
“ஆமாங்க”
“தர்ம சம்ஸ்தா பனார்த்தாய சம்பவாமி யுகே!! யுகே!!”“சரி தானுங்க.”
“என்ன சரி?”
“நீங்க சொல்றதுங்க.”
“நான் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா?”
“தெரியாதுங்க.”
“அப்புறம் ஏன் சரின்னு சொன்னே!!”
“நீங்க எது சொன்னாலும் சரியா தான் இருக்குமுங்க.”
“இது தான் நம்மகிட்ட இருக்கிற தவறான போக்கு. எதையும் கேள்வி கேட்கனும். எதுவா இருந்தாலும் தீர விசாரிக்கனும். அப்ப தான் நமக்கு நிறைய தெரிய வரும். இனிமே நீ கேள்வி நிறைய கேட்கனும் புரியுதா?”
“கேட்கிறேனுங்க. நீங்க சொன்னதுக்கு என்னங்க அர்த்தம்?”
“அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு கேள்வி.. தவறுகள் எங்க ஆரம்பிக்குது?”
“வயித்துல தான் சாமி. பசியில தான் எல்லாம் ஆரம்பிக்குதுங்க.”
“உன்னால அப்படி தான் யோசிக்க முடியும். ஆனா உண்ம அது இல்ல. சொத்து இருக்கிறவன் சொத்து இல்லாதவன் மேல் பண்ற வன்முறை இது. அதனால் தான் இந்த தப்பெல்லாம் நடக்குது.”
“இதான் நீங்க சொல்றதுக்கு அர்த்தமுங்களா?”
“இல்ல. எங்கெல்லாம் தப்பு நடக்குதோ.. அங்கெல்லாம் கடவுள் தோன்றி தப்பு செஞ்சவங்கள அழிப்பார் என்று அர்த்தம்.”
“ஹி.. ஹி.. அதெப்படிங்க நடக்கும்?”
“நடக்காதுன்னா.. தப்பு செய்றவங்கள யாரு கேட்பா?”
“அரசாங்கம் தானுங்க கேட்கும்.”
“அரசாங்கம் எல்லாத்தையும் கேட்குதா?”
“எல்லாத்தையுமாங்க கேட்பாங்க?”
“அப்படியே கேட்டாலும்.. அங்க இருக்கிறவனுங்க எல்லாம் யோக்கியமாவா இருக்காங்க?”
“அதெப்படிங்க இருப்பாங்க?”
“அப்ப யாரு இங்க நடக்கிற தப்பை எல்லாம் கேட்பா?”
“எல்லாம் விதின்னு விட வேண்டியது தானுங்க.”
“இது தான் இந்தியாவோட சாபம்.”
“யாருங்க கொடுத்தா?”
“நமக்கு நாமளே கொடுத்துக்கிட்டது.”
“ஆனா நான் யாருக்கும் கொடுக்கலயேங்களே சாமி?!”
“நாமன்னா நாம மட்டும் இல்ல. நாம எல்லாரும் தான். நம்ம பாட்டன், முப்பாட்டன், நம்மள ஆளுறவங்க, நம்ம ஆயி அப்பனுங்க,.. நீயு, நானு எல்லாரும் தான்.”
“ரொம்ப பெரிய சாபம் போலிருக்குதுங்க. இதுக்கு விமோசணம் எதுவும் இல்லைங்களா?”
“இருக்கு. மற்றவர்கள் தவறை நாம விமர்சனம் செய்யனும். கேள்வி கேட்கனும். அதை தொடர்ந்து போராட்டம் செய்யனும்.”
” “
“என்ன புரியுதா?”
“புரியுற மாதிரி இருக்குங்க. ஆனா புரியல. அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா எதுக்குங்க சும்மா கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு. முகத்துல துணிய சுத்திக்கிட்டு போய்.. ஒரு ஏறு ஏறிடலாமுங்களே!!”
“அது உணர்ச்சி வசப்படறவங்களோட வழிமுறை. நாம சமுதாயத்திற்காக போராடுறவங்க. நம்ம பண்ற போராட்டத்திற்கு பின்னாடி உலகளாவிய கொள்கை இருக்கு. நமக்கு முகத்தை மூடனுங்கிற அவசியம் இல்ல. தப்பு பண்றவன் முகமூடிய கிழிக்கிறது தான் போராளிங்க வேலை. புரியுதா? நம்ளது கொள்கைசார் போராட்டம்.”
“எனக்கு எங்க சாமி அதெல்லாம் புரியப் போகுது?”
“புரியும். கண்டிப்பா புரியும். முதல்ல ஒன்ன புரிஞ்சுக்க. இங்க யாரும் யாருக்கும் ‘சாமி’ கிடையாது. எல்லாரும் சமம். இனிமே ‘தோழர்’னு கூப்பிடு.”
