Search

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்

The secret life of pets vimarsanam

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்று யோசித்ததுண்டா? அதுதான் இப்படத்தின் கதை.

தன்னை வளர்க்கும் கேட்டி மீது மேக்ஸ் எனும் டெர்ரியர் வகை நாய்க்கு மிகுந்த அன்பு. கேட்டி வெளியில் செல்லவே விடாமல் அட்டகாசம் செய்யும் மேக்ஸ். இப்படி நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில், ட்யூக் எனும் பெரிய நாயை வீட்டிற்குக் கொண்டு வருகிறாள் கேட்டி. தனக்கும் கேட்டிக்கும் இடையில் ஒன்றை மேக்ஸால் ஏற்றுக் கொள்ளவே முடியலை. ட்யூக்கை எப்படியாவது விரட்டப் பார்க்கிறது. ட்யூக்கிற்கு அது தெரிந்து விடுகிறது.

பூங்காவிற்கு வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, மேக்ஸை பூங்காவை விட்டு வெளியில் அழைத்துச் சென்று விடுகிறது ட்யூக். முதலில், இருவரும் பெரும் பூனைப் படையிடம் சிக்கிக் கொள்கின்றனர்; அடுத்து, ‘அனிமல் கன்ட்ரோல்’ அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறார்கள்; பின், பிராணிகளை வளர்க்கிறேன் எனக் கொடுமைப்படுத்தும் மனித இனத்தைக் கொல்லும் லட்சியத்துடன் இருக்கும் ‘கைவிடப்பட்ட பிராணிகள் குழு’விடம் சிக்கிக் கொள்கின்றனர். மேக்ஸூம் ட்யூக்கும் மீண்டும் வீடு திரும்பினார்களா? அவர்களுக்கிடையே நிலவிய பகை என்னானது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

செல்லப் பிராணிகள் அதன் உரிமையாளர்களைப் பார்த்தவுடன் போடும் குதியாட்டத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியைப் படம் நெடுகே நீங்கள் உணரலாம். பாம்பு, முதலை, குருவி, பருந்து, பூனை, நாய், ஆமை, எலி, பன்னி, பச்சோந்தி என படத்தில் வரும் செல்லப் பிராணிகளின் பட்டியல் மிக நீளம்.

கிட்ஜெட் எனும் பொமரேனியன் வகை நாய்க்கு மேக்ஸ் மீது ஒரு தலைக் காதல். மேக்ஸ் காணாமல் போனதை அறிந்ததும், மற்ற செல்லப் பிராணிகளை ஒருங்கிணைப்பதோடு, விலங்கிட்டு கூண்டில் அடைப்பட்டிருக்கும் டைபீரியஸ் எனும் பருந்தை நட்பாக்கிக் கொள்கிறது கிட்ஜெட். அப்பொழுது டைபீரியஸ்க்கு வரும் கனவு செமயாக இருக்கிறது. அலட்சியமாகப் பேசும் ஓசோனிடம், கிட்ஜெட் தன் காதலுக்காகப் பொங்கி எழும்போது திரையரங்கம் அதிர்கிறது. ஃப்ரிட்ஜைத் திறந்து விட்டு, நாக்கை கன்ட்ரோல் செய்ய பூனை படும்பாட்டினை அற்புதமாக அனிமேட் செய்து சிரிக்க வைக்கின்றனர். குள்ள நாயொன்று கிச்சனுக்குள் சென்று, மாவு கடையும் மெஷினில் மசாஜ் செய்து கொள்ளும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி பயங்கரமாக எழுகிறது.

படத்தில் இன்னொரு சுவாரசியமான பாத்திரம் வருகிறது. ‘ஸ்னோ பால்’ என்ற பெயர் கொண்ட முயல். மனிதர்கள் அழிக்க நினைக்கும் குழுவின் தலைவர். எல்லாம் சுபமாக முடிந்து, தன் இருப்பிடத்திற்குத் திரும்பும் பொழுது ஒரு சிறுமியிடம் சிக்கிக் கொள்கிறது ஸ்னோ பால். அப்பொழுது, லட்சய வெறி கொண்ட முயல் காட்டும் முக பாவனைகள் அபாரம். 3டி அனுபவமும் பக்காவாக உள்ளது. மேக்ஸை விழுங்க நினைக்கும் பாம்பின் நாக்கு உங்களைத் தீண்டுகிறது.

‘இல்லுமினேஷ்ன் என்டர்டெயின்மென்ட்’ தயாரித்திருக்கும் இப்படத்தின் நீளம் 87 நிமிடங்கள்தான். ஓரே ஓர் இழுவையான காட்சிகள் கூட இல்லாமல் கச்சிதமாகத் தொகுத்துள்ளனர். படம் தொடங்கும் முன், தங்கள் நிறுவனத்தின் குறும்படம் ஒன்றைத் திரையிடுகின்றனர். அது மினியன்ஸ் கலக்கும், ‘மோவர் மினியன்ஸ்’ எனும் நான்கு நிமிட குறும்படம். மினியன்ஸ், புல் வெட்டுகிறேன் பேர்வழிகள் என தோட்டத்தை ஒருவழியாக்கி, வழக்கம் போல் அதகளம் செய்கின்றனர்.

Minions Mower vimarsanam

இரட்டைக் கொண்டாட்டங்களுக்கு உத்திரவாதமளித்துள்ளனர் இல்லுமினேஷன் என்டர்டெயின்மென்ட்.