Shadow

மோதி விளையாடு விமர்சனம்

Modhi-vilayadu“மோதி விளையாடு” என்ற பெயரைப் பார்த்தவுடன், மீண்டும் தமிழில் ஒரு அழகான அதிரடிப் படம் வால் பிடித்து தொடர்கிறது என்று எண்ண தோன்றியது. சுவரொட்டிகளும் அதை பிரதிபலித்தன. இயக்குனர் சரணின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பும் கை கோர்த்து கொண்டது. விஜய்யின் ‘விஷ்ணு’ படமும் ப்ராஷாந்தின், ‘ஸ்டார்’ படமும் ஞாபகத்தில் வருகிறது என்றாலும் வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர்.

வழவழப்பான ஹெலிகாப்டர்களும், சொகுசு கார்களும், கண்ணாடி மாளிகை அலுவலகமுமாக ஹாலிவுட் அளவிற்கு படம் தொடங்குகிறது. அதன் உரிமையாளராக பணமே லட்சியமென ஓடும் கலாபவன் மணி அறிமுகமாகிறார். கார் ஓட்டுநர், கதவை திறக்கும் காவலாளி, பணி புரியும் பெண் ஊழியரென அனைவரிடமும் தனது கதாபாத்திரத்தின் வில்லத்தனத்தை ரசிகர்களுக்கு புரிய வைக்க மெனக்கெட்டு தனது நேரத்தை ஒதுக்கி, அவரது பாணியில் பேசி மனம் நோக செய்கிறார். கலாபவன் மணிக்கு அது பொருந்தினாலும், அவர் ஏற்றிருந்த பெரும் பணக்காரர் வேஷத்திற்கு அது பொருந்தவில்லை.

ஏழையாக நடிக்கும் கதாநாயகனே கனவில் வெள்ளைக்காரிகள் படை சூழ ஏதாவது தீவு ஒன்றில் புரியாத வார்த்தைகள் கொண்ட பாடலிற்கு ஆடுவார். அவர்களே அப்படி என்றால், பெரும் பணக்காரரின் ஒரே மகனான வினய் வாழ்க்கையையே கனவு போல் வாழ்கிறார். வினய்யை சுற்றி எப்பொழுதும் பாதுகாப்புக்கு ஆட்கள் உள்ளனர். அவருடன் ஒரு நண்பர் தம்பி போல் வளர்கிறார்.

எல்.ஆர். ஈஸ்வரி என்ற பெயரில் ‘காஜல் அகர்வால்’ கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் உலக ஒருமைப்பாட்டை காட்டும் விதமாக இரு வெளி நாட்டவர் தங்கியுள்ளனர். ஆனால் சொல்லி கொள்ளும் படி அவர்களை படத்தில் உபயோகப்படுத்த படவில்லை. ஒருவன் மீதும் கோபமாக சாலையில் கிடக்கும் குளிர் பான டப்பாவை எறிய அது காரில் சென்றுக் கொண்டிருக்கும் வினய் மீது பட்டு அவரது கார் கம்பம் ஒன்றில் மோதி நிற்கிறது. அந்த உயர் ரக “ஃபெர்ராரி” கார் ஒடுக்குகளை நிமிர்த்த 3 லட்சம் செலவு ஆகிறது. அதை வேலை செய்தே கழிக்கிறார் கதாநாயகி. மிகவும் ‘காஸ்ட்லி’ வேலைக்காரி. ஒரு தடவை தரையை சுத்தம் செய்வதற்கு 10,000 ரூபாய். அதிசியிக்க வேண்டாம். இது பெரிய இடம் அல்லவா?

கதை:

கலாபவன் மணியின் எதிரிகள் அவரது மகனை கொலை செய்ய முயலுகின்றனர். அதில் வினய் உடன் உள்ள நண்பர் ஒருவர் இறக்கிறார். இறந்தவர் தான் உண்மையிலயே கலாபவன் மணியின் மகன் என்றும், வினய்யை எதிரிகளுக்காக பலி கொடுக்க வளர்க்கப்படுவதும் வினயிற்கு தெரிய வருகிறது. அவர் எப்படி எதிரிகளிடம் இருந்து தப்பித்து, கலாபவன் மணி கொடுக்கும் தொந்தரவுகளையும் சமாளிக்கிறார் என்பது தான் கதை.

நகைச்சுவை:

மற்றவர்களை கலாய்ப்பதை நகைச்சுவை என நினைத்து ‘மொக்கை’ போடும் சந்தானம் இப்படத்திலும் அதையே செய்து கடி கிளப்புகிறார். பணக்காரர் என பந்தா காட்டும் ஹனீபா, அவரது ‘மேன்பவர் கம்பெனி’யில் சிவப்பு ரத்தின கம்பளம் விரித்து வினையை வரவேற்கும் பொழுதும் பந்தா குறையாமல் பார்த்துக் கொள்கிறார். மயில்சாமி கிராமத்துவாசியாக வந்தாலும், பட்டணவாசியாக இருந்தாலும் எப்பவும் குடிக்காரர் வேடத்திலேயே வருவது.. ஏனென்று தெரியவில்லை?

புதிர்கள்:

* எப்பொழுதும் வினய் உடன் இருக்கும் பாதுகாப்பு ஆட்கள், கதாநாயகி அறிமுகத்தின் பொழுது இல்லாதது?

* கதாநாயகியின் பணக்கார தந்தை, நடுத்தர வர்க்கத்து தந்தை போல் மகள் கல்யாணத்தை பற்றி கவலைப்பட்டு வினய் உடன் சேர்த்து வைக்க பார்ப்பது?

* கதாநாயகி ஆபத்தில் இருக்கும் பொழுது, வினய் சரியாக வருவது? (ஓ.. இது தமிழ் படம் இல்ல. அப்ப சரி!!)

* மிக நயமாக திட்டம் தீட்டும் கொலையாளி, கடைசியில் தனியாக கலாபவன் மணி அலுவலகத்தில் சுலபமாக நழைந்து மாட்டுவது?

லாஜிக் மீறல்களும், தமிழ் சினிமாவும் பிரிக்க முடியாதது என்பதற்கு இப்படமும் ஓர் எளிய உதாரணம். ரசிகர்களை சரண் திருப்திப்படுத்தி உள்ளாரா என்பதும் சந்தேகம் தான்.

Leave a Reply