க்ரூவுக்கு லோன் தர மறுக்கின்றனர். எனினும், எந்தப் பொருளையும் சுருங்கச் செய்யும் ‘ஷ்ரிங்க் ரே (Shrink Ray)’-வைக் கடத்திக் கொண்டு வந்தால் லோன் தர முன் வருகிறது வங்கி.

மினியன்ஸின் உதவியோடு ஷ்ரிங்க் ரேவைக் கடத்தி விடுகிறார் க்ரூ. மினியன்ஸ் என்பது சிறியதாய் மஞ்சள் நிறத்திலுள்ள உயிரினங்கள். ஆனால், க்ரூவிடமிருந்து வெக்டர் அதை அபகரித்துக் கொண்டு போய்விடுகிறான். க்ரூ எவ்வளவோ முயன்றும் வெக்டர் தன் கோட்டையில் வைத்திருக்கும் பொறிகளை மீறி, ஷ்ரிங்க் ரேவை வெக்டரிடமிருந்து மீட்க முடியவில்லை.

மினியன்ஸ்

அந்தச் சமயத்தில், பிஸ்கட் விற்கும் மூன்று அநாதை சிறுமிகளுக்காக வெக்டரின் கோட்டைக் கதவுகள் திறக்கின்றன. மார்கோ, எடித், ஆக்னெஸ் எனும் அம்மூன்று சிறுமிகளையும் தத்தெடுத்து, பிஸ்கட் ரோபோக்களைக் கொடுத்து வெக்டரின் கோட்டைக்கு அனுப்பி, ஷ்ரிங்க் ரேவை மீண்டும் அபகரித்துக் கொள்கிறார் க்ரூ.

வெறுக்கத்தக்க க்ரூவிடம் மாட்டிக் கொண்டு சிறுமிகள் என்ன பாடுபடுகின்றனர் என்றும், க்ரூ ஆசைப்பட்டபடி நிலவைத் திருடினாரா என்பதும்தான் படத்தின் முடிவு.

மொட்டை தலையும், நீண்ட மூக்கும் கொண்ட க்ரூவைத் தொடக்கத்தில் உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் போகப் போக அவரைப் பிடிக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவரிடம் வேலை செய்யும், புரியாத மொழி பேசும் மினியன்ஸின் சேட்டைகளே.! இவர்களுடன் காது கொஞ்சம் மந்தமாகிவிட்ட டாக்டர் நெஃபாரியோ என்றொரு ஜாலியான விஞ்ஞானி இருக்கிறார். அவர்தான் பிஸ்கட் ரோபாக்கள் போன்ற புது புது கருவிகளை க்ரூவுக்கு உருவாக்கித் தருபவர்.

மார்கோ, எடித், ஆக்னெஸ் ஆகியோரின் இரவு பிரார்த்தனைகள் மிக எளியவை. நன்றாக தூக்கம் வர வேண்டும்; தூங்கும்போது காதுக்குள் பூச்சிகள் எதுவும் புகக் கூடாது; தங்களைத் தத்தெடுக்க அருமையான பெற்றோர் வரவேண்டும் என்பதே அவை. பாசத்துக்கு ஏங்கும் அவர்களின் முகம் உங்களை வாட்டமுறச் செய்துவிடும். தத்தெடுக்கப்பட்ட பின், க்ரூ தங்களுக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்லித் தூங்க வைக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது போன்ற காட்சிகளாலும், வசனங்களாலும் படத்தை மிக நெருக்கமானதாய் உணர முடிகிறது. மேலும் நம்மைக் கலகலப்பாக வைத்திருக்க மினியன்ஸ் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன.

2010 இல் வந்த இப்படம், அவ்வருடம் அதிகம் வசூலான 10 படங்களுள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது.