Shadow

நபி வழியை மறந்த முஸ்லிம்கள்

    இதுவரை உலகின் பல பாகங்களிலும் அறிஞர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள் அப்படித்தோன்றிய அறிஞர்கள் அனைவருமே தங்களது எண்ணங்கள் செயல் வடிவம் பெற கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். அப்படி உருவாக்கப்பட்ட கொள்கைகள் உருவாக்கிய அறிஞர்கள் வாழும் காலத்திலேயே நடைமுறைக்கு வந்து இருக்கிறதா என்று பார்க்கும்போது சிலருடைய  கொள்கைகள் அவர்கள் காலத்திற்கு பின்பு நடைமுறைக்கு வந்துள்ளது. பலருடைய கொள்கைகள் காலங்கள் எத்தனை ஆனாலும் நடைமுறைக்கு வராமலேயே புத்தக வடிவில் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு கொள்கையை உருவாக்கி அதை நடைமுறைக்கு கொண்டு வந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்திப்பார்த்த பெருமை முகமது நபி அவர்களையே சாரும். தனது கொள்கைபடி தாம் வாழ்வது மட்டுமின்றி தனது சமூகத்தையே திருத்தி வாழ வைப்பது என்பது பெரும் சாதனை ஆகும். அந்த சாதனையைப்பல்வேறு சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக செயல்பட முனைப்பு காட்டிய நபிகள் நாயகத்தின் நெஞ்சுரமும், விடாமுயற்சியும், அறிவுக் கூர்மையும் இன்றைய மனிதனுக்கு அவசியம் தேவை.

    இந்த உலகத்திற்கு எப்போதுமே ஒரு சாபக்கேடு உண்டு நன்மை தரக்கூடியவற்றை பின்னுக்குத்தள்ளி மற்றவற்றை முன்னோக்கி எடுத்துச்செல்வதே அந்த சாபத்தின் விளைவுகள் ஆகும். இந்த விளைவுகளுக்கு முகமது நபியின் சிந்தனைகளும் ஆட்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கும் சம்பவங்களாகும். நபி அவர்களின் உயரிய சிந்தனைகளும், நல் உபதேசங்களும் வெளிச்சத்திற்கு வராமல் மறைத்துக்கொண்டு உணர்ச்சிபூர்வமான சில விஷயங்களை மட்டுமே முன்னிறுத்தி இதுதான் நபியின் உண்மைத் தோற்றம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு வருவது பெரும் துயரமாகும். இந்த துயரமான பிரகடனத்தையே நபி வழி நடப்பதாகச்சொல்லிக் கொள்பவரே செய்வது வேதனையிலும் வேதனை ஆகும். அறத்தை மட்டுமே பேசிய நபிமொழிகள் ஆயுத  வண்டிகளில் எடுத்துச் சொல்லப்படுவது காலம் காலமாக நடந்து வருவதுதான் உலகச் சிக்கல்களின்  ஊற்றுக் கண்ணாக இருக்கிறது.

     இப்படியொரு கருத்தை யோகி ஸ்ரீ ராமானந்த குரு என்னிடம் சொல்லியபோது நபி மார்க்கத்தை பற்றி அறிந்துகொள்ள ஆவல் ஏற்பட்டு அவரிடமே நபிகளின் போதனைகளைப் பற்றி விரிவாகச்சொல்லுமாறு கேட்டேன்.

    குருஜி: நபிகள் நாயகம் நிலையானது எது?  நிலையற்றது எது?  என்பதை மிக நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அதனால்தான் அவர் உலக பொருட்கள் எவையும் நான் வேண்டவில்லை. நன்மை தீமைகள் விஷயத்தில் மனித சமூகத்திற்கு எச்சரிக்கை செய்யக்கூடிய அல்லாவின் தூதனாகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். கடவுளின் செய்தியை மட்டும்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இதனை ஏற்றுக்கொண்டால் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்  நன்மை அடைவீர்கள் என்கிறார். அதாவது இந்த உலகத்தில் நமது தேவைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், சௌகரியத்திற்காகவும் பல பொருட்களை நாம் தேடி அலைகிறோம்  அவைகளை கடும் முயற்சிக்குப்பின் கைவரப்பெற்று சேமித்தும் வைக்கிறோம். இந்த பொருட்களெல்லாம் நமது அந்தஸ்தையும், சந்தோஷத்தையும் உறுதிபடுத்தும் என நம்புகிறோம். ஆனால் உண்மையில் நமது சந்தோஷமும், பாதுகாப்பும் இந்த பொருட்களில் இல்லை. உண்மையில் இந்த பொருட்களால் அவற்றை நமக்கு தரவும் இயலாது. ஒரு கால கட்டத்திற்கு மேல் அவைகளால் நமக்கு வீண் சுமைகளும், கவலைகளுமே ஏற்படும் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும் பொருட்கள் நமது வாழ்க்கைக்குப்பின்னரும் நம்மோடு தொடர்ந்து வரும் அறச் செயல்களே ஆகும். இறை தர்மத்தையும் மனித தர்மத்தையும் இடையறாது செய்து கொண்டு வருவதே உண்மையான நிலையான பொருளை சம்பாதிப்பது  ஆகும். 

