Search

மெளனகுரு விமர்சனம்

Mouna Guru
 

மெளனகரு – ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.

பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

மருத்துவ மாணவி ஆர்த்தி ஆக இனியா. படத்தின் நாயகி என்றே சொல்ல முடியாது. திரையில் மட்டுமே தோன்றக் கூடிய பெண் போலில்லாமல் அன்றாட வாழ்வில் நாம் காணும் எண்ணற்ற கல்லூரிப் பெண்களில் ஒருவராக தெரிகிறார்.  எந்தவித பூச்சுகளும் அற்று நெற்றியில் பருக்கள் கொண்ட பெண். நாயகன் மீது அக்கறை ததும்பும் பாசாங்கற்ற பார்வைகள். வெளிநாடுகளுக்கு சென்று இறுக்கமான ஆடைகளுடன் ஆடிப் பாடாத தமிழ்ப்பட நாயகி. சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் இல்லை எனினும் அவர் நெற்றியில் உள்ள உறுத்தாத பருக்கள் போல அழகான திரைக்கதையில் உறுத்தாமல் வந்து செல்கிறார்.

படத்தில் இரு வேடங்களில் கலக்கிய ஜான் விஜய் இப்படத்தில் காவல்துறை உதவி ஆணையராக மிரட்டி உள்ளார். ஒரு கொலையைச் செய்து விட்டு பிறகு மாட்டிக் கொள்வோமோ என ஒவ்வொரு முறை தவறு செய்யும் பொழுதும் கலக்கமுறுகிறார். ‘நமக்கு நேரம் சரி இல்லையோ!?’ என தன்னைத் தானே நொந்து கொள்கிறார். அதிகாரத்தைத் தவறாக உபயோகப்படுத்தி விட்டு மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.

ஆய்வாளர் பழனியம்மாள் ஆக வரும் உமா ரியாஸ் கான் அருமையாக நடித்துள்ளார். கர்ப்பிணி ஆக வருபவர் வழக்கை ஆராய்ந்து நூல் பிடித்து உதவி ஆணையரை நெருங்கும் விதம் அருமை. ஒருபுறம் காவல்துறை மேல் கலக்கத்தை உண்டு பண்ணுவது போல் உதவி ஆணையர் நடந்து கொண்டாலும் தனது ஆளுமையால் நிதானமாகக் காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படச் செய்கிறார். வழக்கை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் நேரும் பொழுது அமைதியாகப் பரிதவிப்பையும் வெளிப்படுத்துகிறார். கல்லூரி முதல்வரின் மகனை அமர வைத்து நிதானமாகக் கேள்வி கேட்கிறார். எதையும் நுணக்கமாகவும், தீவிரமாகவும் அணுகுகிறார். கண்டிப்பாக இப்படம் உமா ரியாஸ் கானுக்குப் பெயர் சொல்லும் நல்ல படமாக அமையும்.

கருணாகரனாக அருள்நிதி.  நாயகத்தனம் இல்லாத ஒரு படத்தில் சரியாகப் பொருந்துகிறார். பெரும்பாலும் மெளனமாக, நிலைமை கை மீறும் பொழுது செயல்படத் தொடங்குகிறார். முகத்திற்கு நேராகத் துப்பாக்கி பிடிக்கப் படும்பொழுதும், மனநிலை மருத்துவமனையில் சிக்கித் தவிக்கும் பொழுதும், அனைவரும் இவரை நம்ப மறுக்கும் பொழுது அருள்நிதி பரிதாபப்பட வைக்கிறார். படத்தின் இறுதிக் காட்சிகளின் நீளம் அதிகமாக உள்ளது. எதார்த்தமாகச் செல்லும் படத்தின் முடிவிலும் தர்மத்தைக் காப்பாற்றி விடுகிறார் இயக்குநர் சாந்தகுமார். எனினும் சராசரி தமிழ்ப் படத்தைத் தராததற்குப் பாராட்டப்பட வேண்டியவர். கதாப்பாத்திரத் தேர்வைச் செதுக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். வெறும் பார்வைகளாலேயே நாயகனின் அண்ணி் குணத்தைச் சித்தரித்து இருப்பது; ‘கைலி கட்டிக் கொண்டும்; கருப்பாகவும் இருந்தால் விசாரிக்காமலேயே அடிப்பீங்களா!?’ என்று கோபப்படும் கல்லூரி விடுதிப் பொறுப்பாளர் ஜார்ஜ் மரியான்; பொறாமையும், வஞ்சக எண்ணமும் கொண்ட நாயகனின் சக வகுப்பு மாணவன்; குற்றவுணர்வுடன் கல்லூரி முதல்வர்; நிராகரிக்கப்படும் வலியுடன் கல்லூரி முதல்வரின் மகன்; உதவி ஆணையர் மீது எரிச்சலுறும் காவல்துறை அதிகாரி; காவல்துறையினருக்குப் பிரதியுதவி செய்ய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மனநல மருத்துவமனை மருத்துவர் என இயக்குநர் பார்த்துப் பார்த்து ஆட்களையும் அவர்களின் குண நலன்களையும் சித்தரித்துள்ளார். போகிறப் போக்கில் சர்வ சாதாரணமாய்க் கொலைகள் நடப்பதாகக் காட்டி வரும் தமிழ்த் திரைப்படங்கள் மத்தியில், ஒரு கொலையைச் செய்து விட்டு உதவி ஆணையர் படும் அவஸ்தைகளை அழகாகக் காட்டியுள்ளனர். அதிகாரம் தவறாக உபயோகப்படுத்தும் பொழுது சராசரி ஆட்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் படத்தில் காட்டி உள்ளனர். பேசிப் பேசிப் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் மெளனமாக இருப்பது சிறந்தது எனினும் மெளனமாகவே எப்பொழுதும் இருந்து விட முடியாது. மேலும் மெளனங்களைச் சரியாக புரிந்து கொள்ள எத்தனை பேரால் முடியும் என்பதும் ஐயமே!!
Leave a Reply