
ஏரியாவில் யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக போய்த் “தட்டி”க் கேட்பவன் புகழ். அப்பழக்கம் அவனை எங்குக் கொண்டு போய் விடுகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் கம்யூனிசத்தின் தேக்க நிலையை பொதுப்புத்தியின் நோக்கில் விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. எனினும் அதிகாரத்தின் முன் எதுவும் செல்லுபடியாகாது என்ற அதிருப்திக்கு படம் இட்டுச் செல்கிறது. தோழராக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன், அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு.
படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் மிக இயல்பாய் வந்து ஈர்க்கின்றன. ஒன்று, அரசியல்வாதியாக வரும் தாஸ். வீட்டிலிருப்பவரைச் சமாளிக்கணும், கட்சியினரைச் சமாளிக்கணும், அமைச்சரைச் சமாளிக்கணும், காவல்துறையை நட்பாக வைக்கணும் என மனிதனுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள். இத்தனையையும் தாஸாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து சுமந்துள்ளார். இரண்டாவது, ஊர் வம்பை விலைக்கு வாங்கும் புகழுக்கு அண்ணனாக நடித்திருக்கும் கருணாஸ். ஒரு குடும்பத் தலைவனாக, பொறுப்பான அண்ணனாக வாழ்ந்துள்ளார் கருணாஸ். அழகு குட்டிச் செல்லம், கதகளி எனத் தொடர்ந்து குணச்சித்திரப் பாத்திரத்திற்குச் சிறப்பாகப் பொருந்துவது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது, RJ பாலாஜி. இவரில்லையெனில் படத்தில் வெறுமை தாண்டவமாடியிருக்கும்.
புகழாக ஜெய். நாயகன் என்ற முத்திரை மட்டுமே சுமந்து வருகிறாரேயன்றி, அதை உறுதிபடுத்த வலுவான காட்சிகள் அமையாதது ஒரு குறை. புஜ பல பராக்கிரமசாலியே அன்றி, எதையும் யூகித்து காய் நகர்த்தாதவராக இருக்கும் நாயகன். அவரது காதலி புவனாவாக சுரபி நடித்துள்ளார். ‘இவன் வேற மாதிரி’ மாலினியைப் போல் இளைத்து விட்ட புவனாவை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
ஜெய்யின் நண்பர்கள் படத்தின் கலகலப்புக்கு உதவுகின்றனர். ‘நான் தலையாட்டிட்டுத்தான வந்தேன்!?’ என பைக்கின் பின்னால் அமர்ந்திருப்பவன் சொல்லும் காட்சி ஓர் உதாரணம். இயக்குநர் மணிமாறன் இப்படி படம் நெடுகே போகிற போக்கில் சுவாரசியப்படுத்துகிறார்.
வாலாஜாபேட்டை நகரத்திலுள்ள மைதானத்தை, அத்தொகுதியில் நின்று கல்வி அமைச்சரானவர் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பிரசித்திப் பெற்ற மைதானம் அது. பல இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தரும் அட்சயபாத்திரமாக விளங்கி வரும் இடம். அத்தகைய மைதானத்துடன் நாயகனுக்கான பிணைப்பை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தாமல் அரசியலாகவே கொண்டு சென்றுள்ளது ஒரு குறை. தனது முந்தைய படமான உதயம் NH4 படத்தைப் போல் விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும், சலிப்பைத் தந்திடாத திரைக்கதையை இப்படம் கொண்டுள்ளது. நட்பு, அரசியல், காதல், பாசமெனக் கலந்து கட்டிக் கொடுத்துள்ளார் மணிமாறன்.