

என் மனதுக்குள் இருக்கும் நாராயணனே இந்த பிரபஞ்சமாகவும் வியாபித்து இருக்கிறார்.
முதலாழ்வார்கள் மூவராவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் 7 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலாப்பூரிலும் அவதரித்தவர்கள். இவர்களின் தாய் தந்தையர் பற்றிய குறிப்பு இல்லை. மூவருமே குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதல் மூன்று திருவந்தாதிகளை இவர்கள் படைத்தார்கள். ஆழமான தத்துவம், பக்தி நெறி மற்றும் இனிய தமிழால் இறைமையைப் போற்றியவர்கள்.
இவர்கள் மூவரையும் திருக்கோவிலுரில் இறைவன் இணைத்தார். அதன் பிறகு மூவரும் இணைந்தே பல திவ்விய தேசங்களுக்குச் சென்று பெருமானைப் பாடி மங்களாசாசனம் செய்தனர்.
திருக்கோவிலுரில், ஓரிரவு ஒரு வீட்டின் சிறு திண்ணையில் பொய்கையாழ்வார் படுத்திருக்க, பூதத்தாழ்வார் வந்ததும் இருவரும் அந்தத் திண்ணையில் உட்காந்து கொண்டனர். அடுத்த சில மணி நேரங்களில் பேயாழ்வாரும் அங்கு வந்து சேர, மூவரும் நின்று கொண்டனர். அப்போது வெளியே மழை வலுக்க ஆரம்பித்தது. சாரல் திண்ணையில் அடிக்க ஆரம்பித்ததும் இம்மூவரும் இன்னும் நெருக்கமாக நின்றனர். மழையும் திண்ணையில் சாரலாகப் பொழிய ஆரம்பித்தது. இம்மூவருக்கும் அப்போது, மழையாகத் தம்மோடு சேர்ந்து நிற்பது ஆழிமழைக்கண்ணான பெருமாளே என்று உணர்ந்தார்கள். இவ்வாழ்வார்களுடன் இறைவனும் அங்குச் சேர்ந்து நின்றதைப் போல உணர்கின்றனர். இது ஆழ்வாரின் பரிபூரண சரணாகதி மனநிலையைக் காட்டுகிறது. காண்கின்ற அனைத்தும் பெருமானே என்ற ஏகத்துவ சிந்தனை.
இப்படி தன்னோடு வந்து நின்ற பெருமானுக்காகப் பொய்கையாழ்வார் பாசுரத்தால் விளக்கேற்றுகிறார். அவர் கூறும் போது, இந்த உலகமே அகல் விளக்காகவும், கடல் நீர் அதிலிருக்கும் எண்ணெயாகவும், கடற்கரையில் காலையில் ஏற்படும் சூரிய உதயமே அந்த அகல்விளக்கின் தீபமாகவும் உருவகப்படுத்தி அதனைப் பிரபஞ்சமாய் திகழும் பெருமானுக்குக் காட்டும் தீபாராதனையாக தனது பாசுரத்தில் போற்றி மகிழ்ந்தார். அதனைக் கடந்த வாரம் பார்த்தோம்.
பொய்கையாழ்வாரைத் தொடர்ந்து, பூதத்தாழ்வார் வேறு ஒரு விளக்கை ஏற்றுகிறார். அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதிக்கிறார் பூதத்தாழ்வார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
பொய்கையாழ்வார் கடற்கரையின் சூரிய உதயத்தை விளக்காக ஏற்றுவதாகக் கூற, பூதத்தாழ்வார், அக விளக்கை ஏற்றி ஞானச் சுடரை இறைவனுக்குப் படைக்கிறார். பொதுப்படையாக நோக்கினால் இரண்டும் எதிர் எதிர் கருத்தாகத் தோன்றும். பொய்கையாழ்வரை மறுத்து, பூதத்தாழ்வார் போட்டியாக வேறு பாசுரத்தைப் பாடியது போலத் தோன்றும். ஆனால், பொய்கையாழ்வார், இந்தப் பிரஞ்சமாகத் திகழும் பெருமானுக்கு சூரிய விளக்கு ஏற்றியது எதுவோ, அதையே நான் என் மனதில் அன்பையும் ஆர்வத்தையும் சிந்தனையையும் கொண்டு ஞான விளக்காக ஏற்றினேன் என்று பூதத்தாழ்வார், இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை உறுதிப்படுத்துகிறார். என் மனதுக்குள் இருக்கும் நாராயணனே இந்த பிரபஞ்சமாகவும் வியாபித்து இருக்கிறார் என்று கூறுகிறார்.
பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள், சத்தைப் பெற்றது என்பது. சத்து = அறிவு. திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர். ஞானம், பக்தி, வைராக்கியம் என்ற மூன்று யோகப் பயிற்சி குணங்களில் பக்தி நடுவில் உள்ளது. அது போல, முதல் மூன்று ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் நடு ஆழ்வாராகத் திகழ்கிறார். இவர், திருமாலின் கதாயுதமான கௌமோதகியின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.
பூதத்தாழ்வாரின் வேறொரு பாடலில் திருப்பதி, திருவேங்கட மலையின் வளத்தை அழகான உவமையுடன் கூறுவார். திருவேங்கட மலையில் ஆண் யானை ஒன்று, இளமூங்கிலைத் தன் துதிக்கையால் வளைத்து, அருகிலுள்ள தேனடையில் இருந்த தேனில் தோய்த்துத் தனது காதலியான பெண் யானைக்கு ஊட்டுமாம். அந்த அளவுக்கு திருமலையின் இயற்கை வளமும் சிறப்பும் உடையது என்று கூறுகிறார்.
பூதத்தாழ்வார் எழுதிய 100 பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதி எனத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் கடைசி சொல்லை அடுத்தச் செய்யுளின் முதல் சொல்லாக வைத்து இயற்றுவது. பூதத்தாழ்வாரின் முதல் பாசுரம் அன்பே தகளியா என்று ஆரம்பிக்கிறது. இறுதி பாசுரம்,
மாலே! நெடியானே! கண்ணனே! விண்ணவர்க்கு
மேலா வியன்துழாய்க் கண்ணியனே! மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே! என்தன்
அளவன்றால் யானுடைய அன்பு.
என அன்பு என்ற சொல்லில் முடிவடைந்து ஓர் ஆழியைப் போல சுற்றியமைவது அழகு.


