Shadow

ஹரிவராசனம் – தமிழில்

[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube]
எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய “ஹரிவராசனம்” பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர். 

இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே இன்றும் சபரிமலையில் நடைசாத்தும் பொழுது தாலாட்டுப் பாட்டாக ஒலிபரப்பப்படுகிறது. 

கே. ஜே. யேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குரலும் அளவான இசையும் நம்மை மயங்கவைக்கிறது என்பது நிச்சயம். நான் ரசித்த இந்தப்  பாட்டுக்கு தமிழில் அர்த்தம் எழுதியிருக்கிறேன். 

ஹரிவராசனம் விஸ்வமோஹனம் 
ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம் 
ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

உயர்வான ஆசனத்தில் அமர்ந்திருப்பவரும், உலகையே தன் புன்னகையினால் கவர்ந்திழுத்தவரும், ஹரிதம் என்கிற குதிரையில் பயணிக்கிறவரும், சூரியனே வணங்குகிற பாதங்களை உடையவரும், எதிரிகளை அழித்து தீராக் கொண்டாட்டமான ஆனந்த நடனத்தில் லயியித்திருப்பவருமான அரிஹர புத்திரரை சரணடைகிறேன்.

சரணகீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம் 
ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே  

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பக்தர்களின் சரண கோஷத்தை கேட்பதனால் மனம் மகிழ்பவரும், இந்த உலகை காத்து அருள்பவரும், ஆனந்த நடனத்தை கொண்டவரும், உதயசூரியனின் பேரொளியைப் போன்றவரும், பஞ்சபூதங்களின் தலைவரான ஹரி ஹரபுத்திரரை சரணடைகிறேன்.

ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம்,
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம் 
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சத்யகாவின் உயிர் நாயகனும், தன்னை நாடி சரணடைகிறவர்களுக்கு எந்தவித பாகுபாடில்லாமல் நலமும் வளமும் அருளும் ஆற்றல் கொண்டவரான, விரிந்து பரந்து எங்கும் நிறைந்தவரான,  இசையில் விருப்பமுள்ளவரான ஹரிஹர புத்ரனைச் சரணடைகிறேன்.

துரக வாஹனம் ஸுந்தரானனம் 
வரகதாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ப்ரியம் 
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி

குதிரையை வாகனமாய் கொண்டவரும், அழகிய வதனத்தை உடையவரும், கதாயுதத்தை ஏந்தியவரும், தேவாதி தேவர்களினால் ஆராதிக்கப் படுகிறவரும், குருவைப் போல அன்பு செய்பவரும், பாடல்களில் மனம் மயங்குகிறவருமான ஹரிஹர புத்திரரை சரணடைகிறேன்.

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி

மூவுலகிலும் உள்ளவர்களால் ஆராதிக்கப் படுகிறவரும், எல்லா தெய்வங்களின் அம்சங்களும் உடையவரும், மூன்று கண்களை கொண்டவரும், தலைவராவும், மேலான குருவாகவும், முப்பத்து முக்கோடி தேவர்களினால் ஆராதிக்கப் படுபவரும், வேண்டியதை உடனே அருள்பவருமான ஹரிஹர புத்திரரை சரணடைகிறேன்.

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோஹனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி

பிறவிப் பெருங்கடலில் சிக்கியவர்களின் பயத்தை போக்குகிறவரும், தன் பக்தனுக்கு அருள்வதில் தந்தையைப் போன்றவரும், இந்த பூவுலகை தன் மாயையினால் மோகம் கொள்ளச் செய்தவரும், விபூதி அணிந்தவரும், வெள்ளை யானையை வாகனமாய் கொண்டவருமான ஹரிஹர புத்திரரை சரணடைகிறேன்.

களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி

இனிமை ததும்பும் மென்மையான புன்னகையை ஏந்தியவரும், அழகிய வதனத்தை உடையவரும், இளமையும், மென்மையுமானவரும், மயங்க வைக்கும் மேனியழகைக் கொண்டவரும், யானை,சிங்கம்,குதிரை வாகனங்களை கொண்டவருமான ஹரிஹர புத்திரரை சரணடைகிறேன்.

ச்ரித ஜனப்ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம் 
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி

தன்னை சரணடைந்த மக்கள் மீது பேரன்பை பொழிபவரும், வேண்டியதை உடனடியாய் அருளுபவரும், வேதங்களை தன் ஆபரணங்களாய் கொண்டவரும், பரமாத்மாவானவரும், வேதங்களினால் மேன்மையாய் போற்றப் படுபவரும், இனிய கீதங்களில் பிரியமானவருமான ஹரிஹரபுத்திரரை சரணடைகிறேன்.

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.

– சிம்ம வாகனி

Leave a Reply