Shadow

திருமழிசை ஆழ்வார் – நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே

நீ எனக்குள் தான் இருக்கிறாய் என்று அறிந்த பின், என் மனதுக்குள் என்றும் நீங்காமல் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அருளுகின்றாய்

முன்பொரு காலத்தில் திருமழிசையில், ஒரு முனிவர் தம்பதிக்குக் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் கைகளும் கால்களும் அசைவற்ற நிலையில் இருந்ததால் அக்குழந்தையை ஒரு பொது இடத்தில் அக்குழந்தையின் பெற்றோர் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

அவ்வழியே வந்த கூடை செய்து விற்றுப் பிழைக்கும் தம்பதி, இந்தக் குழந்தையை ஆசையாக எடுத்தனர். அக்குழந்தையின் கை கால்கள் நன்கு அசைந்தது. இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், இக்குழந்தையையே தமது குழந்தையாக எண்ணி வளர்த்து வந்தனர்.

அடுத்த சில வருடங்களில் கூடை பின்னும் தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. அவர்களின் குழந்தைக்குக் “கனிக்கண்ணன்” என்று பெயரிட்டு வளர்த்தனர். இவர்களின் வளர்ப்புக் குழந்தை பின்னாளில் ஞானமும் பக்தியும் நிரம்பிய திருமழிசை ஆழ்வாராக வளர்ந்தது. கனிக்கண்ணன், திருமழிசை ஆழ்வாரின் ஒப்பற்ற சீடராக விளங்கினார்.

திருமழிசையாழ்வார், இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம் (வேத மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார்.

சைவ சமயத்தைச் சார்ந்திருக்கும் போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். பிறகு முழுமையாக வைணவத்தைப் பின்பற்றிய திருமழிசையாழ்வார், ‘நான்முகன் திருவந்தாதி’ என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும், ‘திருச்சந்த விருத்தம்’ என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாகத் திருமாலை உயர்வாகச் சொல்லியவை. இவருக்கு முன்தோன்றிய முதலாழ்வார்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.

காஞ்சிபுரத்தில் திருவெக்கா தளத்தில் இவர் தங்கியிருந்த போது, அந்தக் கோயிலில் வேலை செய்த பெண்ணுக்கு இவரது அருளால், காஞ்சிபுரத்தை ஆண்ட மன்னனைத் திருமணம் செய்து கொள்ளும் யோகம் ஏற்பட்டது. அந்தப் பெண் மூலம், திருமழிசையாழ்வார் பற்றி அறிந்த மன்னன், கணிகண்ணனை அழைத்துத் தனக்கும் ஆழ்வாரை அருளுமாறு கேட்டுக்கொண்டார். கணிகண்ணன், “ஆழ்வாருக்கே தோன்றினால் தான் அருள் தருவார், அவரிடமிருந்து நாம் கேட்டுப் பெற முடியாது” என்றார். மன்னன், அப்படியென்றால் தன்னைப் பற்றி ஒரு பாடலாவது அவர் எழுதித் தரும்படி கனிக்கண்ணனைக் கேட்டார். கனிக்கண்ணனோ, “நாராயணனைப் பாடும் வாய் நரனைப் பாடாது” என்று கூறி மறுக்க, “அப்படியானால், என் நாட்டை விட்டு வெளியேறு” என்று கோபத்தில் ஆணையிட்டார் மன்னன். கனிக்கண்ணன் ஊரை விட்டுக் கிளம்பியதும், கனிக்கண்ணன் இல்லாத இடத்தில் தனக்கு என்ன வேலை என்று திருமழிசையாழ்வாரும் கிளம்பினார். கூடவே, ‘நான் இல்லாத இடத்தில் உனக்கு என்ன வேலை?’ என்று திருவெக்காத் தளத்து யதோத்காரி பள்ளிகொண்ட பெருமானைப் பார்த்து,

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். ஆழ்வாரின் அருமை பெருமையை அறிந்த அரசன், மறுநாள் தனது செயலை எண்ணி வருத்தமுற்று, கனிக்கண்ணனைத் தேடிச்சென்று அவரையும், ஆழ்வாரையும் காஞ்சிபுரத்துக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டார். கனிக்கண்ணன், திருமழிசையாழ்வாரை வேண்டி, திரும்பவும் காஞ்சி செல்லுவோம் எனக் கூற, ஆழ்வார் ஆண்டவனை நோக்கி,

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

என்று பாடியதற்கிணங்க மூவரும் திருவெக்காத் தளத்துக்கு வந்து சேர்ந்தனர்.