    முகமது நபியின் இதே கருத்தைதான் அவருக்கு முன் வாழ்ந்த ஏசு கிறிஸ்து பரலோக ராஜ்ஜியத்திற்காக நன்மைகளை தேடுங்கள் என்றார் முகமது நபி அதே கருத்தை வேறு வார்த்தையில் சொன்னார் இது மட்டுமல்ல எல்லா தரப்பு மக்களுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய உண்மைகளை நபிகள் நாயகம் போதித்து இருக்கிறார். செல்வத்தை அடைதல், அடைந்ததை பாதுகாத்தல், பாதுகாத்ததை பகிர்ந்தளித்தல் ஆகியவைகளை பற்றியெல்லாம் நபிகள் நாயகம் எளிமையாக தெளிவாக விளக்குகிறார்.

   செல்வம் புறக்கணிக்கப்படவேண்டிய விஷயம் அல்ல. இயற்கைச்செல்வங்கள் கடவுள் அருளிய பாக்கியங்கள் என்று கூறி ஏழை எளியோர்களுக்கு உதவுவதற்காக அல்லா உங்களுக்கு அருளி இருக்கிற செல்வத்தை விட்டுவிடவேண்டாம். உங்கள் செல்வத்தினால் கிடைக்கும் ஊதியத்தைக்கொண்டு ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள் என்று கட்டளை இடுகிறார். தனது மார்க்கத்தின்படி நடக்கும் மக்கள் அனைவரும்  தனது வருவாயில் ஒரு பகுதியே வறியவர்களுக்கு உதவிட வழங்கியே ஆகவேண்டும் அப்படி வழங்காவிட்டால் அது இறைவனுக்கு எதிரான செயலாகும். என்று எச்சரிக்கிறார். இதற்கு ஆதாரமாக திருக்குரானில் அல்பஹரா என்ற இரண்டாவது அத்தியாயத்தில் 195-வது சுறாவில் அல்லாவினுடைய வழியில் செலவு செய்யுங்கள், மேலும் உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவை தேடிக்கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லா முஸ்லீம்களை நேசிக்கிறார் என்று இறைவன் தன் மூலமாக கட்டளையிட்டதாகக் கூறுகிறார். இதனாலேயே முஸ்லீம் மதத்தில் ஜகாத் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   

   ஜகாத் என்ற தர்ம வழியால் பெறுபவன் மட்டுமல்ல கொடுப்பவனே அதிகமான நன்மையை அடைகிறான் என்று இதே அத்தியாயத்தில் வலியுறுத்தி சொல்லப்படுகிறது. ஜகாத் என்ற ஈகையால் இறைவன் உவப்பை பெற்று மனிதர்களுக்கு நிறைவான கூலியை தருவதாகக்கூறப்பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் சதாசர்வகாலமும் செல்வத்தைத்தேடுவதே குறியாகக் கொண்டு அதாவது அந்த செல்வத்தினால் நன்மைதான் செய்யவேண்டும் என்ற உறுதியான நோக்கம் இருந்தால்கூட தொடர்ச்சியாக அதே வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாகாது என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நேரத்தில் அல்லாவை தொழ உங்கள் அலுவல்களை விட்டு செல்லுங்கள் உங்கள் செல்வமோ உங்கள் குழந்தைகளோ நீங்கள் அல்லாவை நினைப்பதை தடுக்கும்படி நேரக்கூடாது என்று கூறுகிறார்.

இங்கு ஒரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் ஒன்று மறைபொருளாக கூறப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். ஆலயம் சென்று ஆண்டவனை வழிபட நாம் துவங்கும்போது நமது மனக்குகைக்குள் ஆயிரம் பேய்கள் ஆட்டம்போட துவங்கும் அதுவரை மறந்துபோய் இருந்த பல்வேறு விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக்கிளம்பி ஆலா வட்டம் போடும் ஆர்ப்பரித்து எழும் ஆசை மோகினிகளின் லாவண்ய மயக்கத்தில் ஆண்டவனைத்தொழுவதை மறந்து  காற்றடிக்கும் திசையில் செல்லும் காற்றாடி போல் நமது கதை ஆகிவிடும். இதை நன்கு உணர்ந்த நபிகள் நாயகம் இறைவனுக்கென்று ஒரு பொழுதை கட்டாயமாக ஒதுக்கிவிடு அதில் வேறு எதையும் தலைகாட்டாமல் பார்த்துக்கொள் என்கிறார். அளவுக்கு அதிகமான சுதந்திரம் மனிதனை அசடனாக மட்டுமல்லாது, உபயோக மற்றவனாகவும் ஆக்கிவிடும். எனவேதான் குதிரைக்கு கடிவாளம் மாட்டுவதை போல் மனிதர்களை சில விஷயங்களில் சுதந்திரமாக அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒரு நெறிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அன்றாட வாழ்க்கை விஷயத்தில் கட்டுப்பாடற்று அவனிருந்தாலும் இறைவழிபாடு என்று வரும்போது கட்டுக்குள் அடங்கி நடந்தால்தான் மனிதன் மனதிற்குள் உற்பத்தியாகும் ஒழுங்கீனங்களெல்லாம் மறைந்து நெறியாளன் ஆவான் என்பதற்காகவே நபிகள் நாயகம் ஒவ்வொரு முஷல்மானையும் தொழுகையில் ஈடுபட்டே ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்.

