Shadow

வந்தா மல விமர்சனம்

வந்தா மல விமர்சனம்

யாரோ ஒருவரைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினால், இரண்டு கோடி ரூபாய் கிடைக்குமென செயின் திருட்டில் ஈடுபடும் நான்கு நண்பர்களுக்குத் தெரிய வருகிறது. அந்த முயற்சியில், செயின் திருடர்களுக்குக் கிடைத்தது மலையா முடியா என்பதுதான் படத்தின் கதை.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு எந்தெந்த விஷயத்திற்காகவெல்லாம் மனநலம் பாதிக்கப்படும்? இந்தப் படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உண்டு. ‘புகை பிடிக்க அரசு தடை விதித்ததால், புகை பிடிக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி’ இளங்கோவாக வருகிறார் மகாநதி ஷங்கர். இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் படம் நெடுகும் ஈர்க்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட அதிகாரியுடன் இருந்தும், நண்பர்களுக்காகப் பரிந்து பேசியும் அவஸ்தைப்படும் கான்ஸ்டபிள் பெருமாளாக கவனிக்க வைக்கிறார் செளகத்.

Vandha Mala Priyanka‘கலாபக் காதலன்’ இயக்கிய இயக்குநர் இகோரின் கதாப்பாத்திரத் தேர்வுகள் அனைத்துமே கச்சிதமாக இருந்தாலும், நாயகி வசந்தாவாக நடித்திருக்கும் ஸ்ரீ ப்ரியங்கா அசத்தியுள்ளார். கார முத்தம் தருவது, தைரியமாகப் பேசுவது, நள்ளிரவில் நாயகன் படியேறித் தயக்கமின்றி தன் மனதில் இருப்பதைச் சொல்வது, தாமாவின் திருட்டுத்தனத்தைத் தெரிந்து திட்டுவது என ப்ரியங்காதான் படத்தின் மைய ஈர்ப்பாக இருக்கிறார். அதே போல், படத்தின் திரைக்கதையை விட வசனங்களே பெரிதும் கவருகிறது.

தாமாவாக தமிழ் நடித்துள்ளார். அவரும் அவர் நண்பர்களாக நடித்துள்ள உதயராஜ், ஹிட்லர், பிரசாத் ஆகிய நால்வருமே படத்தின் நாயகர்கள்தான். இவர்களுடைய வாழ்க்கை, தொழில், தாமா – வசந்தா காதல் எனப் போகும் படத்தில்.. தேசிய பாதுகாப்பு, இராணுவம் என பெரியப் பெரிய விஷயங்கள் நுழைகிறது. அதற்கான களமோ, பட்ஜெட்டோ, சீரியஸ்னஸோ படத்தில் இல்லாததால், அவை படத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்து விடுகிறது.

பெரும்பாலான தமிழ் சினிமாவில் திருநங்கைகள் எப்படிப் பார்க்கப்படுகிறார்களோ, அதே போல்தான் இப்படத்திலும் திருநங்கை மலாய்கா அறிமுகமாகிறார். ஆனால், பீட்டர் பிரகாஷாக அவர் மலையை இழக்க நாயகர்களுக்கு உதவுவதாகச் சித்தரிப்பது ஆறுதல் அளிக்கிறது.

படத்தின் இன்னொரு சுவாரசியம், படத்தின் தலைப்புப் போட்டவுடனே சாம் டி.ராஜ் இசையில் வரும் ரீ-மிக்ஸ் பாடல். பராசக்தி படத்துக்காக கலைஞர் எழுதிய, ‘தேசம் ஞானம் கேள்வி பாடல்தான் அது. அப்பாடலுக்கு, பராசக்தி சிவாஜி போல் தொப்பி போட்டுக் கொண்டு நடனமாடும் சரத்தின் முக பாவனைகள், படத்தின் மைய கதாப்பாத்திரங்களைப் பார்த்துப் பாடுவது போல அமைந்துள்ளது சிறப்பு. எனினும் மலையை இழுப்பதற்கான அம்சங்கள் குறைவே.!

Sarath Chandar