Shadow

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

‘நான் என் சீடனை தேர்வு செய்யணும்’ போதி தர்மர்.

‘சன் க்வாங்’ என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. புத்த மதத்தைத் தழுவி துறவியாக மாறுகிறார்.

படத்தில் ‘சன் க்வாங்’கின் அறிமுகம் லாங் -ஃபெய் என்னும் மடத்தில் இருந்து தொடங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்கும் சன் க்வாங், தன் கைகளைப் பதற்றமுடன் கழுவுகிறார். அவர் கையில் ஏதோ அழுக்கு உள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சி ஒரு குறியீடு என படுகிறது. தன் கைகளில் படிந்த இரத்தக் கறைகளைக் கழுவ முனைகிறார். அதாவது மனதில் படிந்து விட்ட குற்றவுணர்வில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார் என்பதன் குறியீடு. (ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்னும் நாடகத்தில் வரும் லேடி மெக்பெத் என்னும் கதாபாத்திரம், தன் கைகளில் இரத்தக் கறைகள் படிந்துள்ளதாக நினைத்து சதா கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்.)

சன் க்வாங் தன் குருவிடம் சென்று, “எப்பொழுதும் எனக்கு கெட்டக் கனவுகளாகவே வருகின்றன” என்று கவலையுடன் சொல்கிறார். பழையவற்றை எல்லாம் மறந்து விடு என குரு சமாதானப்படுத்தி அனுப்புகிறார். எனினும் சன் க்வாங் கனவுகளுக்கு பயந்து தூங்காமல் இருக்கு தன்னைத் தானே வருத்திக் கொள்கிறார். அங்கே வரும் சன் க்வாங்கின் குரு, சன் க்வாங் போலவே காயப்படுத்திக் கொள்ள முனைகிறார். பதறி தடுக்கும் சன் க்வாங்கைப் பார்த்து, “உனக்கு உணர்ச்சிகளே இருக்காது என நினைத்தேன்” என்கிறார். தன் தவறை உணரும் சன் க்வாங்கிடம், “தீய சக்திகள் உன் மனதைத் தடுமாற வைக்கும். உனக்கு உறுதியான மனம் இருந்தால் தான் அதை வெற்றி் கொள்ள இயலும்” என்கிறார்.

சாங் – ஷான் மலையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் போதி தர்மரைக் காட்டுகின்றனர். அவரது முதுகில் முயலின் நிழல் ஒன்று தெரிகிறது. விறகுகளைச் சுமந்து வரும் சன் க்வாங் அடிபட்டு கிடக்கும் வெள்ளை முயல் ஒன்றினைக் காண்கிறார். தன் உடையைக் கிழித்து முயலிற்குக் கட்டுப் போடுகிறார். முயல் துள்ளிக் குதித்து ஓடுகிறது. மகிழ்ச்சியுடன் சன் க்வாங் திரும்பி நடக்க ‘சன் க்வாங்’ என யாரோ அழைப்பது கேட்டு திரும்பிப் பார்க்கிறார். முயல் தன் இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு, “என்னை பின் தொடர்ந்து வா” என அழைக்கிறது. குழப்பமுறும் சன் க்வாங்கைத் தூக்கத்தில் இருந்து எழுப்புகிறார் அவர் குரு.

“முயல்” என்கிறார் சன் க்வாங்.

“நான் முயல் அல்ல. உன் குரு. மீண்டும் பகல் கனவா!?” என பெருமூச்செறிகிறார் குரு. சன் க்வாங்கின் கனவைப் பற்றி கேட்டுக் கொள்ளும் குரு, உண்மையை அறிய சன் க்வாங்கை கிழக்கி நோக்கி செல்ல பணிக்கிறார். சீன சோதிடவியலின் 12 ராசி மிருகங்களில் முயலும் ஒன்று. முயல் குருவைக் குறிக்கிறது. சன் க்வாங் முதலில் மறுத்தாலும் குருவின் கட்டளையை மறுக்க இயலாமல் கிழக்கு நோக்கி செல்கிறார்.

வழியில் ஒரு பெண்ணை ஐந்து பேர் துரத்துவதைக் காண்கிறார். அவர்களை தடுக்க பார்க்கிறார். அந்தப் பெண் தங்களிடம் திருடியதாக கோபத்துடன் இருக்கும் அவர்களை தற்காப்பிற்காக அடிக்கிறார். தான் புனித துறவியைப் பார்க்க ஷவோலின் மடத்திற்கு செல்வதாக சொல்கிறாள் அப்பெண். ஷவோலின் மடம் எங்கிருக்கிறது என சன் க்வாங் வியந்து கேட்க, தெற்கே என சொல்கிறாள் அப்பெண். தனியாக மடத்திற்கு நீண்ட தூரம் பயணிப்பது கடினம் என அந்தப் பெண் விடைப் பெறுகிறாள். விடைப் பெறும் முன் தன் பெயரை ‘முயல்’ என கூறி விட்டுச் செல்கிறாள் அப்பெண். தெற்கே பயணிப்பது தெய்வக் கட்டளைப் போலும் என உணர்ந்து கடவுளிற்கு நன்றி சொல்கிறார்.

