Search

சுந்தர பாண்டியன் விமர்சனம்

Sundara Pandiyan

 

பளபளக்கும் நீல கலர் சட்டை, நல்லவர், வல்லவர் என ஏகப்பட்ட பில்டப்களுடன் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பியவாறு சசிகுமார் அறிமுகமாகிறார். ஊரில் உள்ள பாட்டிகள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் ஆடிப் பாட விழைகின்றனர். ஆகா ஒரு முடிவோடு தான் இருக்கார் என எச்சரிக்கை ஒலியை சத்தமாக அடிக்கிறார். ஆனால் படம் பார்ப்பவர்களை திரைக்கதையால் அறிமுக இயக்குனர் பிரபாகரன்  ஈர்த்து விடுகிறார்.

 

நண்பர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்ன நிற்கும் பாசக்கார நண்பன் சுந்தர பாண்டியன். அவன் பஸ்சில் ஏறினால் அனைவரும் ஒழுக்கமாக பயணிப்பார்கள். காரணம் சுந்தர பாண்டியன் கண்டமனூர் தலைக்கட்டு குடும்பத்தில் ஒருவன். தனது நண்பனின் காதலிற்கு உதவி செய்ய போக, அந்தப் பெண் சுந்தர பாண்டியனைக் காதலிப்பதாக சொல்லி விடுகிறாள். ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கும் அந்தப் பெண்ணை காதலிப்பவர்களின் பட்டியலோ மிக நீளம். அதில் சுந்தர பாண்டியனின் நெருங்கிய நண்பர்களும் அடக்கம். நண்பர்களுக்காக உயிரையே கொடுக்கும் சுந்தர பாண்டியனின் காதல் என்னாகிறது என்பதோடு படம் சுபமாக முடிகிறது.

 

நாயகன் சுந்தர பாண்டியானாக நட்பு, காதல், துரோகம் என வட்டத்தைத் தாண்டாத சசிகுமார். தொடக்கத்தில் ரஜினி ரசிகனாக முடியை அடிக்கடி கோதி விட்டு பயமுறுத்தினாலும் பின் தனது இயலபான பாணிக்கு திரும்பி விடுகிறார். ஆனால் ஹீரோவிற்கு இணையாக அவரது சாதியும், சொத்து மதிப்பும் நாயகத்தன்மை பெறுகிறது. ரத்தம் சிந்தி கரம் பற்றும் உன்னத தமிழ்ப்பட காதலனாக இல்லாமல் சாதி பெருமையைக் காட்டுபவராக உள்ளார் நாயகன். அவர் காதலிக்கும் பெண், பழகும் நண்பர்கள் என பெரும்பான்மையோர் ஒரே இனமாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆரம்ப பில்டப் போலவே, “குத்தினவன் நண்பனா இருந்தா, அவன் குத்தினதை, செத்தாலும் சொல்ல கூடாது” என்று முடிவில் பஞ்ச் டையலாக் கொண்டு முடிக்கிறார்.

 

நாயகனின் நண்பனாக சூரி. சூரி இல்லாமல் படத்தின் முதல் பாதியை கற்பனை செய்து பார்ப்பதே கடினம். அவ்வளவு கச்சிதமான பாத்திரம் அவருக்கு. படத்தின் கலகலப்பிற்கு பொறுப்பேற்கிறார். நாயகனின் அப்பா நரேன், ‘வாக்கை விட வாழ்க்கை முக்கியம்’ என்று சொல்லும் நாயகியின் தந்தை தென்னவன், ‘விட்டுத் தான் பிடிக்கணும்’ என்று சொல்லும் நாயகியின் சித்தி சுஜாதா, இனிகோ பிரபாகரன், ஊர்க் கிழவிகள், டீக்கடையில் அமர்ந்திருப்பவர் என அனைத்து கதாபாத்திரங்களின் தேர்விலும் இயக்குனர் அசத்தியுள்ளார். டாப் ஆங்கிளில் காமெடியன் போல் அறிமுகம் செய்யப்பட்டு, பின் முக்கிய கதாபாத்திரமாக பரிணமிக்கும் அப்புக்குட்டி நிறைவாய் தோன்றி மறைகிறார். நாயகியை மனக்கும் கனவில் இருக்கும் விஜய் சேதுபதியின் கண்களில் ஏமாற்றமும், வெறியும் தெரிகிறது. அதே போல் நாயகி பார்வையாலே வசனங்களின் உதவியின்றி அழகாக நடித்துள்ளார். தன் பின்னால் சுற்றுபவர்களில் வல்லவன் யாரென அடையாளம் கண்டுக் கொள்ளும் விவரமான நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். தமிழ்ப்படங்களில் விவரமான நாயகியைப் பார்ப்பது மிக அரிதான விடயம்.

 

கெளரவக் கொலை ஒன்றின் சித்தரிப்போடு படம் தொடங்குகிறது. பின், அச்சுறுத்தும் வன்முறை படத்தின் இறுதி சண்டைக் காட்சிகளில் தான் தலைக் காட்டுகிறது. கூர்மையான கத்திகளும், துப்பாக்கி தோட்டாகளும் தமிழ்ப்பட நாயகர்களின் வல்லமை முன் பேசாமல் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். பிரேம்குமாரின் ஒளிப்பதிவு போல் ரகுநந்தனின் ஒலிப்பதிவு படத்திற்கு பெரியளவில் உதவவில்லை. ஆயினும் தனது முதல் படத்தை இயக்குநர் பிரபாகரன் நிறைவாகவே ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

 




Leave a Reply