திருமழிசையாழ்வார், சொன்னது படியே செய்ததால் திருவெக்கா இறைவன், “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” ஆகிறார். அவர்கள் ஒருநாள் தங்கியிருந்த இடம் “ஓர் இரவு இருக்கை” என்று அழைக்கப்பட்டு, இன்று மருவி “ஓரிக்கை” என்றாகியிருக்கிறது.

இவ்வளவு பேர் பெற்ற திருமழிசையாழ்வார், எது பக்தி, எது ஞானம் என்பது பற்றி காஞ்சியில் இருக்கும் மூன்று திவ்யதேசங்களைக் குறிப்பிட்டு (அவரது காலத்தில் காஞ்சியின் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் கட்டப்படவில்லை) எழுதிய பாசுரம் இன்றைக்கும் ஒளிவிளக்காக நமக்கு வெளிச்சம் தருகிறது.

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன்-
நின்றதும், இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே!

நாராயணன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அந்தர்யாமியாய் இருந்து கொண்டு அவரவருடைய செயல்களுக்குச் சாட்சியாகவும் இயக்கமாகவும் இருக்கின்றான் என்பது வைணவ சமயக் கோட்பாடு. இதனையே திருமழிசையாழ்வார் இப்பாசுரத்தில் வெளிப்படுத்துகிறார்.

எந்தை — எம்பெருமான்; ஊரகத்து — திருவூரகத்திலே; நின்றது — நின்றதும்; எந்தை பாடகத்து — திருப்பாடகத்திலே; இருந்தது — வீற்றிருந்ததும்; அன்று வெஃகணைக் — திருவெஃகாவில்; கிடந்தது — சயனித்திருந்ததும்; என் இலாத — நான் பிறப்பதற்கு; முன்னெலாம் — முன்பு; அன்று நான் — அன்று நான்; பிறந்திலேன் — ஞானம் பெற்றிருக்கவில்லை; பிறந்த பின் — அறிவு பெற்ற பின்பு; மறந்திலேன் — எம்பெருமானை நான் மறக்கவில்லை; நின்றதும் இருந்ததும் — நின்றதும் இருந்ததும்; கிடந்ததும் — கிடந்ததுமான எல்லாச் செயல்களையும்; என் நெஞ்சுள்ளே! — எனக்கு அருளினான்.

‘காஞ்சியில் நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், படுத்த திருக்கோலம் என்று மூன்று திவ்யதேச திருக்கோயில்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார். திருஊரகத்தில் உலகலந்த பெருமானாக நின்றபோதும், திருப்பாடகத்தில் பாண்டவர்களுக்கு உதவிய கண்ணனாக அமர்ந்த திருகோலத்தில் இருந்த போதும், திருவெக்காவில் பள்ளிகொண்ட பெருமானாகப் படுத்திருந்த போதும் நான் வழிபட்டேன். ஆனாலும் எனக்குள் ஞானம் பிறக்கவில்லை. நீ எனக்குள் தான் இருக்கிறாய் என்று அறிந்த பின், என் மனதுக்குள் என்றும் நீங்காமல் நின்றும், அமர்ந்தும் கிடந்தும் அருளுகின்றாய்’ என்று குறிப்பிடுகிறார்.

உள்ளமே பெருங்கோயில். அதனுள் இறைவனைக் கண்டவர்கள், வெளியே தேடவேண்டியதில்லை என்பது இந்தப் பாசுரத்தின் சிறப்பு.

ஜானகிராமன் நா