Shadow

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

Mun-dhinam-paartheney-movie-review

முன்தினம் பார்த்தேனே – கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத் தாண்டும் ஞாலங்கள் அடங்கும் முன் அவரிடம் துணை இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி தனது பயணத்தை தொடங்கி விட்டார். சுவரொட்டிகளில் தெரியும் அழகும், தமணின் பாடல்களும் எதிர்பார்ப்பின் ஏனைய காரணிகள்.

சஞ்சய். ஐ.டி.யில் வேலை செய்யும் சாமான்யன்களில் ஒருவன். நண்பர்கள், வேலை, கிசுகிசு என செல்லும் வாழ்க்கையில் காதல் வராதா என ஏங்குபவன். நிச்சயமானவள் எனத் தெரியாமல் ஒரு பெண்ணிடம் பழகி அவள் விலக, பலரால் தூற்றப்படும் ஆர்த்தி எனும் பெண்ணின் மீது மீண்டும் மிக மெதுவாக காதல் மல்ர்கிறது. அவளது கடந்த காலம் சஞ்சயை சிறிது சலனப்படுத்தும் சமயத்தில் ஆர்த்தியின் மீதான பலரின் வதந்தி உண்மை என சஞ்சயிற்கு தெரிய வருகிறது. அந்த குழப்பத்திலேயே தன் மேல் ஈர்ப்புள்ள அனு எனும் உடன் பணி புரியும் பெண்ணிடம் அவசர அவசரமாக காதலை வெளிப்படுத்துகிறான். இதனிடையில் ஆர்த்தி நல்லவள் என தெரிய வருகிறது. ஆர்த்தியா? அனுவா? சஞ்சய் தன் வாழ்க்கையை யார் கையில் ஒப்படைக்கிறான் என்பதற்கு விடையோடு படம் நிறைவுறுகிறது.

அரவிந்த். புதுமுக நாயகன். எப்பவும் சிரிக்க தயாராய் இருப்பது போல் தோன்றும் முகம். தமிழ்ப்பட நாயகர்களுக்கு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய எத்தகைய காட்சிகளும் படத்தில் இல்லாவிட்டாலும், அலட்டல் இல்லாத மிகையற்ற நடிப்பால் அவரும் நாயகன் தான் என சுலபமாக நம்ப செய்கிறார். அசடு வழிதல், எதிர்பார்த்து ஏமாறுதல், சிக்கனமாய் புன்னகைத்தல் என முக பாவனைகளிலேயே அனாசயமாக காட்சிகளை நகர்த்துகிறார்.

ஏக்தா ஆர்த்தியாக. நடன பயிற்சியாளராக வரும் ஆர்த்தி என்னும் பாத்திரம் தான் படத்தில் நாயகி அந்தஸ்து பெறுகிறது. மிகவும் பேசாத வில்லத்தனமான பாத்திரமாக தோன்றி, மெல்ல நாயகியாக மாறும் பாத்திரம் ஆர்த்தி. அவளுக்கான புதிரான பிம்பங்கள் வதந்திகள் மூலமே அளிக்கப்படுகின்றன. அதிலிருந்து மீண்டு மீண்டும் அதிலியே அமிழ்ந்து மறைவதால் நாயகன் மனதில் இருந்துக் கொண்டு கடைசி வரை உறுத்துகிறார். தனிமை, ஏக்கம், கோபம், காதல் என சகலமும் நளினமான நடன அசைவுகள் மூலம் வெளிபடுத்திய ஏக்தாவிற்கு இது சொல்லிக் கொள்ளும்படியான படம்.

சாய் பிரஷாந்த். சின்னத் திரையில் தலை காட்டிக் கொண்டிருப்பவர். நாயகனின் நண்பனாக தோன்றி நகைச்சுவைக்கு பொறுப்பேற்கிறார். தோன்றும் காட்சிகள் அனைத்திலும் அசத்தினாலும் குறிப்பாக நடன வகுப்பில் அவர் ஆடி அவமானப்படும் பொழுதும், பெண்கள் தன்னுடன் ஆடுபவர்களை தேர்ந்தெடுக்கும் காட்சியின் பொழுதும் சாய் படம் பார்ப்பவர்களின் வயிறை பதம் பார்க்கிறார்.

ஈரம் படத்தின் ஜில்லென்ற இசையில் பயமுறுத்தியதை தொடர்ந்து, மிக அழகான பிண்ணனி இசையில் மீண்டும் கவர்கிறார் தமண். பாடல்களும் ரம்மியம். வின்சென்ட்டின் ஒளிப்பதிவும், ஆன்டனியின் படத்தொகுப்பும் படத்தின் அழகிற்கு வலுவான காரணங்கள்.

மகிழ் திருமேனி. நிறைய, கெளதம் மேனின் சாயல். படத்தின் கதை பெரும்பாலும் நாயகன் வாய்மொழியிலேயே நடக்கிறது. படத்தில் நகைச்சுவை இயல்பாக இழையோடி சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. நிறைய விஷயங்கள் நாசூக்காய எள்ளலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. பொறாமை கொண்ட பெண்களின் புறம் கூறும் குணம், காதல் போதையில் உளறும் நண்பன், அவன் கொடுக்கும் சிக்கல்கள், ‘சாட்டில் பேசிக் கொண்டு நேரில் சந்திக்கத் தூண்டும் இணைய கோளாறுகள் என அடக்கிக் கோண்டே போகலாம். படத்தில் வரும் வசனங்கள் பல்வேறு பிரத்யேகங்களை கொண்டுள்ளது. கதை சொல்லியான நாயகன் தனது வாழ்க்கையை பிரபல ஆங்கில எழுத்தாளரான ‘ஆஸ்கார் வைல்ட்டின் வரிகளை முன்வைத்து சொல்லும் வசனங்கள், இடை இடையில் விஷமத் தனமான அர்த்த வசனங்கள், ஐ.டி. துறையினரின் மனப் போக்குகளை வெளிப்படுத்தும் வசனங்கள் என நீள்கிறது அந்த பட்டியல். நாயகனின் குரலோடு இங்கிலாந்தில் தொடங்கும் படம் சுவராஸ்யம் என்னும் மேட்டையும், தொய்வு என்னும் பள்ளத்தை சில இடங்களில் கடந்தும் நிதானமாய் ‘வாய்ஸ்-ஓவரிலேயே முடியும் மொட்டை திரைக்கதையாக உள்ளது. இன்னும் திரைக்கதையில் சிறிது கவனம் செலுத்தியிருந்தால், இன்றைய நடப்புகளின் மீது கட்டமைக்கப்பட்ட சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்திருக்கும்.

எரிச்சல் தோற்றுவிக்காமல் பாசாங்கற்று உணர்வுகளை இயல்பாய் நகைச்சுவையோடு சொல்லும் படங்கள் குறைவு என்பதாலும் நல்ல படங்களின் வரிசையில் இப்படத்தையும் சேர்க்கலாம்.