Shadow

போராளி விமர்சனம்

Poraali Review

போராளி தனக்குள் மிருகங்களைப் மறைத்தவாறு போலியான முகங்களோடு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அத்தகைய மிருக மனிதர்கள் மத்தியில் வாழும் ஒவ்வொருவருமே போராளி தானென்று படம் தொடங்குகிறது. 

தந்தையின் இரண்டாம் மனைவி மற்றும் அவள் தம்பி் என உறவினர்கள் சேர்ந்து அதி புத்திசாலி பள்ளி மாணவனான குமரனைப் படிக்க அனுப்பாமலும், எவருடனும் பழக விடாமலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும், குமரனுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை எடுத்துச் சொல்கின்றனர். சொத்துக்கள் குமரன் பெயரில் உள்ளது எனத் தெரிய வரும் குமரனுடைய சித்தியின் கோபம் அவருக்கு உதவியாய் இருப்பவர்கள் மேல் விழுகிறது. விளைவு குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும் கொல்லப்படுகின்றனர். நாயகன் வீறு கொண்டு எழுந்து எய்தவர்களை விட்டு எய்யப்பட்ட அம்புகளை (அடியாட்கள்) கொன்று தீர்க்கிறான். முன்பே சித்தியால் வளர்த்து விடப்பட்ட கதையான ‘மனநிலைப் பாதிக்கப்பட்டவன்’ என்ற சப்பைக்கட்டு மூலமாக மனநலக் காப்பகத்தில் சரண் புகுந்துக் கொள்கிறான் குமரன். மனநலக் காப்பகத்திற்கு வந்து சேரும் சித்தியின் ஆள் ஒருவரிடமிருந்து தப்பிக்க, நல்லவன் என்ற நண்பனை அழைத்துக் கொண்டு சென்னை ஓடி விடுகிறான். வந்த இடத்தில் இருவருக்கும் காதலி்கள் கிடைக்கின்றனர். இவர்களின் இருப்பிடம் அறிந்து குமரனின் உறவினர்கள் சென்னை வருகிறார்கள். குமரனுக்கு என்ன ஆனது, அவனின் காதல் என்ன ஆனது என்பதற்கு பதிலுடன் பட  நிறைவுறுகிறது.

குமரனாக சசிகுமார் நடித்துள்ளார். இரண்டு படம் இயக்கி உள்ளவருக்கு நாயகராகப் போராளி மூன்றாவது படம்; தயாரிப்பாளாராக நான்காவது படம். சென்ற வருட இறுதியில் தான் ஈசன் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. குணம் மற்றும் உருவத்தில்.. நாடோடிகள் படத்தில் பார்த்தது போலான பாத்திரத்தி்லியே மீண்டும் வருகிறார். வாழ்க்கையை நேர்முறையாக அணுகுகிறார். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ நினைக்கிறார். ப்ளாஷ்-பேக் காட்சிகளில் மட்டும் தலை நிறைய முடியைச் சிலுப்பிக் கொண்டு வருகிறார். நல்லவனாக ‘குறும்பு’ படத்தின் நாயகன் நரேஷ் நடித்துள்ளார். எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் படத்தில் தோன்றியது போலவே, நண்பர்களால் தொல்லைக்கு உள்ளாகும் பாத்திரத்தில் கஞ்சா கருப்பு. சசிகுமாருக்கு ஜோடியாக சுப்ரமணியபுரம் படத்தின் நாயகி சுவாதி. சிவமயம் என்னும் சன் தொலைக்காட்சித் தொடரில் ‘பொன்னி’யாகவும், அரசி என்னும் நெடுந்தொடரில் ‘காவேரி’யாகவும் நடித்த நிவேதா, இப்படத்தில் தமிழ்ச்செல்வி என்னும் பாத்திரத்தில் இரண்டாவது நாயகியாக நரேஷிற்கு இணை (ஜோடி) ஆக நடிக்கிறார். குமரனின் நண்பராக வருகிறார் ‘பரோட்டா’ புகழ் சூரி. கிராமத்தில் வலம் வரும்பொழுது ட்ரவுசர் தெரிய கைலி அணிந்தவாறும்,  சென்னைக்கு வரும் பொழுது அரைஞான் கயிறின் பிடிமானத்தில் பேன்ட் போட்டுக் கொண்டும், சட்டைக் காலரின் நுனியில் மஞ்சள் தடவிக் கொண்டவாறும் உள்ளார். படத்தின் ப்ளாஷ்-பேக் காட்சிகளைக் களகளப்பாக்குகிறார். நாயகனுக்கு உதவும் பாத்திரத்தில், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் நாயகி வசுந்தரா நடித்துள்ளார். முகத்தில் தீட்டப்பட்டிருக்கும் செயற்கையான கருப்பு பல்லிளிப்பதால், அப்படத்தில் தோன்றியது போல் களையாக இல்லை அவரது முகம். தொடர்ந்து பொறுப்பான பாசமிகு தந்தையாக நடித்து வரும் ஜெயப்ரகாஷ், இப்படத்தில் மனநோய் மருத்துவராக வருகிறார்.

