Shadow

மெரினா விமர்சனம்

Marina
மெரினா – மெரினா கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அந்தக் கடற்கரையில் சுண்டல், சங்கு இத்யாதிகள் விற்கும் சிறுவர்கள், யாசகம் பெறும் ஒரு பெரியவர், குதிரையை சவாரிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு ஆள், தன் மகளை ஆட விட்டு பாடல் பாடிப் பிழைப்பவர், தபால்காரர், பொழுதுபோக்க வரும் சில காதல் இணைகள் குறித்த படமாக ‘மெரினா’ உள்ளது.

தந்தை, தாய் இறந்ததும் அம்பிகாபதியை அவனது சிற்றப்பா ‘டாஸ்மாக்’கில் வேலையில் சேர்த்து விடுகிறார். அங்கு வேலை செய்யப் பிடிக்காமல் அம்பிகாபதி என்னும் சிறுவன் பட்டுக்கோட்டையில் இருந்து அமரர் ஊர்தி வாகனத்தில் சென்னை வந்து இறங்குகிறான். சென்னையில் பிழைப்பது எளிது என ஒருநாள் ஊர்ச் சுற்றி பார்த்துத் தெரிந்துக் கொள்கிறான். முதலில் தண்ணீர்ப் பொட்டலம் விற்கிறான். அதற்கு தடை விதிக்கப்பட்டதும் சுண்டல் விற்க தொடங்குகிறான். படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவனான அம்பிகாபதி சம்பாதித்து ‘டுட்டோரியல் கல்லூரி’யில் படிக்க நினைக்கிறான். அவனது படிக்கும் விருப்பம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

மெரினா என்றாலே காதலர்கள் நினைவிற்கு வரும் அளவு அவர்கள் அங்கே மிகுந்து காணப்படுவார்கள். அதைப் படத்தில் பிரதிபலிப்பது போல் செந்தில் நாதனாக சிவ கார்த்திகேயனும், சொப்ன சுந்தரியாக ஓவியாவும் நடித்துள்ளனர். சிவ கார்த்திகேயன் தொலைக்காட்சியில் என்னச் செய்கிறாரோ அல்லது எப்படிப் பேசுகிறாரோ அப்படியே தோன்றுகிறார். மெரினாவிற்கு வந்து செல்லும் காதலர்களின் காதல் தீவிரமற்றதாக இருக்கும் என்பது போன்றே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சொப்ன சுந்தரிக்கு உணவுப் பொருளின் மேலுள்ள ஆர்வத்திற்கு அழுத்தம் அதிகமாக தரப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக பெண்கள் ஆண்களின் பணத்தில் சாப்பிட விரும்புவது (அதாவது ஆணின் பர்சை காலி செய்ய நினைப்பது) போன்ற அர்த்தம் தொனிக்கிறது. அல்லது நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகள் என சுலபமாய் கடந்து செல்லலாம்.

‘பக்கோடா’ பாண்டியின் பெயர் தான் படத்தில் முதலில் போடுகின்றனர். படம் முழுவதும் வரும் பிரதான பாத்திரம் அம்பிகாபதி ஆக நடித்திருக்கிறான். இவனது வருகையில் இருந்து தொடங்கும் படம் இவனைக் கொண்ட காட்சியிலேயே முடிகிறது. ஆக படத்தின் நாயகன் எனக் கொள்ளலாம். பசங்க படத்தில் நகைச்சுவைக்குத் துணை செய்த பாத்திரத்தில் நடித்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. படிக்கணும் என்ற விருப்பம் உள்ளவனாக தெரிகிறானே தவிர படிப்பின் அவசியம் பற்றித் தெரிந்தவனாக சித்தரிக்கப்படவில்லை. ‘நாம் ரெண்டுப் பேரும் ப்ரெண்ட் -ஷிப் வச்சுக்கலாமா?’ என கேட்டு கேட்டே நண்பர்களை சுலபமாக பெருக்கிக் கொள்கிறான். களவில் ஆர்வமில்லாதவனாகவும், பிறர் பொருளின் மீது அக்கறை அற்றவனாகவும், அப்பொருள் உரியவருக்கு கிடைக்கணும் என்ற பொறுப்புணர்வும், உரியவரிடம் தான் ஒப்படைக்கிறோமோ என சோதித்தறியும் தெளிவு உடையவனாகவும் உள்ளான். நண்பனான கைலாசத்தைப் படிக்க தூண்டுவதும், பெட்ரோல் திருடும் சிறுவன் திருந்தும் வரை அவனை நண்பனாக ஏற்றுக் கொள்ளாதது என நாயகனுக்குரிய மொத்த நல்ல குண நலங்களும் நீக்கமற பெற்றவனாக உள்ளான்.

