Shadow

மீண்டும் ‘இண்டிபெண்டன்ஸ் டே’

Independence Day: Resurgence

1996 இல் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற படம் ‘இண்டிபெண்டன்ஸ் டே’. 75 மில்லியன் டாலர் பொருட்செலவில் உருவான அப்படம், 817 மில்லியன் டாலர் சம்பாதித்தது. அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் என்பதோடு, சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. 20 ஆண்டுகள் கழித்து அதன் அடுத்த பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ரோலண்ட் எம்மெரிச்.

இம்முறை 200 மில்லியன் பொருட்செலவில் வரவுள்ளது ‘இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜன்ஸ்’.

வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பூமி வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னறிவிக்க வேற்று கிரகவாசிகள் விட்டுச் செல்லும் தொழில்நுட்பத்தையே உபயோகித்து, ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) என்ற அமைப்பை உருவாக்குகிறது ஐக்கிய சபை. அவ்வமைப்பை, செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் ரேயாவிலும் (சனி கிரகத்தின் துணைக்கோள்) அமைத்து, கண்காணிப்பு வேலையைச் செய்கின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன், வேற்றுக்கிரகவாசிகள் தோற்கும் பொழுது தங்கள் தோல்வியைத் தலைமையிடத்துக்குச் சமிக்ஞை செய்துவிடுகின்றனர். மனித இனத்தை வேரோடு அழிக்க, ஒரு பெரும் வேற்றுக்கிரகவாசிப் படை பூமியை நோக்கி வருகிறது.

அதிக சக்தி வாய்ந்த புவியீர்ப்பு இயந்திரம்தான் அவர்கள் ஆயுதம். ரேயாவில் அமைக்கப்பட்ட கண்காணிப்புச் சாவடியை, சனி கிரகத்தின் வளையங்களோடு சேர்ந்து உறிஞ்சுகிறது அப்புவியீர்ப்பு இயந்திரம். சனியின் அருகில் ஒரு கருந்துளை உருவானது போல் பெரும் அழிவை அவ்வியந்திரம் ஏற்படுத்தி விட்டு, பூமியை நோக்கி நகர்கிறது அவ்வியந்திரம்.

இவ்வழிவில் இருந்து மனித இனம் எப்படித் தப்பிக்கிறது என்பதே ‘இண்டிபெண்டன்ஸ் டே’ இரண்டாம் பாகத்தின் கதை.