    கேள்வி: அறத்தை வலியுறுத்துதல், தானத்தை வலியுறுத்துதல் என்பதெல்லாம் நல்ல விஷயங்கள்தான் ஆனால் கடவுளைத் தொழுவதையும் கட்டாயபடுத்தவேண்டுமா?  இறைவழிபாடு என்பது யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாக கனிந்து நடக்கவேண்டும் அப்படி நடந்தால்தான் இறைவனோடு மனிதன் லயிக்க முடியும். அதற்கு மாறாக கட்டாயப்படுத்தும்போது வழிபாடு என்பது ஒரு வேலையாகத்தான் கருதப்படுமே தவிர ஆத்மாவை சுத்திகரிப்பதாக அமையாதே?

 

  குருஜி: நீ கூறுவது ஒரு விதத்தில் சரிதான் ஆனால் முகமது நபி வாழ்ந்த காலமும் அப்போது அரபு மக்களின் மனோபாவமும் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொண்டால் நபி மொழியின் அர்த்தம் புரியும், பொதுவாகவே வறண்ட பாலைவனங்களில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்வதற்கு கடுமையாகப்போராட வேண்டியிருக்கும். போராட்டமே வாழ்க்கையாகி போன அந்த மக்களிடம் முரட்டுத்தனமும், மூர்க்ககுணமும் மேலோங்கி இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. முரட்டு வழியிலேயே பழகிப்போன மக்களை அன்பால் வழிக்கு கொண்டுவருவது ஆரம்பத்தில் ஆகாத காரியம் ஆகும். எனவேதான் அவர்களிடம் வேண்டுகோளை வைப்பதை விடுத்து கட்டளைகளை பிறப்பித்து வழிபாட்டை கட்டாயப்படுத்தினார். குழந்தையானது ஆரம்பத்தில் விளையாட்டில் செலுத்துகின்ற ஆர்வத்தை படிப்பில் செலுத்தாது, கல்வியில் கவனம் செலுத்த குழந்தைகளை ஆரம்பகாலத்தில் வெறுமனே கொஞ்சிக்கொண்டு இருந்தால் மட்டும் போதாது. அவ்வப்போது கண்டிக்கவும் வேண்டும் அப்படி கண்டிப்புடன் போதிக்கப்படும் குழந்தைகள் நாளாவட்டத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிப்பில் ஆர்வம் செலுத்தி  மிகப்பெரும் அறிவாளிகளாக ஆகிவிடுவார்கள். அதே போன்றுதான் முரட்டுத்தனமான ஜனங்களை கட்டாயபடுத்தி வழிபடசெய்யவவேண்டும். காலம் செல்ல செல்ல இறை ஆனந்தம் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்பட்டு சுயமாகவே இயல்பாகவே வழிபாட்டைச்செய்ய ஆரம்பித்து விடுவார்கள், எனவே முகமது நபி தொழுகையைக் கட்டாயப்படுத்தியது அன்றைய சூழலில் எந்த தவறும் இல்லை அவர் அப்படிக் கட்டாயப்படுத்தாமல் சுதந்திரமாக விட்டிருந்தால் இன்றைய அரபு மக்களிடம் காணப்படும் பண்பாட்டு கூறுகள் இல்லாமலே போயிருக்கும்.

கேள்வி: உங்களின் இந்த பதிலில் மையக்கருத்து வற்புறுத்தியேனும் வழிபாட்டில் மனிதனை ஈடுபடுத்தினால் அவன் பண்புடையவனாக நாளாவட்டத்தில் மாறிவிடுவான் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லும் கருத்தை நடைமுறையில் இஸ்லாம் மக்களின் வாழ்க்கையோடு  இணைத்துப்பார்க்கின்றபோது எதிரிடையான கூறுகள் பலவே தென்படுகிறது. அதற்கு என்ன காரணம்?

  

  குருஜி: நீ என்ன கேட்க வருகிறாய் என்பது நன்கு புரிகிறது நபிகளின் இந்த பண்பாட்டுப் பாசறை நடைமுறைக்கு சாத்தியமானதாக இருந்தால் தைமூர், செங்கிஸ்கான், பாபர், ஒளரங்கசீப் போன்ற கொடுங்கோல் மன்னர்கள் எப்படி இஸ்லாமியர்களாகவும், நபி வழியில்  நடப்பவர்களாகவும்  இருந்தார்கள் என்பதுதானே உனது கேள்வி?   ஒன்றை நன்றாகப் புரிந்துகொள், இந்த மன்னர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாக இருந்தார்களே தவிர இஸ்லாமியத்திற்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாமியத்தை பற்றி இவர்கள் எல்லோரும் பேசினார்களே தவிர அதன் வழியில் இவர்கள் நடக்கவே இல்லை இது இஸ்லாமியத்தின் குற்றம் ஆகாது எந்த இடத்திலும்  குரானோ, முகமது நபியோ பலாத்காரத்தை பெருமைபடுத்தி பேசியது கிடையாது. நபிகள் நாயகம் கூட பல போர்க்களில் ஈடுபட்டிருந்தார் அப்போது கூட அவர் போர்களத்தில் கடைபிடிக்க வேண்டிய தர்மத்தின்படி நடந்தாரே தவிர அதற்கு மாறாக பலாத்காரத்தையோ கொடுங்கோன்மையிலோ ஈடுபட்டதாக எந்த ஆதாரமும் இல்லை மாற்று மதத்தினரை மாற்று இன மக்களைத்துன்புறுத்த வேண்டுமென்று நபிகள் நாயகம் எப்போதும் சொன்னது கிடையாது, அவருக்கு பின் வந்த கலீபாக்கள் சிலர் அப்படி நடந்து கொண்டதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது,

