

இறைவன் இருக்கிறான் என்றால் இருக்கிறான். இல்லை என்றால் இல்லை. இருந்தும் இல்லாமலும் பரவியிருக்கும் பரம்பொருளே பெருமான் .
பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் மிகவும் சிறப்பு மிக்கவர். அவர், நமக்கான ஆழ்வார் என்பதால் “நம்மாழ்வார் (நம்ம ஆழ்வார்)” என அன்போடு அழைக்கப்படுகிறார். திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள 4000 பாசுரங்களில் அதிக பாசுரங்கள் நம்மாழ்வாருடையது தான்.
மொத்தம் 1295 பாசுரங்கள் அருளியுள்ளார். திவ்வியப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பிறர் பாடக் கேட்டுப் பிறகு தான் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுக்க ஆரம்பித்தார். நம்மாழ்வார் இல்லையென்றால் திவ்வியப் பிரபந்தமே இல்லை.
பன்னிரண்டு ஆழ்வார்களில் பத்து பேர் திருமாலைப் பற்றி மட்டும் தான் பாடியிருக்கின்றனர். ஆண்டாள், திருமாலையும் பாடி, பிற ஆழ்வார்களின் பெருமையையும் பாடி சிறப்பு சேர்த்தார். ஆனால் மதுரகவியாழ்வார், திருமாலைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், தனது குரு, நம்மாழ்வாரைப் பற்றி மட்டுமே போற்றி, “கண்ணி நுண் சிறுதாம்பு” என்று துவங்கும் 11 பாசுரங்கள் இயற்றினார். இந்தப் பெரும் பேறு வேறு எந்த ஆழ்வாருக்கும் கிடைக்கவில்லை. இதனாலேயே நம்மாழ்வார், மகாவிஷ்ணுவின் உடலாகக் கருதப்படுகிறார்.
மதுரகவியார், வடக்கே வேதமறிந்த ஞானியாவார். ஒருநாள் வானில் பிரகாசமான ஒளியைக் காண்கிறார். அந்த ஒளியைப் பின்தொடர்ந்து தெற்கே நடக்க ஆரம்பிக்கிறார். அது ‘ஆழ்வார் திருநகரி’யில் அவரைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அங்கு ஒரு மரத்தடியில் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கும் இளைஞரை நோக்கி, ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று கேட்கிறார். அதற்கு இந்த இளைஞர், ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். மதுரகவியார் அதனைக் கண்டு ‘நமக்கு வடக்கில் தோன்றிய ஒளி இவரே!’ என்று தெளிந்து, அன்று முதல் மாறன் என்றும் சடகோபன் என்றும் அழைக்கப்பட்ட நம்மாழ்வாருக்குத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியை ‘சாமவேத சாரம்’ எனப் பெரியோர் கூறுவார்கள். இராமானுச நூற்றந்தாதியைப் பாடிய திருவரங்கத்தமுதனார், ‘பண்தரும் மாறன் பகர்ந்த தமிழ்’ என்று நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாராட்டுகின்றார். சாமவேதம் போன்று இதுவும் இசையுடன் பாடுவதற்குரியது. திருமந்திரம் போலவும் சிவாக்கிய சித்தரின் பாடல்கள் போலவும் ஒரே சந்த நயத்தில், அந்தாதி முறையில் அமைந்த பாசுரங்கள். தமிழின் இனிமையை இப்பாசுரங்களில் கண்டு திளைக்கலாம்.
திருவாய்மொழியின் பாசுரங்களை வாய்விட்டுப் படிப்பது நமது சொல் உச்சரிப்புக்கு பெரும் பயன் தரும். குழந்தைகள் இந்தப் பாசுரங்களைப் பழகுவதன் மூலம், இறைத்தன்மையுடன், அவர்களின் பேச்சுத் திறனும் வளரும்.
திருவாய்மொழியின் முதல் பத்துப் பாடல்களில் மூன்று பாடல்களை இங்குக் காண்போம்.
1.
உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
மேன்மேலும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லுகின்ற நற்குணங்களையுடையவன் யாவனோ அவன், என்னிடத்துள்ள அறியாமையை நீக்கி, பத்தியின் நிலையை உணரும் அறிவைத் தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ அவன், மறதி என்பது சிறிதும் இல்லாத பெரியார்களுக்கெல்லாம் தலைவன்; பெரியார்களுக்கெல்லாம் தலைவன் யாவனோ அவனுடைய, எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளி பொருந்திய திருவடிகளைத் தொழுது பிறவிப் பெருங்கடலினின்றும் கரை ஏறுவாய் என் மனமே!
‘அவன்’ என்பதைத் திருமால் என்றும் எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்சம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். பிரபஞ்சம், தொடர்ந்து உயர்ந்து விரிவடைந்து செல்கிறது. மனிதர்களுக்குப் பிரபஞ்சத்தை அறியும் அறிவையும் பிரபஞ்சமே தருகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பிரபஞ்சத்தை ஆய்ந்த அறிஞர்கள் அனைவருக்கும் அதுவே அதிசயமாய் இருக்கிறது. ‘சுடரடியாகிய பெருவெளிப் பிரபஞ்சத்தின் பெரு ஒளியைத் தொடர்ந்து ஆய்வு செய் மனமே!’ என்று பிரபஞ்ச இயக்கத்துடன் பொருத்திப்பார்க்கலாம்.
இந்த உலகம் இருமைத்தன்மையுடன் ஆனது. உயர்வு என்று இருந்தால் தாழ்வு என்ற ஒன்று இருக்கும். ஒளி என்றால் இருள் என்ற ஒன்று இருக்கும். ஆனால் அதனை நம்மாழ்வார் வேறுவகையில் கூறுகிறார். உயர்வர உயர்நலம். உயரத்துக்கெல்லாம் உயரமான குணங்கள் என்கிறார்.
இதே சந்த நயத்தில் அமைந்த வேறு இரண்டு பாசுரங்கள்.
2.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.
அவரவர் தங்கள் அறிவுக்கு புரிந்த வகைகளில் அவரவர் கடவுளர் என்று பல வகைப்பட்ட தெய்வங்கள் முன் அடி பணிந்து தொழுகின்றனர். அவரவரின் தெய்வங்களும் அருள் வழங்குவதில் குறையில்லாத தெய்வங்களே ஆகும். ஆகவே, அவரவர்க்கு விதிக்கப்பட்ட தத்துவப்பாதையில் அத்தெய்வங்களைச் சென்றடைய அவர்கள் வணங்கி நிற்கின்றனர்.
நம்மாழ்வாரின் பாசுரங்கள் குறிப்பிட்ட கடவுளை மட்டும் போற்றி, பிற கடவுளரை இகழ்பவை அல்ல. அவை மகத்தான மத நல்லிணக்கப் பாசுரங்கள். தற்போது வைணவத்திற்கு உள்ளேயே வடகலை, தென்கலை என்று பிணக்குள் ஏற்படுவதைப் பார்த்தால் நம்மாழ்வார், “வேடிக்கை மனிதர்கள்” என்று சிரித்திருப்பார்.
3.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.
இறைவன் இருக்கிறான் என்றால்; உள்ளவன் ஆவான். அப்போது உருவத்துடன் இருக்கும் பொருள்களெல்லாம் அவனுடைய வெளிப்பாடாகும். இறைவன் இல்லை என்றாலும் உருவமற்று, அருவமாக இருக்கும் பொருள்களெல்லாம் அவனேயாகும். இப்படி, உருவங்களாகவும் அருவங்களாகவும் இரண்டு குணங்கள் உடையவனாக விளங்குவதால் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் இறைவன் பரவி இருக்கிறான்.
இறைமைத் தன்மையை இந்த அளவுக்கு எளிமையாகவும் ஆழமாகவும் கூற இறையருள் இருந்தால் தான் ஆகும். வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப யோசித்துத்தெளிவு பெற இந்த மூன்று பாசுரங்களே போதும்.