மருமகளின் பேச்சைக் கேட்டு பொறுக்க முடியாமல் திருச்சியில் இருந்து சென்னைக்கு எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறார் ஒரு பெரியவர். இந்தப் பெரியவரின் பாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. அவரின் மனப் போக்கு படத்தில் மிக துல்லியமாக பதியப்பட்டுள்ளது. சிறுவர்கள் தன் கைகளால் கோப்பைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தான் பிச்சை எடுப்பது அறிந்து தன் மகன் கூனிக் குறுக வேண்டும் என்ற கோபமும், எவரிடமும் கையேந்தாமல் உழைக்கணும் என்று முடிவெடுத்து புல்லாங்குழல் விற்பதும் என அவரின் மனநிலை மட்டும் சரியாக பதியப்பட்டுள்ளது. மற்ற பாத்திரங்கள் வாடி உதிரும் பூக்கள் போல மனதில் பதியாமல் நழுவி விடுகின்றனர். சமீப காலமாக திரைப்படங்களில் மனம் பிறழ்ந்தவர்கள் பற்றிய பதிவுகள் பதியப்படுகிறது. உ.தா.: போராளி, மெளனகுரு. எப்பொழுதும் போல் மேலோட்டமாகவே தான் இப்படத்திலும் பதியப்பட்டுள்ளது. அல்லது ‘நான் கடலை வாடகைக்கு விட்டிருக்கிறேன்’ என்று நகைச்சுவைக்கு உதவும் அளவில் மட்டுமே.

தனது ஒரே மகனை மகிழ்விப்பதற்காக பெரும் பாடுபட்டு கைலாசம் என்னும் சிறுவனைப் பிடிக்கிறார் திண்டுக்கலைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி. பார்வையாளரிடம் ஓர் அற்புதமான உணர்வினைத் தர வேண்டிய காட்சி அது. அவ்வதிகாரி வலிந்து பேசும் வசனங்களால் அவற்றின் தன்மை சாதாரணமாகி விடுகிறது. தன் மகளை ஆட வைத்து பாடல் பாடிப் பிழைப்பவர் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இயல்பாய் இல்லாமல் திணிக்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளே மிகுந்து காணப்படுகின்றன. அவற்றை தவிர்த்திருத்தால் படத்தின் தீவிரத்தன்மை மிகுந்திருக்கும். படம் பார்வையாளனை வசிகரீத்து உள்ளிழுக்கவில்லை. கதை என்று ஏதுமில்லை. மெரினா கடற்கரையைச் சார்ந்த ஒரு  வாழ்க்கை முறையைப் பற்றியது எனக் கொள்ளலாம். அதுவும் முழுமையற்றதாகவே தோன்றுகிறது. அங்கே நிலவும் வாழ்க்கை முறையை முழுவதும் பிரதிபலிப்பது சிரமம் எனினும் ஒன்றைப் பற்றியோ அல்லது ஒருவரைப் பற்றியோ படம் நகரவில்லை.

‘பசங்க ப்ரொடெக்ஷன்ஸ்’. பாண்டிராஜே தயாரித்து இயக்கியுள்ளார். வன்முறையைத் தொடாத மற்றொரு தமிழ்ப் படத்தை சாத்தியமாக்கி உள்ளார். பெரிய நட்சத்திரங்களை நம்பாமல், குத்துப் பாடல் இல்லாமல் என கிட்டத்தட்ட அவரது முதல் படம் போல் வர வேண்டியது. சுவாரசியம் என்பதோ, அடுத்த என்ன என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகளோ படத்தில் கிஞ்சித்தும் இல்லை. இயல்பான நகைச்சுவை இல்லாதததும் குறையாக உள்ளது. இலக்கிய அழகோடு சில காட்சிகள் இருந்தாலும் ஒட்டுமொத்த படம் ஆக பார்க்கும் பொழுது சிலாகிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு நேர்த்தியாக உடையணிந்து வந்த தன்னை சிறுவர்கள் பரிசளிக்க அழைப்பனர் என்ற எதிர்பார்ப்பு பொய்க்கும் பொழுது, பெரியவர் தன் ஏமாற்றத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். எங்கே அது பார்வையாளர்களுக்கு புரிந்து விடுமால் போய் விடுமோ என்று வசனங்களாக அந்த ஏமாற்றத்தைச் சொல்கிறார். காட்சியாக ஒளிர்ந்த அந்நிகழ்வு வசனத்தில் சோடைப் போகிறது. வசனங்கள் இப்பபடத்தின் பெரும் பலவீனம் என்று படுகிறது. இசையமைப்பாளர் கிரிஷ்ஷின் பிண்ணனி பிண்ணனி இசை உறுத்தாமல் ஒலிக்கிறது. ந. முத்துகுமாரின் பாடல் வரிகளில் ‘வணக்கம் சென்னை’ பாடல் இனிமையாய் ஒலிக்கிறது. விஜய்யின் ஒளிப்பதிவில் கடற்கரை மண்ணில் நிகழும் ஓட்டப் பந்தயம், குதிரைப் பந்தயம் எல்லாம் அழகாய் தெரிகிறது.

மெரினாதபால்காரர் சிறுவர்களை மகிழ்விக்க அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்புகிறார். அதில் ஆளுக்கு ஐம்பது ரூபாய் வேறு வைத்திருப்பார். வாழ்வை இத்தகைய திடீர் ஆச்சரியங்கள் தான் உயிர்ப்புள்ளதாய் வைத்திருக்க உதவுகிறது.

Leave a Reply