     இதற்கு ஆதாரமாக திருக்குரானில் 5-வது அத்தியாயம் அல்மாயிதாவில் 7-வது சுறாவில் எந்த ஒரு  கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிரளச் செய்துவிடக்கூடாது என்பதிலிருந்தும் 8-வது அத்தியாயம் 72-வது சுறாவில் ஒரு முஸ்லீம் அல்லாத அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த அரசின் கீழ் வாழும் முஸ்லீம்களுக்கு அரசை தவிர்த்து அதாவது அரசாங்கத்தை மீறி நேரடியாக உதவி அளித்திடக்கூடாது என்று சொல்லப் பட்டிருப்பது அல்லாமல் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருப்போர் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கிறார்கள் எனவே நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் பூமியில் பெரும் குழப்பமும், சீர்குலைவும் ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கை விடவும் பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கையை இஸ்லாமியர்களில் சிலர் மீறிவிட்டதனாலும் நபிகளின் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொண்டதாலுமே இஸ்லாமிய வரலாற்றில் சிலபக்கங்கள் ரத்தக்கறை படிந்ததாக இருக்கிறது.

கேள்வி: இன்றைய சூழலில் உலகம் முழுமையும் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் ஜிகாத் அதாவது புனிதப்போர் என்பது பற்றி அதிகமாக பேசப்படுகிறது. ஜிகாத் என்றால் முஸ்லீம் அல்லாதவர்களிடம் தொடுக்கும் போரா அல்லது இதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா?

குருஜி: ஜிகாத் என்பதற்கு இறைநம்பிக்கை கொண்டவர்கள் சைத்தானின் தோழர்களுக்கு எதிராக அல்லாவின் வழியில் போர் புரிதல் என்று குரான் விளக்கம் தருகிறது.  சைத்தானின் தோழர்கள் என்றால் அவர்கள் யார் மாற்று மதத்தினரா? மாற்று இனத்தவரா? என்ற ஒரு கேள்வி நமக்கு எழும் இதற்கான பதிலை குரானே தருகிறது.  இறை நம்பிக்கை உடையவர்கள் என்று ஒரு பகுதியினரையும், சைத்தானின் தோழர்கள் என்று ஒரு பகுதியினரையும் இரு கூறுகளாக மனித சமுதாயத்தை குரான் பிரித்துக்காட்டுகிறது. 

இறை நம்பிக்கை அற்றவர்கள் அதாவது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று ஒழுக்கங்களை கடைபிடிக்காமல் சமுதாயக்கேடுகள் அனைத்திற்கும் ஊக்கம் அளிப்பவர்களாக திகழ்பவர்களை இஸ்லாம் சைத்தானின் தோழர்கள் என்று குறிப்பிடுகிறது.  ஒழுங்கீனத்திலும் அறியாமையிலும் கிடக்கும் இப்படிப்பட்ட மனித ஆத்மாக்களை நல்வழிபடுத்துவதே ஜிகாத் அல்லது புனிதப்போர் ஆகும்.

இதை இப்படிப்புரிந்து  கொள்ளாமல் இஸ்லாமியர்கள் அல்லாத அனைவருமே பிசாசுகளின் குழந்தைகள் அவர்களை ஒழித்துக்கட்டுவதே ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை ஆகும்.  அதுவே ஜிகாத் என்ற புனித போராகும் என்று ஒரு கருத்தை இஸ்லாம் மக்களிடம் நாடுபிடிக்கும் ஆசை கொண்ட அக்கால அரசியல்வாதிகள் பரப்பிவிட்டிருக்கிறார்கள்.

நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே விரைவில் பரவி மக்களின் மனதில் ஆழப்பதிந்து விடும்.  அந்த மாதிரி ஏற்பட்டதுதான் ஜிகாத்திற்கான அனர்த்தன வியாக்யானம் ஆகும்.  இந்த கருத்தை தங்களுக்குச்சாதகமாக எடுத்துக்கொண்டு சில சுயநலக்கூட்டத்தார் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கி மோதல்களில் ஈடுபடுத்தி இரத்தத்தை சுவைத்து கொண்டிருக்கிறார்கள்.  அல்கொய்தா முதல் அல் உம்மா வரை ஜிகாத்தை தவறாக புரிந்து கொண்டதே அவர்களின் நாசகார வேலைகளாக வெளிபட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த அபாயகரமான சூழலிலிருந்து இஸ்லாத்தையும் இஸ்லாம் இளைஞர்களையும் மீட்டுக் கொண்டு வர அந்த மதத்திலுள்ள நல்ல உள்ளங்கள் முன்வர வேண்டும். பயங்கரவாதிகள்  பலர் முஸ்லீம்களாக இருப்பதனால் உலக மக்கள் இஸ்லாத்தை பய உணர்வோடும் வெறுப்புணர்வோடுமே பார்க்கிறார்கள்.  இதே நிலை நீடித்தால் முகமது நபியின் எண்ணங்களெல்லாம் உழைப்புகளெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

