ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால்,
- உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் பற்றிய புரிதல் உங்களுக்கும் அவசியம்.
- குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளை சாதாரணப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும் தெரபிஸ்ட்களும் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல்லும் காரணம், ‘தங்கள் பிள்ளைகளுக்கு ஏதாவது வந்துவிடுமோ?’ என்று மற்ற பெற்றோர் பயப்படுவதாகச் சொல்கிறது. இக்குழந்தைகளின் சார்பில் நீங்களும் வாதிட, ஆட்டிசம் பற்றிய புரிதல் உங்களுக்கு அவசியம்.
குழந்தைகள் அசைவுகளுக்கு சுலபமாகக் கவரப்படும். தரையில் படுக்க வைத்திருக்கும் பொழுது குழந்தைகள் மின் விசிறி சுற்றுவதையும், தொட்டிலில் இருக்கும் பொழுது கிளிச்சட்டத்தையும், கையில் தூக்கும் பொழுது அசையும் நம் கண்களையும் பார்ப்பார்கள். அப்படிக் குழந்தைகளின் கண் பார்வை (eye contact), நம் கண்களை நோக்கவில்லையெனில்.. அதாவது அசையும் பொருளின் மீது படாவிட்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருக்கக்கூடும். இதுதான் அடிப்படை. ஆனால் பேரன் பேத்திகள் எடுத்துவிட்ட பாட்டிமார்களால்கூட, இத்தகைய குழந்தைகளிடம் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சூழல்தான் இங்கு நிலுவுகிறது. அப்படியே கண்டுபிடித்தாலும், ஆட்டிசம் ஒரு நோயல்ல.. குறைபாடே என்ற தெளிவு இங்கே இல்லை.
ஆக, அனைவரும் ஆட்டிசம் பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்ற நல்லெண்ணத்தில், தனது வலைப்பதிவில், ‘குழந்தைகளைப் பாதிக்கும் ஆட்டிசம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளைத் தொகுத்துள்ளார் பாலபாரதி. ஆனால் அவரின் இந்த முயற்சியும், தேடிச் செல்பவர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆக, ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிக மக்களைச் சென்றடைய புனைவிலக்கியம் உதவுமென முடிவுக்கு வருகிறார் பாலபாரதி.
அமெரிக்காவில் ஆட்டிச நிலையாளச் சிறுவன் ஒருவன் காணாமல் போகிறான். அவனை 3 நாட்களுக்குப் பின், வசிப்பிடத்திலிருந்து 64 கி.மீ. தூரத்தில் கண்டுபிடித்ததையும், அப்படிக் கண்டுபிடிக்க அவர்கள் அடைந்த சிரமத்தைப் பற்றியும் ஒரு செய்திக்குறிப்பில் படிக்கிறார். தனக்குப் பசித்தால்கூட சொல்லத் தெரியாத ஒரு சிறுவன் காணாமல் போனால், இந்தச் சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்ற எண்ணமே, ‘துலக்கம்’ என்ற கதை தோன்றக் காரணமென்கிறார் பாலபாரதி.
துலக்கம் – தெளிவு, பொலிவு, ஒளிர்வு, பிரகாசம்
மீண்டும் தொடக்கப்புள்ளிக்கே வருகிறார். ஆட்டிசம் பற்றிய தெளிவுபடுத்தல்தான் அவரது நோக்கம் என தலைப்பிலேயே தெரிகிறது. சொல்ல வந்ததை நேராகச் சொல்லாமல்.. புனைவு, இலக்கியம் என பூசி மெழுகியிருப்பாரோ என்றோர் எண்ணம் இழையோடியது. ஆனால், ‘துலக்கம்’ பதற்றம் கொள்ள வைக்கும் விறுவிறுப்பான கதையாக உள்ளது. நல்லவேளை 118 பக்கங்கள்தான். சுபமான முடிவுதானென தொடக்கத்திலேயே யூகிக்க முடிந்தாலும், போலீஸ்காரர்கள் அஸ்வினை நையப்புடைக்கும் பொழுது புத்தகத்தை மூடத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நல்லவர்கள், காவல்துறையினர் உட்பட. கதையின் போக்கால் நமக்கு ஏற்படும் பதற்றம், கதையின் முடிவில் நல்லவரான இன்ஸ்பெக்டர் முருகனுக்கு ஏற்படுவதுதான் அதிசுவாரசியம்.
பெருமளவு மக்களிடம் ஆட்டிசம் என்ற வார்த்தையைக் கொண்டு சென்ற படமான “ஹரிதாஸ்” பற்றி நினைவுகூரலாம். நாயகன் தனக்கிருந்த குறைபாடுகளில் இருந்து மீண்டு, கின்னஸ் சாதனை புரிகிறான் என நேர்மறையாக முடியும் படம்தான். எனினும் திரைப்படங்களுக்கே உரிய நீக்குப்போக்குகளுக்கு உட்பட்டுப் பயணிக்கும். ஆனால் துலக்கம் தனது நோக்கத்திலிருந்து துளியும் விலகாமல் விறுவிறுப்பாகப் பயணிக்கிறது. விகடன் பிரசுரமாக இப்புத்தகம் வந்திருப்பது கூடுதல் சிறப்பு. இரண்டு, மூன்று இடங்களில் நிறுத்தற்குறிகள் விடுபட்டுள்ளது. அதைத் தவிர்த்து, அட்டை வடிவமைப்பு, அத்தியாயங்களின் இடையில் வரும் ஓவியங்கள் என புத்தகம் மிக நிறைவாக உள்ளது. விலையும் 85/- என்பது ஆறுதலான விஷயம்.
துறை சார்ந்த புனைவிலக்கியங்களுக்கான தேவை பற்றிய புரிதலையும் அவசியத்தையும் ‘துலக்கம்’ குறுநாவல் ஏற்படுத்துகிறது. அவ்வகையில் துலக்கம், தமிழின் மிக மிக முக்கியமானதொரு நூல். ஆனால் அனைவராலும் இப்படி கத்தி மேல் லாவகமாக நடந்து விட முடியுமா எனத் தெரியவில்லை. தொடர் வாசிப்பும், பதினைந்து ஆண்டு கால பத்திரிகை அனுபவமும், ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற உள்ளார்ந்த அக்கறையும் தீவிரமும்தான் துலக்கத்தின் எளிமைக்கும் கச்சிதத்திற்குமான காரணம். தமிழகத்தில் ஆட்டிசம் பற்றிய தெளிவிற்கான தொடக்கப்புள்ளியாக ‘துலக்கம்’ இருக்குமென்பது திண்ணம்.
– தினேஷ் ராம்