Shadow

வீரம் விமர்சனம்

தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது.

அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை.

விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர்.

Veeram Balaபடத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக்கம் ஒதுங்கி ஆள் அடையாளமே தெரியாமல் நான்கு வருடங்களுக்குப் பிறகு தமிழில் தோன்றுகிறார். இரண்டாவது தம்பியாக ‘மைனா’ புகழ் விதார்த். மேலும் இரண்டு புதுமுக தம்பிகள். ஆனால் படத்தில், ‘முத்துக்கு முத்தாக’ என்பதுபோல் சகோதரத்துவப் பாடலெல்லாம் இல்லை. தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் சோபிக்காவிட்டாலும், ‘ரதகஜ துரக பதாதிகள் எதிர்த்தினும் அதகளம் புரிந்திடும் வீரம்’ என்ற பேக்-கிரவுன்ட் தீமில் பட்டையைக் கிளப்பிவிட்டார்.

கோப்பெரும்தேவியாக தமன்னா. ‘ஐய்யோ’ என்பது போன்ற ரியாக்ஷனோடே படம் நெடுக்க வருகிறார். அஜித்தின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் முன் தமன்னா உட்பட அனைவருமே பொலிவிழுந்து விடுகின்றனர். போகிறபோக்கைப் பார்த்தால், அஜித்தை இரண்டரை மணிநேரம் நடக்கவிட்டே கல்லா கட்டிவிடுவார்கள் போல!

விஜய் சேதுபதியின் ‘ப்பாஆ’ என்ற பாவனையை.. ஜில்லாவில் விஜய்யும், வீரத்தில் அஜித்தும் செய்கின்றனர். வழக்கமாக ரஜினி ஸ்டைலை காப்பியடிப்பார்கள். இப்பொழுது கீழிருந்து மேலாக நிலைமை மாறுகிறது. இந்த ஆரோக்கியமான மாற்றம் பெரிய நடிகர்களின் கதைகளிலும் பிரதிபலித்தால் நன்றாக இருக்கும்.

இயக்குநர் சிவா அதிக சிரத்தையின்றி அஜித்தை வைத்து பொங்கலை கொண்டாட்டமாக்கிவிட்டார். அஜித் ஸ்க்ரீனில் வராத காட்சிகளை சமாளிக்க, பெயில் பெருமாளாக சந்தானத்தை களமிறக்கிவிட்டார். சென்றாண்டு தீபாவளியைப் போல, இந்தாண்டு களைகட்டுகிறது ‘தல பொங்கல்’.

Leave a Reply