தீவிரவாதிகளை உருவாக்க துடிக்கும் சில முஸ்லீம் அரசியல் வாதிகள் தங்களது நேரத்தையும் உழைப்பையும் செல்வத்தையும் வறுமையும் அறியாமையிலும் கிடக்கும் முஸ்லீம் மக்களின் மறு வாழ்விற்காக செலவழித்தால் நபி கனவு கண்ட உண்மையான ஜிகாத் நடப்பதாக இருக்கும்.

கேள்வி:    ஜிகாத் பற்றி தவறுதலாகப்புரிந்து கொண்டதற்கு முஸ்லீம் மக்கள் மட்டுமே காரணமா? அல்லது வேறு யாரேனும் அதற்கான விதையை ஊன்றினார்களா?

குருஜி:    பழங்கால வரலாற்றை விட்டுவிடுவோம் தற்கால நிகழ்வுகளை எடுத்து கொண்டாலே இஸ்லாமிய பயங்கர வாதத்தின் வேர் எங்கிருந்து முளை விட்டது  என்பதை உணர்ந்து கொள்ளலாம்.  அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் கடுமையான பனிப்போர் நிகழ்ந்ததை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது.  அந்த கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானத்தில் நடந்த அரசியல் புரட்சியில்  நஜிபுல்லா தலைமையிலான புரட்சி அரசுக்கு பாதுகாப்பு அளிக்க ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியது.  ரஷ்யாவின் மூக்கு எங்கெல்லாம் நுழைகிறதோ அங்கெல்லாம் அமெரிக்க கழுகின்  மூக்கும் நுழையும்.  நஜிபுல்லாவின் எதிரிகளான முகாஜின்களுக்கு உதவுகிறபேர்வழி என்று அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி ஆப்கானின் சகோதர சண்டையை ஆரம்பித்து வைத்து தனது ஆயுத வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.  அரசியல் மாற்றங்களால் சோவியத் ராணுவம் ஆப்கானிலிருந்து  வெளியேறியவுடன் அமெரிக்காவின் பார்வையில் ஆப்கானிஸ்தானும் கைவிடப்படவேண்டிய பொருளாகிவிட்டது.

இதுவரை அமெரிக்காவிடமிருந்து பொருள் உதவியும் ஆயுத உதவியும் பெற்று பயங்கரவாத செயல்களில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வந்த ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் அமெரிக்கர்களின் செயல்களால் எரிச்சல் அடைந்து தீட்டிய மரத்தையே வெட்டி பார்ப்பது போல் அமெரிக்கர்களையே தாக்க ஆரம்பித்தனர் இது தான் தற்கால இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மூலக்கதை ஆகும்.

இப்போது நன்றாகப் புரியும். எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அரபுகள் கைக்குண்டாக மாறியது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசியல்வாதிகளே என்பது விளங்கும்.

அதனால் தான் இன்றைய இஸ்லாமியர்கள் தங்களின் ராஜ குருவாக ஏற்றிருக்கும் அமெரிக்க ஐரோப்பிய அரசியல் வியாபாரிகளை இனம்கண்டு ஒதுக்கி முகமது நபி என்றும் மகா புருஷரின் வழியை உண்மையாக ஏற்றுக் கொண்டு வாழப்பழகவேண்டும்.

கேள்வி:     நீங்கள் கூறும் இந்த கருத்துக்கள் முஸ்லீம் மக்கள் மத்தியில் நன்கு பதிய இறைவன் துணை செய்ய வேண்டும்.  ஆனால் இன்னொரு கேள்வி  மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை அதைக்கேட்டு விடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன் உண்மையாகவே முஸ்லீம்கள் முகமது நபியின் வழியில் நடக்கிறார்களா? இல்லையா?