பல நாட்கள் பயணித்து சாங் – ஷான் மலையை அடைகிறார் சன் க்வாங். குகையின் உட்புறம் சுவரைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கும் போதி தர்மரின் முதுகில் முயலின் நிழலுருவம் தெரிகிறது. போதி தர்மரை வணங்கி விட்டு குகை வாயிலிலேயே அமர்ந்துக் கொள்கிறார் சன் க்வாங். படத்தின் இந்த இடத்தில் தான் சன் க்வாங் தளபதி ஆக இருந்தார் என்பதற்கான காட்சி ஒன்றை அவசர கதியில் காண்பிக்கின்றனர். அதுவும் ‘லாங்மேன் க்ரோட்டோஸ் (Longmen Grottos)’ என்னும் இடத்தில் உள்ள புத்தர் சிலை முன் ஆக்ரோஷமாக சண்டையிடுவது போன்ற காட்சி இடம்பெறுகிறது.

(லாங்மேன் க்ரோட்டோஸ் போல் ஓர் இடம் உலகில் வேறு எங்கேனும் இருக்குமா என்பது ஐயம் தான். க்ரோட்டோ என்றால் ‘நந்தவனங்களில் வெப்பத்தை அளிக்க வல்ல செயற்கைக் குகை’யினைக் குறிக்கும். க்ரோட்டோஸ் பன்மை அதாவது குகைகள். ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் 1400 குகைகள். அதில் 110000 சிலைகளுக்கும் மேலுள்ளன.  14 கி.மீ. நீளம் கொண்ட க்ரோட்டோஸ்சில்.. 25 மி.மீ. சின்னது முதல் 17 மீட்டர் உயரம் கொண்ட பெரியது வரை என பல அளவுகளில் சிலைகள் காணக் கிடைக்கின்றன. இந்தச் சிலைகள் செதுக்கும் பணி முழுவதும் முடிய சுமார் 400 ஆண்டுகள் ஆனதாம். மேலே உள்ள புகைப்படத்தில் வலதுப் பக்கம் அமர்ந்தவாறு இருக்கும் பெரிய புத்தர் சிலையின் மடி சிதைந்து போயுள்ளதைக் காணலாம். திரைப்படத்தில் சன் க்வாங் சண்டையிடும் பொழுதும் மடி உடைந்தே உள்ளது. இந்தச் சிலைகளும், குகைகளும் அமைக்க துவங்கிய காலமும், சன் க்வாங்கின் காலமும் கிட்டத்தட்ட ஒரே காலம் தான். ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. அவ்விடத்தில் சன் க்வாங் சண்டையிட வாய்ப்பே இல்லை. அப்படியே சண்டை இட்டிருந்தாலும், புத்தரின் மடி உடைந்திருக்க வாய்ப்பு இல்லை. அவை அந்நேரத்தில் புதுப் பொலிவுடன் ஒளிர்ந்திருக்கும்.)

இரவு பெய்யும் வெண் பனி் அவர் மேல் போர்வைப் போல் படர்ந்து கிடக்கிறது. ஷவோலின் மடத்தைச் சேர்ந்தவர்கள் உறைந்து விட்டிருக்கும் அவரை தனி அறையில் படுக்க வைக்கின்றனர். விழிப்பு வந்ததும் மீண்டும் குகையின் முன்பு சென்று அமர்ந்துக் கொள்கிறார் சன் க்வாங். தொடரும் நாட்களில் பனியினைப் பொருட்படுத்தாது அமர்ந்துள்ளார் சன் க்வாங். போதி தர்மர் தன் ஒன்பது வருட தியானத்தினை முடித்து கண்களைத் திறக்கிறார்.

“மூன்று நாட்களாக பனியில் அமர்ந்துள்ளாயே!! என்ன வேணும்?” என கேட்கிறார் போதி தர்மர்.

“மனதிற்கு அமைதி வேண்டும்.”

“உன் மனம் அலைபாய்கிறதா!?”

“பெளத்தம் ஆழ்ந்துக் கற்றிருந்தாலும், மனம் ஏனோ அமைதியற்று தவிக்கிறது.”

“உன் மனதை என்னிடம் தா. நான் அமைதியுற செய்கிறேன்.”

“ஆனால் என்னால் என்றுமே என் அமைதியற்ற மனம் எங்குள்ளது என கண்டுபிடிக்க இயலவில்லையே!!” என்கிறார் சன் க்வாங்.

“நான் உன் மனதை அமைதிப்படுத்தி விட்டேன்” என்று சொல்லும் போதி தர்மரிடம் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பிக்கிறார் சன் க்வாங். போதி தர்மர் ஏதும் சொல்லாமல் குகையை விட்டு வெளியில் வருகிறார். போதி தர்மரின் எதிரில் இருந்த சுவரில் அவரின் முகம் வரைந்தால் போல் மெலிதாக பதிந்துள்ளது. போதி தர்மர் எதுவும் சொல்லாமல் போனதால், சன் க்வாங் அவரது கையை அவரே நையப்புடைத்திக் கொள்கிறார். சன் க்வாங்கின் உறுதியை மெச்சி போதி தர்மர் அவரை சீடராக ஏற்று, “வெய் ஹூ” எனப் பெயர் சூட்டுகிறார்.

Leave a Reply