
சுந்தர பாண்டியன், பிரம்மன் என நண்பர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதர், வெற்றிவேலாக மாறி, தன் தம்பியின் காதலுக்காக எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் கதை.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசுவும், நாட்டுச்சாலை பிரசிடெண்ட்டாக நடித்திருக்கும் பிரபுவும் தான் கதையின் நாயகர்கள். ஆனால், படத்திற்கு உயிரூட்டியுள்ளதோ விஜி சந்திரசேகர் மட்டும்தான். ‘நாங்க இருக்கும் வரை காதல் சாகாது’ என நாடோடிகள் குழு விஜய் வசந்த், பரணி ஆகியோருடன் சமுத்திரக்கனியும் இறங்கி அதகளப்படுத்துகிறார். படத்தின் பலம் அதன் துணை நடிகர்கள் என்றே சொல்லவேண்டும்.
சசிகுமாரின் தம்பியாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். நாயகனின் அறிமுகத்தை விட இவரது அறிமுகம் நன்றாக இருப்பதோடு, கதையோடும் பொருந்தியும் வருகிறது. சசிகுமாரின் நடனம் ப்பாஆஆ..! மலையாளி ஜனனியாக மியா ஜார்ஜ். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிகிலா விமலுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ‘ஒத்தாசை’யாக தம்பி ராமையா. நகைச்சுவை எனும் பெயரில், அவரை வைத்துத் தேவைக்கு அதிகமாகவே எல்லை மீறியுள்ளனர். அவரது இளம் மனைவி வாடாமல்லியாக நடித்திருப்பவரின் முகத்தைக் காட்டாமலே காட்சிப்படுத்தி இருப்பது ஆறுதலான விஷயம்.
ஹீரோ அறிமுக பாடல், அபத்த நகைச்சுவை, ஹீரோவின் காதல் ட்ராக் என படம் ஒரு பெரிய “U” போட்டு விட்டு சமுத்திரக்கனியின் என்ட்ரியில் கதை தொடங்குகிறது. அதன் பின் சசிகுமாரிடம் இருந்து படத்தை மீட்டு துணை நடிகர்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். க்ளைமேக்ஸில் மீண்டும் சசிகுமாரைக் கொண்டு வந்து, ஒரு ரத்தக்களறி சண்டையோடு சுபமாக்கிவிடுகிறார் இயக்குநர் வசந்தமணி.