குருஜி:     நடக்கவில்லை என்று ஒட்டு மொத்தமாகக்கூறிவிட முடியாது.  இருப்பினும் முகமது நபி கூறிய சகோதரத்துவம் என்ற பாதையிலிருந்தும் முஸ்லீம்கள் உண்மையிலேயே விலகி விட்டார்கள்.  என்றே சொல்ல தோன்றுகிறது காரணம் முஸ்லீம் மக்களிடம் புரையோடிபோய் இருக்கும் ஜாதிய துவேசம் என்று சொல்லாம்.  இந்திய முஸ்லீகள் பட்டாணி, ராவுத்தர்,  மரைக்காயர், லப்பை, ஷேக் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அவர்களுக்குள் கொள்வினை கொடுப்பினை என்று எதுவும் இல்லை என்றாலும் கூட எனது ஜாதிப்பிரிவுதான் உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற மேலாதிக்க உணர்வு பரவி கிடக்கிறது.  இதில் ஒருவர்க்கொருவர் பலாத்கார சண்டைகள் இல்லை என்ற ஒரு நல்ல விஷயத்தைத்தவிர வேறு எதையும் கூற முடியாது.  உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களில்  ஷியா, ஷன்னி பிரிவு தகராறுகள் உச்சகட்டம் அடைந்திருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.  இவைகளே முகமது நபியின் சகோதரத்துவத்தை முஸ்லீம்கள் கைவிட்டு விட்டார்கள் என்பதற்கு சரியான சான்று ஆகும்.  இவர்கள் குரானில் அல்பஹராவில் சொல்லப்பட்டிருக்கும் குழப்பம் செய்வது கொலையை விடக்கொடியதாகும் என்ற 191-வது சுறாவை மனதில் வைத்தால் பிரச்சினைகளுக்கு முடிவும், விடிவும் கிடைக்கும்.

கேள்வி: முகமது நபியின் போதனைகளை இசையோடு வாழ்வியலில் பொருத்தியவர்கள் சூபிக்கள் என படித்திருக்கிறேன்.  ஆயினும் அவர்களை பற்றி விரிவாக எனக்குத்தெரியாது அவர்களைப் பற்றிக்கூற முடியுமா?
குருஜி:    இந்து மதத்தை போலவே இஸ்லாம் மதத்திலும் பல உட்பிரிவுகள் உள்ளன.  அவற்றில் மிகவும் முக்கியமானது சூபி பிரிவு ஆகும்.  குரானில் அனுபூதி வழியில் இறைவனை அடைய மார்க்கங்கள் பல சொல்லபட்டிருக்கிறது.  அனுபூதி முறையில் கையாளும் விருப்பமுடைய முஸ்லீம்களில்  மிக முக்கிய கூட்டத்தார் துறவு உள்ளம் கொண்டவர்கள் ஆழ்ந்த கருத்துக்களிலும் வழிபாடுகளிலும் தங்கள் ஈடுபடுவதற்காக மனக்குழப்பத்தைத் தரும் உலகத்தாரை விட்டு விலகி தனியாக சஞ்சாரம் செய்பவர்கள்,  ஆற்றல் பொருந்திய ஆன்மீக உணர்வுகளால் இயக்கபடுபவர்கள்.  மதக்கோட்பாட்டின் படி நடப்பதை விட சமய சடங்குகளை செய்வதை விட மனதில் தூய்மையையும் வாழ்வின் ஒழுக்கத்தையும் மிகமுக்கியமானதாக இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

ஆன்மீக விவாதங்களால் இவர்களின் மனதும் அறிவும் நிறைவு பெறாமல் அறிவு வாதங்களை ஒதுக்கி ஆன்மீக உணர்வை பரிபூரணமாக அனுபவிக்கத் துடிக்கும் இந்த சூபிக்கள் தற்காலத்தில் தான் இந்த பெயரை பெற்றார்கள் என்றாலும் முகமது நபியின் காலத்திலேயே அவரின் மிக நெருங்கிய தோழர்களாகவும் விளங்கினார்கள்.  இவர்களுக்கு துறவிகள், போதகர்கள், தவறுக்கு வருந்துவோர்கள் மற்றும் கடவுள் பற்றுள்ளோர்கள் என்றெல்லாம் இஸ்லாம் பல பெயரிட்டு அழைக்கிறது.

இவர்கள் தனிமையில் வாழ்ந்தவர்கள் புலன்களை அடக்கத்தான் உடல்களை வதைத்தவர்கள் தனிமைச் சிந்தனையில் ஆழ்ந்து மனிதர்களை மிகவும் எச்சரித்து முகமது நபியின் ஆர்வமுடைய போதனைகளின் மூலம் பாவத்தை பற்றியும் பாவத்திற்கான தண்டனைகள் பற்றியும் எழுச்சியான பாடல்களால் மக்களுக்கு உணர்த்தி அவர்களை நல்வழிபடுத்த அயராது பாடுபட்டனர்.  தொடக்ககால சூபிக்கள் முஸ்லீம்மத கொள்கையின்படி விலக்க வேண்டியதை விலக்கி கொள்ள வேண்டியதைக் கொண்டும் மிகக் கடுமையான நியமங்களை கடைபிடித்து வாழ்ந்தனர்.  இவர்களுடைய மிக முக்கியமான நோக்கம் தன்னலம் மறுத்து தியாக வாழ்வை மேற்கொள்ளுவதும் கடவுளோடு ஒன்று படுதலுமே ஆகும்.

