Search
The-Walk-fi

தி வாக் விமர்சனம்

The Walk Tamil Review

சில அடி உயரத்தில், இரண்டு கம்பங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மேல் நடப்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவாக, கழைக்கூத்து அல்லது சர்க்கஸ் வித்தை என்போம்.

இல்லவே இல்லை..

அது ஒரு கலை’ என்கிறார் பிலிப்.

அந்தக் கலைஞன், தன் 24வது வயதில் செய்த மயிர்க்கூச்செறியும் சாகசம்தான் ‘தி வாக்’ திரைப்படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிக அற்புதமான படம்.

இயக்குநர் ராபர்ட் ஜெமெக்கிஸ் மிரட்டியுள்ளார். பிலிப்பாக நடித்துள்ள ஜோசஃப் கோர்டான்-லெவிட்டின் அறிமுகமே அமர்க்களம். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் உச்சியில் நின்று கொண்டு, நியூ யார்க்கிலுள்ள இரட்டைக் கோபுரங்களை ஆர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டே தன் லட்சியத்தையும் அதை எப்படி அடைந்தேன் என்றும் சொல்ல ஆரம்பிக்கிறார். இரட்டைக் கோபுரங்களை கயிற்றால் இணைத்துவிட்டு, அதில் நடக்க வேண்டுமென்பது அவர் கனவாகிறது. அந்தக் கனவும் நல்லபடியாக நனவாகி விடுகிறது. சாதித்த பின் திரும்பிப் பார்க்கிறார். 140 அடி தொலைவில் இருக்கும் கோபுரம் தன்னை அழைக்கிறதென என மீண்டும் வந்த வழியாகவே கயிற்றில் நடக்கிறார். லட்சியத்தை அடைந்து விட்ட பின், அவர் செய்யும் அதகளத்தை (செம மாஸ்) விவரிக்க வார்த்தைகளே இல்லை. அந்தக் கயிறோ, 1350 அடி உயரத்தில் இரண்டு கோபுரங்களுக்கும் இடையில் அந்தரத்தில் மிதக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் நமது மனம்தான் பதைபதைத்து விடுகிறது. நம்பினால் நம்புங்கள், பிலிப் சுமார் 45 நிமிடங்கள் கயிறின் மீது சாகசம் புரிந்துள்ளார். அது எத்தகைய முட்டாள்த்தனமான, மிகவும் ஆபத்தான சாகசம் என்பதை அறிய நீங்கள் படம் பார்த்தே ஆகவேண்டும்.

இரட்டைக் கோபுரத்தின் உயரம்: 1350 அடி
அவர் கடந்த தூரம்: 140 அடி
கையிலிருந்த கழியின் எடை: சுமார் 25 கிலோ

இதை, உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. ஆனால் இயக்குநர் அதை 3டி-இல் அழகாக நம் கண் முன் கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு ஃப்ரேமையும் தொழில்நுட்பத்தால் மிரட்டியுள்ளனர். பிலிப் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, அவர் கையில் இருக்கும் கழி நழுவி நேராக நம் தலையிலேயே விழுகிறது.

1973 ஆம் ஆண்டு பிரான்ஸும், 1974 ஆம் ஆண்டு நியூ யார்க்கையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக, 15 வருடங்களுக்கு முன் தாலிபான் தாக்குதலில் சிதைக்கப்பட்ட ட்வின் டவர்ஸ் கட்டுப்பட்டுக் கொண்டிருந்த காலத்துக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.

Joseph Gordon-Levitt & Philippe Petitபடம் பார்த்து முடித்ததும், பிலிப்பாக நடித்துள்ள ஜோசஃப் கோர்டான்-லெவிட், உங்கள் அபிமான நடிகராக மாறி விடுவார். இதில் அதி சுவாரசியமான விஷயமெனில், கோர்டான்-லெவிட் உண்மையான பிலிப்பிடமே கயிற்றில் நடக்க பயிற்சி எடுத்துள்ளதுதான். பிலிப்க்கு பயிற்சி அளிக்கும் பாப்பா ரூடியாக, காந்தி படப் புகழ் பென் கிங்ஸ்லி நடித்துள்ளார். அவரிடம் கயிற்றைக் கட்டும் ரகசியத்தை பிலிப் கற்றுக் கொள்ளும் இடங்கள் எல்லாம் சுவாரசியமாக உள்ளது. சாத்தியமே இல்லாத ஓர் இலக்கை நிர்ணயித்து, அதற்காக பிலிப்பும் அவரது நண்பர்களும் போடும் பக்காவான திட்டம் உண்மையிலேயே ஆச்சரியம் வர வைக்கிறது. உண்மையில் பிலிப் முன்னிருந்த சவால் அவ்வளவு உயரத்தில் கயிற்றின் மீது நடப்பதல்ல; எப்படி 200 கிலோ எடையுள்ள உலோகக் கயிற்றை திருட்டுத்தனமாக கோபுர உச்சிக்குக் கொண்டு செல்வது என்பதும், பின் அதை எவ்வாறு எதிரிலுள்ள கோபுரத்துடன் இணைப்பது என்பதும்தான். எப்படி அதைச் சாதித்துள்ளார்கள் என அறிந்து கொள்ள நீங்கள் படம் பார்த்தே ஆகவேண்டும். 😉

இறுதியாக சில வார்த்தைகள். இதுவரை நிலவில் 12 பேர் நடந்துள்ளனர். ஆனால், இரட்டைக் கோபுரங்களுக்கிடையே நடந்த ஒரே மனிதர் பிலிப் பெட்டிட் மட்டுமே.! அவரைக் கெளரவப்படுத்தவே ‘தி வாக்’ படம்.

Philippe Petit

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
One thought on “தி வாக் விமர்சனம்

Comments are closed.