
மீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார் சற்குணம்.
ஓர் ஊரின் குடிநீர் ஆதாரம் மற்றொரு ஊரின் ஆளுகைக்குள் உள்ளது. அவ்விரு ஊர்களுக்கிடையில் மூளும் வெறுப்பின் முடிவென்ன என்பதுதான் படத்தின் கதை.
சிங்கப்பூருக்கும் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பின் பின்னணியை நேர்த்தியாக நாயகனின் அறிமுகத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பின் படத்தில் எந்த சுவாரசியுமும் இல்லாமல் இடைவேளையின் பொழுதே கதை தொடங்குகிறது. அதர்வா, ஆனந்தி காதல் காட்சிகள் ஈர்க்கத் தவறுவதால், படத்தில் ஒன்ற சிரமமாய் இருக்கிறது.
கவுன்சிலராகவும், நாயகியின் தந்தையாகவும் லால் நடித்துள்ளார். போலிஸ் ஜீப்பை தண்ணிக்குள் தள்ளிவிட்டு, காவல்துறை அதிகாரியை எச்சரிக்கும் அளவு மிக வலுவான கதாப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறார். க்ளைமேக்ஸில் அந்த சித்தரிப்பு அவசர அவசரமாக வலுவிழக்கிறது. படம் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நீளம் கொண்டதுதான் எனிலும், நீண்ட நேரம் படம் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வினைத் தருகிறது. களவாணியைப் போலவே படத்தின் முடிவு சுபமாகவும் கலகலப்பாகவும் இருந்தாலும், சண்டி வீரன் மனதைக் கவராமல் சண்டித்தனம் செய்கிறது.
முத்தையாவின் ஒளிப்பதிவில் மருத நிலத்தின் அழகினை திரைக்குக் கொண்டு வந்துள்ளார் சற்குணம். நாயகன் தனது கிராமத்தைக் காப்பாற்ற அவசரமாக ஓடுகிறான். அதற்கான பின்னணி பாடல் ஒலிக்கிறது. இடையில் நாயகியைப் பார்த்து விடுகிறான். உடனே காதல் சார்ந்த சோகப் பாடல் ஒலிக்கிறது. இடைவெளி இல்லாத இந்தத் தாவுதல்தான் படத்தின் பலவீனம். நாயகனை தியாகியாகவும், பரிதாபத்துக்குரியவனாகவும் சித்தரிக்க வைக்கப்படுள்ள காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இடைவெளிக்குப் பின்னான படம், கொஞ்சம் பதற்றத்தை உருவாக்குகிறது. ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் இன்னொரு ஊரை அழிக்கத் திட்டமிடுகின்றனர். ஆட்கள் குவிவதும், பெட்ரோல் குண்டுகள் தயாரிக்கப்படுவதும், எப்படித் தடுப்பதெனத் தெரியாமல் நாயகன் தடுமாறுவதும் போன்ற காட்சிகளில் நம்மை ஒன்ற வைத்துவிடுகின்றனர். ஆனால் அது படம் முழுவதும் இல்லாதது ஒரு பெரும் குறை.