சூபிக்களுடைய ஆன்மீக வாழ்வு கடவுளோடு இரண்டறகலத்தல் என்னும் பெரும்பாதையில் பயணம் செய்வதாக அமைந்திருந்தது.  இந்த ஆன்மீகப்பயணம் பல நிலைகளைக்கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு நிலையிலும் பொருத்தமான ஒழுக்கத்தின் வெற்றிகள் அடங்கி இருந்தன.  இந்த ஒழுக்க வெற்றியை அடைய முயற்சிப்பவர்களுக்கு பல்வேறு வரையறைகள் இருந்தன.  வல்லவர்கள் வரையறையைத் முழுமைபடுத்தி சாதாரண அறிவுநிலையிலிருந்து உள்ளுணர்வு கடவுளின் அருட்குறிப்பு பரந்து விரிந்து பிரபஞ்ச நேயம் பேரின்ப காட்சியை தரிசனம் செய்தல் என்ற படிகளில் ஏறி ஆன்மீக நிலையில் சிகரத்தைத்தொட்டவர்களாக சூபிக்கள் விளங்கினர்.

முகமது நபியின் தோழர்களாகவே சூபிக்கள் இருந்தபோதும் கூட நபியின் காலத்திற்குப்பின் வந்த சில முஸ்லீம் அறிஞர்களும், அரசர்களும் சூபி மார்க்கத்தை சரிவர புரிந்துகொள்ளாமல் அவர்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொண்டார்கள்.  ஆனாலும் கி.பி.922-ம் ஆண்டில் மன்சூர் என்ற சூபி துறவி தூக்கிலிடப்பட்ட பிறகு சூபி மார்க்கம் பரபரப்பாக மக்களால் பேசப்பட்டு பல நிலையிலும் வளர்ச்சியை நோக்கிச் சென்றது.

இந்த மார்க்கத்திற்கு வழிகாட்டக்கூடிய அபுநசர் எழுதிய கிதாப்-உல்-லூமா என்ற புத்தகமும், கலாபதி எழுதிய கிதாப்-உங்-த-அரூப் என்ற புத்தகமும், மக்கி எழுதிய கூட்-உல்-குலாப் என்ற புத்தகமும் மற்றும் சுலாமி எழுதிய தபாகட்-அல்-சூபியா என்ற புத்தகமும் சூபி மார்க்கத்தின் பெருமைகளை இன்றும் எடுத்துச் சொல்லும் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கிறது.  இது தவிர தபாகத்-அல்-அசாபியா, சூசைரியாவின் கஸ்புல் மக்சூக் ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கதாகும்.

சூபி மார்க்கத்தை தவிர 12-ம் நூற்றாண்டின் கசாவ் வுப் என்ற கொள்கை இமாம்கசாலி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.  இஸ்லாத்தின் மெய்ப்பொருளை விரிவாகவும் ஆழமாகவும் கற்ற பிறகு இவர் அவ்வறிவு, இறைவனை புரிந்து கொள்ள போதாது  என்ற முடிவுக்கு வந்தார். தன்னுணர்வும் தன்னொளியும் பேரின்பமுமே ஆன்மாவைச் சுற்றி நிற்கின்ற ஐயங்களை போக்கும் என்றும் வாழ்கையை நடத்துவதற்கு தக்க வழிகாட்டிகளாகவும் உள்ள தெளிவை பெறுதலையும் உறுதியை அடைதலையும் பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதை ஐயம்திரிபட அறிந்திருந்தார். 

இவரின்  தசாவுக்  கொள்கை நாளடைவில் சூபிக்கள் தத்தெடுத்துக் கொண்டு இமாம் கசாலியை சூபிக்களின் தலைவர் என்றே போற்றத் தொடங்கினார்கள்.  இன்றைய கால கட்டத்தில் இருக்கும் பல முஸ்லீம்கள் சூபி கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.  அதற்குக் காரணம் சூபி துறவிகள் குரான் என்பது முக்கிய சமய கருத்துகளும், ஒழுக்கங்களின் அடிப்படையான கொள்கைகளும், சட்டமும், அரசியலும், தன்னகத்தை கொண்டுள்ளதே தவிர ஆத்மாவானது பரிபக்குவ நிலையை அடையும்  மார்க்கத்தைக் காட்டவில்லை என்று கருதியதாலும் ஓரளவு இந்து மதத்திலுள்ள தியானம், யோகம், நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றின் சாயல் சூபி பிரிவில் இருந்தது என்று கருதினர்.

கேள்வி:    முகமது நபி என்ற தனி ஒரு மனிதனின் சிந்தனை அரசியல் துறையில் பிரச்சினைகளை கிளப்பி இருப்பது போலவே அறிவுத் துறையிலும் பிரச்சினைகளை  உருவாக்கி இருப்பது பெரும் வியப்பாகும்.  பிரச்சினைகளின் ஊற்றுக்கண்களை நபி அவர்கள் திறந்துவிட்டாரா?

குருஜி:    முகமது நபி தான் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்க்கை முறையாலும் தான் கொண்ட கொள்கைகளை வெளிப்படுத்திய விதத்தாலும் எப்போதுமே சிக்கல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கியதும் இல்லை உருவாக்க நினைத்ததும் இல்லை.  மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம்  அவரைத்தவறாக புரிந்து கொண்டவர்களால் தான் பிரச்சினைகளே உருவாயிற்று தவறாக புரிந்து கொண்டவர்கள் என்று சொல்லும்போது அதில் நபியை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டவர்களும் ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

நபியின் பரிசுத்த தன்மைக்கு ஆதாரம் வேண்டும்என்றால் அவரது வாழ்க்கையையே எடுத்துக் கொண்டால் போதும் அரபு நாட்டில் சக்கரவர்த்தியாக அவர் இருந்த பொழுதும் கடினமான உழைப்பாளியாகவே திகழ்ந்தார்.  தனது கிழிந்துபோன ஆடைகளைத் தானே தைத்துக்கொண்ட உலகின் ஒரே சக்கரவர்த்தி முகமது நபி மட்டும்தான். 

