ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிறுத்து போகிறது. இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் உன்னால் படைக்கப்பட்ட இந்த சின்ன ஜீவனின் கடிதத்தை நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
ஆமாம் கடவுளே உனக்கு என்ன பாஷை தெரியும். எங்க ஊரு ஐயரு சமஸ்கிருதத்தில பேசுனா தான் உனக்கு புரியும் என்கிறார்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை தமிழ் மொழி தான் ஆதி மொழி அது தான் உனக்கு பிரியமானது என்று எங்க ஊரு தமிழ் வாத்தியார் சொல்றார்.
அவனுக்கு தான் தமிழும், சமஸ்கிருதமும் தெரியவே தெரியாதே. ஒரு வேளை உனக்கு காதுகளே கேட்காதோ? இங்க உள்ளவங்க தான் வீணாக குடுமியை பிடித்து சண்டை போட்டு கொள்கிறார்களோ? இது சம்பந்தமா உன் கருத்து என்னென்னு எனக்கு கண்டிப்பா பதில் எழுது.
இப்ப கொஞ்ச நாளாகவே என் மண்டைக்குள்ள ஒரே குழப்பம். எங்க ஊரு கறிகடை பாய் அல்லா மட்டும் தான் ஒரே கடவுள் அவரை விட்டா கடவுளே இல்ல என்கிறார்.
அடுத்த நிமிசமே டீ கடை ராபர்ட் சொன்னது நினைப்பில் வந்து போச்சு. இந்த உலகில் கர்த்தர் மட்டும் தான் வணங்க கூடிய கடவுள். அவரே எல்லா ஜீவன்களின் போஷகராய் இருக்கிறார். இப்படி ராபர்ட் சொன்னது சரியா? பாய் அண்ணாச்சி சொன்னது சரியான்னு? புதிய குழப்பமே வந்து போயி இட்லி கடை வைத்திருக்கும் ராகவாச்சாரியாரிடம் அல்லா கடவுளா? கர்த்தர் கடவுளா? என்று கேட்டேன்.
அவர் ஒரே, போடாக அட போடா அசட்டு அம்பி, அல்லாவும் இல்ல கர்த்தரும் இல்ல. பெருமாள் தான்டா உண்மை தெய்வம்ன்னு சொல்லி புது குழப்பத்தை உருவாக்கி விட்டார்.
ஒரு பக்கம் உள்ளவன் எல்லோரும் மனம் திரும்புங்க. கர்த்தரை ஏத்துங்க என்று ஆசை வார்த்தை காட்டி பார்க்கிறாங்க. மசியாதவர்களை கையில ஆயூதத்தை கொடுத்து ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டி சாகுபடியா செய்கிறான்.
இன்னொருத்தனோ அல்லாவ ஏத்துக்காத எவனும் பூமியில வாழ கூடாதுன்னு அங்கங்க குண்டு போடுகிறான். கடவுள் படைச்ச உசுருகளை அழிக்கலாமன்னு திருப்பி கேட்டா அல்லாவை வணங்காதவன் எவனும் சாத்தானின் மக்களே அவர்களை கொல்லுவது தான் புனித போர் என்கிறான்.
இந்த இடத்துல நீ என்ன பார்த்து ஒரு கேள்வி கேட்கலாம். ஏன்டா அவனுங்ககிட்ட போன அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம நடுவுல இருக்கிறவன் கிட்டையோ கடவுளும் கிடையாது. மண்ணாங்கட்டியும் கிடையாது என்கிறவன் கிட்டையோ போய் விளக்கம் கேட்க வேண்டியது தானே என்று.
நீ கேட்பதுவும் சரிதான். அப்படிபட்ட மனுஷங்கிட்டையும் போய் கேட்டேன். அவன் என்னடான்னா இவனுக மூணு பேரை விடவும் மோசகாரனா இருக்கிறான்.
கடவுளே இல்லை என்பவனிடம் போனேன். கடவுள் இருப்பத ஒத்துக்கிட்டா கண்ணுக்கு தெரியாத நியாய தர்மத்தையும் ஒத்துக்கணும்.
நியாய தர்மம் என்பதே பத்தாம் பசலித்தனம். அதன்படி எல்லாம் நடக்க ஆரம்பிச்சா மனுஷனா பிறந்த சுகத்த அனுபவிக்க முடியாது. வாழ்வது கொஞ்ச நாள் தான். அந்த காலத்துக்குள்ள கிடைக்கிறத அனுபவிச்சி செத்து போகப்பாரு.
வீணா கடவுள் அது இதுயென்று காலத்த வீணடிக்காத என்கிறான். ஒவ்வொருத்தனும் தன் சுகத்தையே பெரிசா பார்த்தா உலகம் பூரா சுடுகாடாகத் தானே மாறும்?
அதனால தான் உங்கிட்ட இந்த கேள்விய கேட்க போறேன். யோசிச்சு நிதானமா பதில சொல்லு, ஒண்ணும் அவசரம் இல்லை.
- உண்மையிலேயே நீ யாரு?
- உன் பெயர் என்ன?
- அல்லாவா?
- கர்த்தரா?
- பெருமாளா?
இந்த மூணுமே உன் பெயர் இல்லையின்னா இவங்க மூணு பேரும் யாரு?
நாங்க யாரும் அவுங்கள பார்த்தது இல்ல. நீயாச்சும் பார்த்து இருக்கியா? நீ சொல்ல போற பதிலில் தான் இந்த உலகத்தோட எதிர்காலமே இருக்கு.
மனுஷன் ஓடுவது இருக்கட்டும் நோய குணப்படுத்தினா, கல்யாணம் பண்ணிகிட்டா? பிள்ளை குட்டி பெத்துகிட்டா உனக்கு கூட உண்டியலில் காசு போட சொல்கிறாயாமே. உலக பொருட்களில் ஆசை வைக்காதேன்னு உபதேசம் செய்கிற நீயே நகையும் நட்டும் பணமும் காசும் காணிக்கையாக கேட்பது ஏன்? அல்லது உன் பெயரால் யாரோ வசூல் செய்கிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த நீ அதை அனுமதிப்பது ஏன்?
– யோகி ஸ்ரீராமானந்த குரு












