மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி; மேலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான இணைகளின் வாரிசுகள் அறிமுகமாகும் படம்; அதே போல் சுமார் பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கிறார். ஆர்ப்பரித்திருக்க வேண்டிய கடல், அலைகள் ஓய்ந்த இராமேஸ்வரம் கடற்கரை போல் அமைதியாக உள்ளது. அதை தான் “ஆழ்ந்த தத்துவமும், ஆன்மீகமும் கொண்ட ஸ்க்ரிப்ட்” என இப்படத்திற்கு கதை – வசனம் எழுதிய ஜெயமோகன் படத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார் போலும்.
சாத்தான் தான் இந்தப் படத்தின் நாயகன். பெர்க்மன் என்னும் சாத்தானாக அர்ஜூன். அதுவும் பைபிளை கரைத்துக் குடித்த புத்திசாலி சாத்தான். விளையாட்டு, குதூகலம், கேலி, கிண்டல், மகிழ்ச்சி என வாழ்வைக் கொண்டாடும் சாத்தான். மன்னிக்க விரும்பாத தேவன் ஒருவனால் சாத்தான் காட்டிக் கொடுக்கப்படுகிறார். தேவனை பழி வாங்கும் லட்சியத்தை நிறைவேற்றியதோடு நில்லாமல் தேவனால் கண்டெடுக்கப்பட்ட மனிதனையும் சாத்தானாக மாற்றி விடும் உன்னத லட்சியத்தோடு இயங்குகிறார் சாத்தான். அர்ஜூனை தவிர்த்து வேறு எவரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால், ‘நான் சாத்தான்டே!!’ என தேய்ந்த டேப்-ரிக்கார்டர் போல படம் நெடுக கூறி இம்சிக்கிறார் அர்ஜூன்.
சாம் ஃபெர்னான்டோ என்னும் தேவனாக (தேவரென மரியாதையாக விளித்தால் வம்பாயிடும்) அரவிந்த் சாமி மறு பிரேவசம் செய்துள்ளார். அர்விந்த் சாமி போல் வெள்ளையாக இருப்பவர் தேவனாக தான் இருக்கணும் அல்லது இருக்க முடியும் என்ற பொது புத்தி மீண்டும் ஒருமுறை வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி அழகான பாதிரியாராக கடவுள், விசுவாசம் போன்றவற்றின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவராக வருகிறார். தன்னை திட்டும் சிறுவனை நல்வழிபடுத்துகிறார். பொய்யான குற்றச்சாட்டினால் சிறைக்கு செல்ல நேரிடும் பொழுதும், அங்குள்ளவர்களை கடவுளின் பாதைக்குக் கொண்டு வரும் வாய்ப்பாக கருதுகிறார். பொறுமைக்கும் எல்லையுண்டு என்பது போல்.. சாத்தானின் சீண்டல் தாங்காமல் தன்னிலை மறக்கிறார் தேவனான அரவிந்த் சாமி.