அது மட்டும் அல்ல அரசியல் காரணங்கள் தவிர மற்ற எந்த தேவைகளுக்கும் அரண்மனைகளையோ பெரும் மாளிகைகளையோ அவர் பயன்படுத்தியது இல்லை.  கடைசி மூச்சுவரை குடிசையிலேயே வாழ்ந்தார்.  அவர் மட்டும் நினைத்திருந்தால் அக்கால அரபு மக்களை மதி மயக்கிதானே  கடவுள் என்று பிரகடனபடுத்தி இருக்கலாம் ஆனால் அவர் இறைவனின் சன்னிதானத்தின் முன் தான் ஒரு சாதாரண மனிதரே தனக்கென்று பிரத்யோகமாக எந்த மரியாதையும் தேவையில்லையென்றும் இறைவனுக்கு இணையாக எவரும் மதிக்கப்படவோ துதிக்கபடவோ கூடவே கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.  குழப்பங்களை தோற்றுவிக்கும் எந்த மனிதனும் தன்னையே முன்னிறுத்த ஆசைபடுவான்.  ஆனால் முகமது நபி முன்னிறுத்தியது தன்னை அல்ல.  ஒழுக்கங்களையும், இறைவனையுமே ஆகும்.  மதகாழ்புணர்வு உடையவர்கள் அவரைப் பற்றி தூற்றுவதற்காக என்றுமே அவர் வருந்தியது  இல்லை, கோபம் கொண்டதும் இல்லை.  அப்படி தூற்றுபவர்களுக்காக இறைவனிடம் அவர் துவா செய்வாரே அல்லாமல் பழி சொல் கூற மாட்டார் முஸ்லீம் மன்னர்களின் மதம் சார்ந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு ஆன்மீக அறியாமையே காரணமாகுமே தவிர நபி அல்ல.

யார் மீது யுத்தப்பிரகடனம் செய்யபடுகிறதோ அந்த மக்களுக்கும் போர்புரிய அனுமதி உண்டு.  சண்டையிலும் அல்லாவின் வழியில் நடக்க வேண்டும் உங்களிடம் போர் புரிபவர்களுடன் மட்டுமே போர் செய்ய வேண்டும்.  அவர்கள் சமாதானத்தை விரும்பினால் நீங்களும் அதையே செய்யுங்கள்.  போர்களில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோர்களை எக்காரணம் முன்னிட்டும் துன்புறுத்தாதீர்கள் என்று யுத்த தர்மத்தை வலியுறுத்திக்கூறும் அண்ணல் நபி அவர்கள் மாற்று மதத்தினரின் மாற்று கொள்கையினரையும் சித்தரவதை செய்ய அனுமதிப்பாரா? ஆனாலும் விதியின்  கொடுமை அதிகார வேட்கை உடைய கொடுங்கோல் மன்னர்கள் இஸ்லாத்தின் பெயராலேயே கொலைகள் செய்தார்கள் என்பது சரித்திரத்தின் உண்மை  சான்றுகளாகும்.  நவீன முஸ்லீம்கள் சிந்தித்துப்பார்த்தால் வெடித்து சிதறும் வெடிகுண்டுகளுக்கிடையே துடித்து சாயும் மனித உடல்கள் சாவை தழுவுவது நிச்சயம் நிறுத்தப்படும்.  துப்பாக்கிகளின் வேட்டுகளால் தூக்கத்தை குலைத்து விட்ட அப்பாவி முஸ்லீம்களும் மற்றவர்களும் நிம்மதியாக கண்ணயர்வார்கள்.

ஆயுதங்களின் துணைகொண்டு மார்க்கத்தை வளர்க்கலாம் என நபிகள் நாயகம் நினைத்திருந்தால் இன்று உலகில் முக்கால் பகுதியில் பச்சைக்கொடிதான் பறந்திருக்கும் ஆனால் ஆதிக்க வெறிபிடித்த அக்கால மன்னர்களும் இக்கால பயங்கரவாதிகளும் இஸ்லாத்தின் பெயரால் மக்களை ஈவு இறக்கம் இல்லாமல் கொன்று குவித்தார்கள் இன்றும் அதையே செய்கிறார்கள் துப்பாக்கி வழியில் குரானை காப்பேன் என்று சொல்பவன் என்னைப் பொறுத்தவரை முஸ்லிமும் அல்லன் மனிதனும் அல்லன்.

கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதுபோல் ஞானிகளின் நல்லிதயம் ஞானிகளுக்கே விளங்கும்.  நபி மார்கத்தின் நல் இதயங்களை புரிந்துகொண்டு குருஜியிடம் இருந்து விடைபெற்றேன்.

– யோகி ஸ்ரீராமானந்த குரு

Leave a Reply