Shadow

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், ‘நோக்கு வர்மம்’ என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் கொன்றனர் என்பது மிகவும் அருவருக்கத்தக்க அல்லது கேவலமான புனைவு. பிரதான சீடரான வெய் ஹூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு போதி தர்மர் இந்தியாவிற்கு கிளம்பி விட்டார். ஆனால் போதி தர்மர் மீண்டும் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு இரண்டுக் காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று போதி தர்மர் இந்தியாவை விட்டு சீனாவிற்கு சென்ற ஆதாரமே நம்மிடம் இல்லை. போதி தர்மர் பற்றி நமக்கு கிடைத்திருக்கும் தரவுகள் அனைத்தையும் தொகுத்தளித்தது சீனர்களே அன்றி தமிழர்கள் அல்லர். மீண்டும் சீனாவில் இருந்து போதி தர்மர் காஞ்சிக்கு வந்திருந்தாலும் அதை பதிந்து வைக்க இங்கே ஆட்கள் இல்லை. போனதை பதிந்திருந்தால் தான் வந்ததை பதிந்திருப்பார்கள். அல்லது அப்படியே பதியப்பட்டிருந்தாலும், பதியப்பட்டவை அனைத்தும் தமிழகத்தில் கிளிர்த்தெழுந்த சைவ பக்தி மார்க்கத்தின் வேரூன்றலில் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பது இரண்டாவது காரணி.


அடுத்து நோக்கு வர்மத்திற்கு வருவோம். போதி தர்மர் தான் ‘குங் ஃபூ’ என்னும் தற்காப்புக் கலையை சீனாவில் தோற்றுவித்தார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நோக்கு வர்மம் பற்றிய அடிப்படைப் புரிதலே இன்றி அப்பதத்தை உபயோகித்துள்ளனர் என்பதை ஏழாம் அறிவு பட விமர்சனத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். மேலும் கண்களால் மட்டுமே எதிரியின் வர்மப் புள்ளிகளை உற்று நோக்கி “எதிராளியை முடக்குவது” தான் நோக்கு வர்மம் என்றும் காத்திரமாக குறிப்பிட்டிருந்தேன். அதையே ‘காட்சிப்பிழை திரை’ இதழில் தங்கவேலவன் என்பவர் முடக்குவது என்பதை பெளத்த தத்துவப் பார்வையினோடு பொருத்தி மேலும் அழகாக விளக்கியுள்ளார்.

“நோக்குவதாலேயே ஒருவர் தன்னை முடக்க முடியுமெனில், நோக்குபவர் தன்னை விட வலிமையானவர் என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் நிற்கும் எதிரி சிறுமைப்படுகிறான்.  தன்னை வென்ற பேராற்றலிடம் அகந்தை சரணடைகிறது. இங்கு வென்றவர் குருவாகவும், தோற்றவர் சீடராகவும் தமது உள்ளுறவைத் துவக்க, துவங்குகிறது ஓர் ஆன்மீகப் பயணம். நோக்குவர்மத்தின் தாத்பர்யம் இந்த வகை ஆன்மீக விழிப்புதான்.

நோக்குவர்மத்தை எல்லா எதிரிகள் மீதும் பிரயோகிப்பதில்லை. எதிரிகளில், தகுதி கொண்டோர் மட்டுமே நோக்குவர்மத் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதாவது, போதிநிலையை எய்துவதற்கான ஆற்றலை உள்ளீடாகக் கொண்டிருப்போர் மீதே நோக்குவர்மம் பிரயோகிக்கப்பட வேண்டும். அதற்கான தகுதி சுயவலிமைப் பெருக்கு கொண்ட அருந்திறன. அவனிடம் தான் பேரகந்தை உருத்திரண்டு நிற்கும்.

நோக்குவர்மத்தின் நோக்கம் கொல்லுவது தான்; ஆளையல்ல அகந்தையை.”


– பக்கம்: 5, 6 || இதழ்: 10 || நவம்பர் 2011.

ஆனால் முருகதாசின் போதி தர்மரோ ஆளைக் கொல்லுவதற்காக நோக்கு வர்மத்தைப் பயன் படுத்துபவர். தனது வர்த்தகத்திற்காக போதி தர்மர் என்னும் ஜென் துறவியையே கொலைக்காரனாக சித்தரித்த ஏ.ஆர்.முருகதாசின் செயலை என்னவென்று சொல்வது. நோக்குவர்மம் என்ற பூச்சுகள் எதுவுமில்லாமலே, ‘போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்’ என்னும் சீனப் படத்தில் தங்கவேலவன் சுட்டிக் காட்டும் அகந்தை அழித்தல் என்பது அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது. திருடர்களின் தலைவருடைய அகந்தை அழிந்து போதி தர்மரிடமே சீடனாக சேர்கிறார். இந்தப் படத்தில் இந்தியத் துறவியான போதி தர்மரைப் பெருமைப்படுத்துவதற்காக, சீன பிக்குகளைப் பெரும்பாலும் மட்டமாகவே சித்தரித்திருப்பார் சீன இயக்குனர் ப்ராண்டி யூன்.

உலகத்திலேயே அடர்த்தியாக முடி கொண்டவர்கள் சீனர்கள் தான் என்று ஓர் ஆய்வுக் குறிப்பிடுகிறது. அதற்கு அவர்கள் உணவில் ‘சோயா பீன்ஸ்’ தொடர்ச்சியாக உபயோகிப்பது தான் காரணம் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. ஆனால் போதி தர்மருக்கு சீனர்கள் ஏன் வழுக்கையான மண்டை உடையவராக சித்தரித்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது. மன அழுத்தம் (டென்ஷன்), மாசு (பொல்யூஷன்) என்ற காரணங்கள் சொல்ல இயலாது. பரம்பரை வழுக்கை என்றும் சொல்ல இயலாது. சீனர்களுக்கு போதி தாராவின் பரம்பரைப் பற்றிய மேலதிக தாக்கு தகவல்கள் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. போதி தர்மர் பொம்மைகள் ஜப்பானில் மிக விசேடமானதாக கருதபடுகின்றது.

அடுத்த இன்னொரு முக்கியமான கேள்வி உள்ளது. போதி தர்மர் தமிழரா என்பது தான் அது. ஆராய்ந்தவரை போதி தர்மர் பல்லவர் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதாக தெரியவில்லை. ஆனால் பல்லவர்கள் தமிழர்களா என்பதில் தான் சிக்கல் ஆரம்பமாகிறது. “
ஈரான் நாட்டு பல்லவர்கள்” என்ற இந்தக் கட்டுரை உங்களை ஆச்சரியத்தில் அமிழ்த்தலாம். அதே போல பேராசிரியர் அ.கருணானந்தமும் போதிதர்மன் தமிழர் இல்லை என அடித்துச் சொல்கிறார். அவரது உரை முழுவதும் எனக்கு ஏற்புடையது இல்லை. எனினும் அவர் முன் வைக்கும் கருத்து மிக முக்கியமானதாகப்படுகிறது.

முற்றும்.

Leave a Reply