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வந்திருக்கும் ஐந்தாவது படம் போராளி. சென்னைக்கு வரும் நாயகன் ‘பெட்ரோல் பங்க்’கில் வேலை செய்கிறார். பெட்ரோலின் தொடர் விலை ஏற்றத்தை நாசூக்காக காட்சிப்படுத்தியுள்ளார். எந்தவொரு கலைப் படைப்பும் சமகால விடயங்களைத் தனக்குள் பதித்துப் பின்வரும் சந்ததியினர் அறிந்து கொள்ளத்தக்க வகையில் இருக்கும். பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்கள் கலை வரிசைக்குள் வராது. அவ்வகையில் நொடிகளில் மறையும் இந்த விலையேற்றப் பதிப்பு காட்சிகள் ஓர் ஆறுதலான கலைச் சங்கதி. தற்போது வருகின்ற படங்கள் எல்லாம் வலிந்து தமிழுணர்வை ஏதேனும் ஒரு வசனங்களிலாவது புகுத்தி விடுகின்றன. இப்படமும் அதற்கு விதி விலக்கில்லை.

“எனக்கு சிலோன் பரோட்டா வேணும்” என்று அடிப்பட்டிருக்கும் நாயகி கேட்கிறாள். “எனக்கு சிலோனே பிடிக்காது. என்கிட்ட போய் சிலோன் பரோட்டா கேட்கிறா” என்று நாயகன் தன் நண்பனிடம் குறைப்பட்டுக் கொள்கிறான்.

நாடோடிகள் படத்தில் போகிறப் போக்கில், “இன்னா செய்தாரை ஒறுத்தல்..” எனத் தொடங்கும் திருக்குறளை எதிர்பாராத இடத்தில் மேற்கோள் காட்டி அசத்துவார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தில் இன்னும் அழகாக,  நாயகியின் மன இறுக்கம் தளர்ந்து நாயகன் மேல் பிடிப்பு ஏற்படுவதை, “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என அம்பாசிடர் காரின் பின்புற கண்ணாடியில் உள்ள எழுத்துக்கள் மூலம் உணர்த்துகிறார். இது ஒரு சப்பை விடயமாக இருக்கலாம். ஆனால் எத்தனை இயக்குனர்கள் தங்களது படைப்புகளில் இத்தகைய நுணக்கங்களை கையாள்கின்றனர் என்பதை யோசிக்க வேண்டும். (திரைமொழிகள் கிஞ்சித்தும் அற்ற “பாலை” படம் ஞாபகம் வருகிறது. அதன் இயக்குநர் சொன்னது போல் கேலிச் சித்திரமாக வந்தாலாவது.. 2000 வருடத்திற்கு முந்தைய தமிழரின் வாழ்க்கைப் பற்றி ‘காமிக்ஸ்’ ரசிகர்களுக்கு மட்டுமாவது தெரிந்திருக்கும்).

மனநோயும் காய்ச்சல், தலை வலி போன்று மிகச் சாதாரண நோய்கள் என்பதே இப்படத்தின் பிரதான கரு. உடல் நோயிற்கு வைத்தியம் பார்ப்பது போல், மனநோயை வளர விடாமல் ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம்.  அப்படிச் செய்ய முற்படாததால் 10% பேர் மனநோய் மருத்துவமனைகளிலும், 90% பேர் சாலைகளிலும் திரிகின்றனர் என காட்சிகள் வைத்துள்ளார் இயக்குனர். உறவுகளின் புரிதலும், அன்பான அரவணைப்பும் தான் ரொம்ப முக்கியம் என்ற வசனங்கள் படத்தில் வருகின்றன. மருத்துவர் பேசவதும் அதை சசிகுமார் அமைதியாக உள்வாங்குவதுமாக காட்சிகள் அமைந்துள்ளன.

ஆனால்..

‘முன்னப் பின்னத் தெரியாதவன் கூட உதவுவான்..  ஆனா இந்தச் சொந்தக்காரன் இருக்கானே!!’ என்று உறவினர்களின் மீதான நம்பிக்கையைக் கேள்விக் குறியாக்குவது போல் இரண்டொரு முறை வசனம் பேசுகிறார் நாயகன். ஆனால் பைத்தியம் என ஒதுக்கப்படும் பெண் ஒருவரின் தந்தையைப் பார்த்து, “எவனோ சொல்றத நம்புவ.. பெத்த பொண்ணு சொல்றத நம்ப மாட்ட. நீ பேசி இருந்தாலே இங்க எந்தப் பிரச்சனயுமே நடந்திருக்காதேய்யா” என உறவுகள் மீது நம்பிக்கை வைக்க அறிவுரைப்பார். நாயகன் மனதில் உள்ள இந்த முரண் அப்படத்தில் வில்லனாக தோன்றுபவரிடம் இல்லை. தங்கை மற்றும் தங்கை மகனுக்காக மறுகுகிறார். உறவுகளின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுப்பவராக உள்ளார் வில்லன். நாயகி, ஒரு பாட்டி, ஒரு பள்ளி மாணவி என அநாதைகள் மூவர் ஒன்றாக உறவுகளாக வாழ்கின்றனர். அதே சமயம் நாயகியின் கீழ் வீட்டில் வாழும் படவா கோபியும், சாந்தி என்ற பெயர் கொண்ட அவரது மனைவியும் எப்பவும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். அந்தக் காம்பவுண்டில் வாழும் குடிக்காரர் ரொம்ப நல்லவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். நாயகி அநாதை என்று தெரிந்ததும் நல்லவேளை நாயகனுக்குள் காதல் மலரந்து தொலைக்கவில்லை.

அதாவது ‘மிருக மனிதர்கள் மத்தியில் வாழும் ஒவ்வொருவருமே போராளி தான்’ என்று இயக்குநரின் குரல் ஒலித்து முடித்ததும் அரிஸ்டாட்டிலின் வரியைக் காண்பிக்கின்றனர். 

Leave a Reply