“:)”
“ம்ம்.. கூச்சப்படாத. சரியா? பழகிட்டா சரி ஆயிடும். உன் மேல தப்பில்ல. பார்ப்பினியவாதிங்க நம்மள எல்லாம் காலம் காலமா அடிமை பண்ணி வச்சதால தான் இந்த குளறுபடி எல்லாம். நம்ம முதண்மை நோக்கமே.. அவங்களுக்கு எதிரா போராடி, அவங்க வளர்த்த பார்ப்பினியத்த கலையனும்.”
“பண்ணலாமுங்க. கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு!! தப்பு பண்றவனுங்கள முந்திரிக் காட்டுல ஓட விட்டு கேள்வி கேட்டு கேட்டு அடிச்சி தூள் கிளப்பிடலாம்.”
“முந்திரிக் காட்டுலயா?? அவங்க வீட்டுக்கு போகனும். அவங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட அவனுங்களோட தப்ப எடுத்து சொல்லி கேள்வி கேட்கனும். அவனுங்க தெருவுல இருக்கிற எல்லார் வீட்லயும் புகுந்து போராடனும்.”
“ஆனா.. அவனுங்க எப்ப வீட்டுல இருக்காங்கன்னு முதல்ல தெரிஞ்சுக்கனுமே!! ஏன்னா.. அது அவனுங்களுக்கே தெரியாதே?”
“ஏன் தோழா தெரிஞ்சுக்கனும்?”
“ஏங்க அவனுங்க இல்லாத நேரத்துலயா வீடு பூந்து போராட்டம் பண்றது?”
“இதுக்கு பெயர் தான் ஆணாதிக்கம். பொண்ணுங்க எல்லாம் எப்பவும் ஆம்பளைங்களயே நம்பி இருக்கிற மாதிரி எண்ணத்த வளர்த்து விட்டு அதை அவங்களையும் நம்ப வைக்கிறீங்க பாரு.. இதான். இந்த விஷ விதைய முதல்ல உன் மனசுல இருந்து கலையனும்.”
“ஆனா இது தப்புங்க? போயும் போயும் பொம்பளகிட்டக்கயாங்க போராட்டம் பண்ணுவாங்க? எவனாவது திமிர் மேல தப்பு பண்ணா.. அவங்க வீட்டு பொம்பள என்னங்க பண்ணுச்சு? அதே மாதிரி எவனாவது நம்ம மேல இருக்கிற கோவத்த நம்ம வீட்டுல காட்டிட்டா?”
“தோழரே.. திரும்பி அதையே சொல்லாதீங்க. உங்களுக்கு சரியா புரியல போல? நாமெல்லாம் போராளிங்க. நமக்கு சமூகம் தான் முக்கியம். குடும்பம், மகிழ்ச்சி எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். பல சமூகங்களா பிரிஞ்சிருக்கிற மக்கள் எல்லாரும் சமம் ஆகனும்னா.. இந்த மாதிரி போராட்டம் எல்லாம் அவசியம் ஆகுது. சமுதாயத்த விட தனி மனிதன் எப்பவும் முக்கியம் கிடையாது. “
“இருக்கலாமுங்க. ஆனா.. ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு சமுதாயம் மாதிரி தானுங்க. வீட்டுலயே நான் புருஷன், அப்பன்னு ரெண்டு ஆளு. வேலை செஞ்சா தொழிலாளி. கூலி கிடைச்சவுடன் மைனர். இப்படி சொல்லின்னே போலாமுங்க. பல ஆளுங்க இணைஞ்சது தான் சமுதாயம். அப்படிப் பார்த்த நானே ஒரு சமுதாயம். உங்களுக்கு தெரியாததா? நான் என்ன புதுசா சொல்லப் போறேன்? ஆனா எனக்கு சமுதாயத்த விட என் குடும்பம் தானுங்க முக்கியம். அதுக்கு அப்புறம் தாங்க எல்லாம்.”
“இது தான் இந்திய அறிவாளிங்களோட வெற்றி. பழி, பாவம், குடும்பம், பாசம்னு நம்மள வட்டத்துக்குள்ள அடைச்சி அடிமை பண்ணி வச்சிருக்காங்க. அத உடைக்கனும். அப்ப தான் எல்லாரும் சமம் ஆக முடியும்.”
“நீங்க நல்லா தானுங்க பேசுறீங்க. ஆனா நீங்க என்ன சொன்னாலும் நமக்கு இது சரி பட்டு வராதுன்னு போல தெரியுதுங்க. நான் வர்றேனுங்க.”
“நில்லு.”
“இல்லீங்க. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி டவுனுக்கு வேற போகனுமுங்க. அங்க பொஞ்சாதியோட சோக்காளி பூ விக்குதுங்க. சின்னதா ‘ரோசாப் பூ’ மாலை சொல்லியிருக்கோம். நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆன நாளுங்க.. அதாவது ரெண்டு சமூகம் சமமா இணைஞ்ச நாளுங்க. அதான்.. தப்பா எடுத்துக்காதீங்க தோழரே!!”
– தினேஷ் ராம்


