Shadow

பிரம்மன் விமர்சனம்

பிரம்மன் திரைவிமர்சனம்

நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன்.

தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி.

Brahman Sasikumarதியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி.

மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கதை கேட்கிறார். “ஒரு லவ்வு.. அதுக்குள்ள ஒரு ஆக்ஷன்.. அதுல பெரிய காமெடி.. அதோடு ஃப்ரெண்ட்ஷிப் கலந்த ஃபேமிலி கதை வேணும்” எனக் கேட்பார். அதைக் கேட்டு கடுப்பாகும் சூரி, ‘எத்தனை பேருடா கிளம்பியிருக்கீங்க?’ என அவரை அடிப்பார். இந்த சுய எள்ளலும், சுய விமர்சனமும் அதை தன் படத்திலேயே வைத்திருக்கும் தில்லும் பெருந்தன்மையும் வேறு எந்த இயக்குநருக்காவது வருமா?

Lavanya Tripathiநாயகியாக லாவண்யா திரிபாதி. 2006 இல் மிஸ்.உத்திரகாண்ட் பட்டம் வென்றவர். அவருக்கு தமிழ் தெரியாதது வசதியாகப் போய்விட்டது. ‘எல்லாத்துக்கும் மேல அவன் என் நண்பன். சோ நான் உன்னை விட்டுக் கொடுத்துட்டேன்’ என முதல் ஹீரோ சொல்கிறார். அடுத்து இரண்டாவது ஹீரோ, ‘நோ.. நோ.. அதுலாம் தப்பு. போதும் உன் தியாகம். நீயே வச்சுக்கோ’ என பொம்மையைத் திருப்பித் தருவதுபோல நாயகியை முதல் ஹீரோவிடமே விடுகிறார். பல மாநிலங்கள் கடந்துவந்த அந்த ஐயோ பாவம் பொண்ணும், தேமோவென நிற்கிறார். இப்பதான் புரியுது.. தமிழ் தெரியாத ஹீரோயின்களே தொடர்ச்சியாக ஏன் தமிழ்ப்படங்களில் நடிக்கின்றனர் என!