Shadow

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

மனிதனுக்கு அதிசயங்கள் மீதும், ஆச்சரியங்கள் மீதும் அலாதி பிரியம். போதி தர்மர் ஒரு நாணலின் உதவியோடு ஆற்றைக் கடந்தார் என்ற விடயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. மக்களில் சிலர் நம்புகின்றனர். சிலர் நம்ப மறுக்கின்றனர். அதற்கு அவரின் தோலின் நிறமும் காரணமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கவனித்தவாறு வருகிறார் ஹங் சீ. அவர் அப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பெளத்த குரு.

“நாம் நம் மனதை லாப நஷ்டங்களோடு பிணைத்து கொள்ளக் கூடாது; புகழுக்காக ஏக்கப்பட்டால்.. அவை சுக துக்கங்களைப் பெருக்கி விடும். அதனால் தான் பிக்குகள் உலகாயுத விருப்பங்களில் இருந்து விலகி தூய்மையான மனநிலையை அடைய முனைகின்றனர்” என்று தனது சீடர்களுக்கு அறிவுரைக்கிறார் ஹங் சீ.

தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதி தர்மரை தூரத்தில் நின்றவாறு மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் விலக்கியவாறு ஹங் சீ போதி தர்மர் அருகில் சென்று வணங்குகிறார்.

“தாங்கள் தானே போதி தர்மர்? தாங்கள் எனக்கு ஞானத்தை கற்றுத் தர முடியுமா!??” என்று போதி தர்மரை ஹங் சீ கேட்கிறார்.

போதி தர்மர் திரும்பி ஹங் சீயைப் பார்க்கிறார். புன்னகைத்து விட்டு மீண்டும் தேநீர் கோப்பையைக் கையில் எடுக்கிறார். ஹங் சீ அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொள்கிறார். நன்றாக மனனம் செய்த மாணவன் அர்த்தம் தெரியாமல் அதை ஒப்பிப்பது போல்.. ஹங் சீ மேலும் கீழும் பார்த்தவாறு, “மனம், புத்தர், உயிரினங்கள் – இவை மூன்றும் நிலையற்றவை அன்றோ!? எதார்த்தம் என்று எதுவும் இல்லை. தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. எதற்குமே இங்கு அர்த்தமில்லை. சரியா!?” என கேட்டு போதி தர்மரை நோக்குகிறார்.

போதி தர்மர் ஹங் சீயின் மொட்டைத் தலையைக் கொட்டுகிறார். “ஏன் அடித்தீர்கள்!?” என்று தலையைத் தடவியவாறு கேட்கிறார் ஹங் சீ.

“எதற்கும் அர்த்தமில்லை என்று சொன்னாயே!! வலி எங்கிருந்து வந்தது?”

ஹங் சீ திகைக்கிறார்.

“புலப்படாததைக் காண்; நிசப்தத்தைக் கவனி; தெரியாததைத் தெரிந்துக் கொள்.. அவை தான் உண்மை” என்று எழுந்து சென்று விடுகிறார் போதி தர்மர்.

“குருவை அடித்து விட்டு எங்கு செல்கிறாய்?” என ஹங் சீயின் சீடர்கள் கோபமாக போதி தர்மரின் பின்னால் செல்கிறார்கள்.

ஹங் சீ அவர்களைத் தடுத்து, போதி தர்மர் சென்ற திசையை நோக்கி மண்டியி்டுகிறார்.

“உங்களுக்கு என்ன ஆச்சு!?” என்று சீடர்கள் பதற, “அவற்றை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மனதால் உணருங்கள்” என்று தரையில் விழுந்து வணங்குகிறார் ஹங் சீ.

தனது பயணத்தை மேலும் தொடர்கிறார் போதி தர்மர். வழியில் உள்ள பெளத்த விகாரங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டே வருகிறார். ‘சாங் – ஷான்’ என்றமலை புத்தரின் உருவத்தை போல் இருப்பதாக உணர்ந்த போதி தர்மர் அம்மலை மீது ஏறத் தொடங்குகிறார். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, நடுவம் என சீனர்களால் புனிதமாக கருதப்படும் ஐந்து மலைகளில் சாங் – ஷான் என்பது நடு மலை ஆகும். ஆனால் இந்த ஐந்து மலைகளுமே சீனாவின் பூர்வீக மதமான டாவோ (Tao) மத கோயில்கள் மிகுந்து காணப்படுகின்றன. எனினும் அம்மலையில் தான் உலக பிரசித்திப் பெற்ற ஷவோலின் பெளத்த மடம் உள்ளது. டாவோ தத்துவங்கள் அதன் பின் சீனாவிற்கு வந்த பெளத்த மதத்தி்ல் கலந்துள்ளதோடு அல்லாமல் சீனக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் முழுவதிலுமே வேரோடிள்ளன.

