Shadow

வாயை மூடி பேசவும் விமர்சனம்

வாயை மூடி பேசவும் விமர்சனம்

இயக்குநர் பாலாஜி மோகன் அசத்தியுள்ளார்.

பனிமலை என்னும் ஊரில் மனிதர்களை ஊமையாக்கிவிடும் விநோதமான வைரஸ் பரவுகிறது. பேசுவதால் அவ்வைரஸ் பரவுகிறது என்பதால், அவ்வூரில் பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துவிடுகிறது அரசு. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். பேசியே ஆளைக் கவிழ்க்கும் சேல்ஸ் மேன் பாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்துகிறார். பேசிப் புரிய வைக்க முடியாத விஷயமே உலகில் இல்லை என நம்பும் குணாதிசயம் கொண்டவன் அரவிந்திற்கு நேரெதிர் பாத்திரத்தில் நஸ்ரியா நசிம். பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததற்கு மகிழும் அஞ்சனாவாகக் கலக்கியுள்ளார். தானே வகுத்துக் கொண்ட மனத்தடைகளில் சிக்கி உழல்பவரை, அரவிந்த் தான் மீட்கிறான். வழக்கம்போல் காதல்தான் என்றாலும், சலிப்பு ஏற்படுத்தாமலும் உறுத்தாமலும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

‘மட்டை’ ரவியாக வரும் ரோபோ ஷங்கர் படத்தின் கலகலப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்கிறார். பூமேஷ் எனும் நடிகரின் படத்தில் குடிக்காரர்களைப் பற்றித் தவறாகச் சித்தரித்துவிடுவதால், தமிழ்நாடு குடிக்காரர்கள் சங்கத் தலைவரான மட்டை ரவிக்கு கோபம் வந்துவிடுகிறது. படத்தை தடை செய்யக் கோருவதோடு, பூமேஷ் நடித்துவரும் படப்பிடிப்பு தலத்திற்கே சென்று குடித்துப் போராட்டம் செய்கின்றார். குடிக்காரர்களை எப்படி நல்லவிதமாக படத்தில் காட்டலாம் என ரோபோ ஷங்கர் சொல்லும் யோசனைகள் அசத்தல். குடிக்காரர்களைப் பெருமைப்படுத்தும்விதமாக, ‘7ஆம் ரவுண்ட் (ஏழாம் அறிவு)’, ‘மில்லி (கில்லி)’ என படத்தின் தலைப்புகளைப் பரிந்துரைப்பது அட்டகாசம். போராட்டத்திற்காக கூட்டமாகக் கிளம்பிவிட்டு, கை உதறத் தொடங்கிவிடுவதால், போராட்டத்தை அடுத்த நாள் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் குடிக்கச் செல்வது செம காமெடி! ரோபோ ஷங்கரை நன்றாக உபயோகித்துள்ளார் இயக்குநர்.

Nazriya Nazim‘நியூக்ளியர் ஸ்டார்’ பூமேஷாக ஜான் விஜய். அதிகம் நடிக்க வாய்ப்பில்லை எனினும், வருகின்ற சில காட்சிகளிலும் அசத்துகிறார். எழுத்தாளர் வித்யாவாக மதூ (மதுபாலா) நடித்துள்ளார். தனது மகன் வீடியோ கேமை வாங்கிக் கொள்ளாமல் ஸ்கெட்ச் பேனாக்களை வாங்கியதும், அவருக்கும் எழுதும் ஆர்வம் வந்துவிடுகிறது. அவரது மகனுக்கு வரைவதிலுள்ள ஆர்வத்தைச் சொல்வதோடு மட்டுமில்லாமல், அவனுக்கு படி, படியென அழுத்தம் தராமல் இருக்கும்படியும் மதூவிடம் சைகை செய்கிறான் அரவிந்த. படத்தின் இரண்டாம் பாதியில் வசனமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநரின் இந்த தைரியமான முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சீன் ரோல்டனின் இசைதான் வசனங்களற்ற காட்சிகளையும் அந்தக் குறை தெரியாமல் நகர்த்துகிறது. படத்தில் குறைவான லோக்கேஷன்கள்தான் எனினும் R.செளந்தர் ராஜனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம்.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டாலோ, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டாலே திருதிருவென விழித்து, பதில் சொல்லுகிறேன் எனப் பேசிச் சொதப்பும் சுகாதாரத்துறை அமைச்சராக பாண்டியராஜன். இதே போல் பேசிச் சொதப்பும் இன்னொரு பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நாயகனின் நண்பனாக வரும் அர்ஜுன்.

நியூஸ் சேனல்களை பயங்கரமாகக் கலாய்த்துள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன். கீழே ஸ்க்ரோலாகும் செய்திகளிலுள்ள எழுத்துப் பிழைகள்தான் அதில் ஹைலைட். ஆனால் படத்தின் தலைப்பிலேயே, “ப்” விட்டுவிட்டார் என்பதுதான் இதில் நகைமுரண். ரேடியோ ஜாக்கி பாலாஜிக்கு குரல் போனதை சில தயாரிப்பாளர்கள் ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடினர் என போகிறப்போக்கில் இயக்குநர் செய்யும் குசும்பும் ரசிக்க வைக்கிறது. அனைத்துக்கும் முத்தாய்ப்பாக.. படம் முடிந்து இயக்குநர் பெயர் வரும் பொழுது, ‘காலையில் சரக்கடிக்கப்பது எப்படி?’ என அவரது முதல்படத் தலைப்பினைக் கொண்டு தன்னைத் தானேயும் கலாய்த்துக் கொள்கிறார் பாலாஜி மோகன்.