Search

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01

தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் ஆளை அசரடிக்கும் வகையில் விளம்பர பதாகைகள், போஸ்டர்கள். டிவியை திறந்தால் அதில் பிரபல நடிகர்கள் ஆளுக்கு ஒருவராய் நின்று கொண்டு வளைந்து நெளிந்து குழைந்து பேசி நடித்து ஆடிப் பாடி நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். செய்தித் தாளை புரட்டினால் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள். தள்ளுபடி, அள்ளுபடி என நீட்டி முழக்கி நம்மை ஒரு வழியாக்கி விடுகின்றன. இத்தனை ஆர்ப்பாட்டங்களும் நம் போன்ற சாமானியர்கள் வாங்கப் போகும் ஒருபவுன்,  அரைப் பவுன் நகைக்குத்தான் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.

ஒரு காலத்தில் பழமையான நிறுவனம், கைராசியான நிறுவனம், தரமான நிறுவனம், பாரம்பரியமான நிறுவனம் என்றெல்லாம் தங்களைப் பற்றி விளம்பரம் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று எப்படியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. உள்ளூர் வியாபாரிகளை விடுங்கள். ஆனானப்பட்ட டாட்டா நிறுவனத்தில் இருந்து பக்கத்து மாநிலத்து ஆலுக்காஸ்களும், உம்முடிகளும் நம் ஊரில் வந்து கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். விளம்பரங்களில் நடிக்கிறவர்களும் சாமானியர்கள் இல்லை. அமிதாப் பச்சன் துவங்கி உள்ளூர் விஜய் வரை வளைந்து நெளிந்து குழைந்து நகை வாங்க கூப்பிடுகிறார்கள். இதில் புரட்சி செய்ய கூப்பிடுகிறவர்களும் உண்டு.

பெரிய்ய பெரிய்ய ஷோரூம்கள், ஆளை அசத்தும் விளம்பரங்கள், அதில் நடிக்கும் நடிகர்களின் கோடிக் கணக்கான சம்பளங்கள், எல்லாவற்றிற்கும் மேலே தாங்கள் விற்கும் நகையின் செய்கூலி, சேதாரம் எல்லாத்தையும் கழித்துக் கொண்டு சகாய விலையில் கொடுப்பதற்காக போட்டிப் போடுகின்றனர் இந்த வியாபாரிகள். நிஜமாகவே புரட்சிதான் நடக்கிறதா? வேறு எந்தத் தொழிலிலும் இப்படிப் பட்ட புரட்சிகள் நடைபெறுவதாகத் தெரியவில்லையே! ஒரு வேளை இப்படி புரட்சி பண்ணினால் அந்த வியாபாரி தெருவுக்குத்தானே வர வேண்டியிருக்கும். நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கிறதா? நாம் வாங்கப் போகும் ஒன்னரை பவுன் ஜிமிக்கிக்கும், வளையலுக்கும் இதெல்லாம் அதிகம் என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா!

இந்தத் தொழிலில் அப்படி என்னதான் நடக்கிறது. இத்தனை பிரம்மாண்டமான படாடோபங்களின் பின்னால் இருக்கும் கட்டமைப்பு என்ன? வியாபாரி என்ன செய்கிறார்? இந்த வியாபாரிகளின் முதுகெலும்பாய் இருக்கும் பொற்கொல்லர்கள் என்ன செய்கிறார்கள்? இந்தப் பொற்கொல்லர்களின் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது? நிஜமாகவே இந்த வியாபாரத்தில் எல்லோரும் சுபிட்சமாய்தான் இருக்கிறார்களா? இதை எல்லாம் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம்.

உண்மையைச் சொல்வதும், உரக்கச் சொல்வதும் அடிப்படையில் வெவ்வேறானவை. உண்மையை உரக்கச் சொன்னால் அது பொதுநலம் ஆகிறது. அந்த வகையில் எனக்குத் தெரிந்த உண்மைகளை உரக்கச் சொல்லும் ஒரு சிறு முயற்சி. பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலை மட்டுமே அறிந்த ஒரு குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்தவன். நினைவு தெரிந்த நாள் முதலாய் இந்த ஒரு தொழிலை மட்டுமே அறிந்தவன் என்கிற தகுதியோடு எனக்குத் தெரிந்தவைகளை நான் வாழும் சமூகத்திற்கு சொல்வதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

ஒரு நகை  உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து நகைக்கடைக்கு வரும் வரை என்னென்ன நிலைகளை தாண்டி வருகின்றது. நகை வாங்க நினைக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

18 கேரட்/ 20 கேரட்/22 கேரட் என்பதென்ன ?  91.6 மற்றும் கேடியம் என்றால் என்ன? சேதாரம் என்பதை பற்றிய ஒரு முழு ஆய்வு! ஹால் மார்க் என்பதைப் பற்றிய விளக்கம்! கல்நகைகள்  பற்றிய விளக்கம் என இந்தத் தொழில் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றி இனிவரும் பதிவுகளில் விளக்கிட இருக்கிறேன்.

தங்க நகை, வெள்ளி, கற்கள் தொடர்பாக உங்களுக்குள்ள கேள்விகளையும், சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தொடரின் இறுதியில் அவற்றை தனியே அலசுவோம்.    

மீண்டும் சந்திப்போம்.

– தமிழ் அமுதன்




Leave a Reply