புனிதமான அந்த ஐந்து மலைகளும்.. முதல் உயிர் மற்றும் உலகம் தோன்ற காரணமாக இருந்த பான்-கு (Pangu) என்பவரின் உடல் தான் என்கிறது சீன தொன்மவியல்.  அவரது எலும்புகள் பாறையாகவும், சதைகள் பூமியாகவும், பல்லும் நகமும் உலோகங்களாகவும், நாளங்களில் ஓடும் குருதிகள் நதியாகவும், மூச்சுக் காற்று வாயுவாகவும் மாறி விட்டதாக சீன தொன்மவியல் சொல்கிறது. பான்-குவின் வயிற்றுப் பகுதி தான் சாங் – ஷான் மலையாக மாறியது எனவும் சீன தொன்மவியல் சொல்கிறது.

போதி தர்மர் சாங் – ஷான் மலையில் உள்ள ஒரு குகையில் சென்று அமர்கிறார். அம்மலையை உன்னத மலை என அடையாளப்படுத்துகின்றனர் சீனர்கள். அருகில் இருக்கும் ஷவோலின் மடத்தில் இருந்து வரும் தலைமை குரு, போதி தர்மரை மடத்திற்கு அழைக்கிறார். ஆனால் போதி தர்மர் எந்த சலனமும் அற்று ஆடாமல், அசையாமல் தியானத்தில் அமர்ந்து உள்ளார். அவரை தொந்தரவு செய்யாமல் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கட்டளையிடுகிறார் தலைமை குரு. அவருக்கு தினமும் சீடன் உணவெடுத்து வருகிறான். ஆனால் போதி தர்மர் நீரோ, உணவோ எடுத்துக் கொள்ளாமல் முன்று வருடங்களிற்கு மேலாக அக்குகையிலேயே தியானத்தில் உள்ளார்.

தியானத்தில் உறைந்து விட்ட போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்கு வருகைத் தர ஆரம்பிக்கின்றனர். மடத்தில் காணிக்கையைச் செலுத்தி விட்டு, போதி தர்மரை குகை வாயிலில் இருந்து அதிசயமாக நோக்குகின்றனர். போதி தர்மரின் புகழைக் கேள்வியுற்று, தன் தவறை உணரும் தென் சீன மாமன்னர் வூ, பெங் என்னும் தளபதியிடம் போதி தர்மரை அழைத்து வர சொல்கிறார். ‘யாங்ட்ஜி’ நதியின் மறுபுறமுள்ள வட சீனாவில் தான் ஷவோலின் மடம் உள்ளது. மாமன்னரின் கட்டளைக்கிணங்க பெங் ஷவோலின் மடத்திற்கு சென்று போதி தர்மரை அழைக்கிறான். போதி தர்மர் சலனமற்று அமர்ந்துள்ளார். பெங். ‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டு இருவரைக் கொண்டு போதி தர்மரை தூக்கி செல்ல முயல்கிறான். ஆனால் அவ்விருவரால் போதி தர்மரை அசைக்க கூட முடியவில்லை. அவரது கைகளுக்கிடையில் இரண்டு நீள மூங்கில் கழியை விட்டு அவரை நால்வர் தூக்க முயல்கின்றனர். கழிகள் உடைந்து விடுகின்றன. அவர் உடம்பில் கயிற்றைச் சுற்றி அதன் மறுமுனையை குதிரையுடன் பிணைத்து அவரை இழுத்து செல்ல முயல்கின்றனர். அக்கயிறும் அறுபடுகிறது.

செய்தி அறிந்த மாமன்னர் திகைக்கிறார். போதி தர்மரை வரவழைக்கும் முயற்சிகள் வீண் என உணர்கிறார். போதி தர்மரே வரும் விதி உள்ளவரைக் காத்திருக்கலாம் என்ற முடிவிற்கு மாமன்னர் வருகிறார்.

Leave a Reply