Search

பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!

பெற்றோர்களே உஷார்.!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்வது என்பது சவாலான விஷயமே! ஓடி ஓடிச் சம்பாதிக்கும் நாம், நமது குழந்தைகளின் மனதைப் புரிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், குழந்தைகள் சிறுவயது முதல் தங்கள் முக பாவனை, நடை, பேச்சு, செயல்களின் மூலம் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

விருப்பு, வெறுப்பு, செயல், புரிதல் தன்மை முதலியன குழந்தைகளைப் பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு, ஒரு சில குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கலாம்; அவர்களைக் கடிந்து வேறு ஒரு செயலைச் செய்யத் தூண்டும்போது மன அழுத்தத்தை விதைத்து அவர்களது சிறிய ஆசையையும் தேக்கி வைக்கிறோம். நம் அதிகாரத்தை உபயோகித்து அவர்களது ஆசைகளை நிராகரிக்கும்போது, நம் மேல் ஒரு வெறுப்பு, பயம் வர நாமே காரணமாகிறோம்.

அதிகாரத் தோரணையை விடுத்து, அன்புடன் அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கும்போது குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள். வளர்ந்த குழந்தைகளிடம், அன்றைய தினத்தைப் பற்றி தினமும் பேசுங்கள். அதன் மூலம் அவர்களின் கேள்விகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உங்கள் மேல் ஒரு நம்பிக்கையை உருவாக்குங்கள். ஒரு நல்ல நண்பனாக/ தோழியாக உங்கள் குழந்தைகளை அறிய முற்படுங்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களே ரோல் மாடல். நீங்கள் எதையெல்லாம் செய்கிறீர்களோ அதையெல்லாம் அவர்களும் செய்ய விழைவார்கள்.

ஒன்றைக் கவனத்தில வைத்து நடந்து கொள்ளுங்கள், உங்கள் கன்களால் அவர்கள் பார்க்க விரும்புவார்கள், உங்கள் நாவினால் பேச விழைவார்கள், உங்கள் செயல், மனத்தின் மூலம், இவ்வுலகத்தை அறிய முற்படுவார்கள். பிஞ்சு மனது பசுமரத்தாணி போல, அதனால் முதலில் அவர்கள் முன் கடுஞ்சொற்கள் பேசுவதையோ, பொய் பேசுவதையோ நிறுத்துங்கள். அதுவும், வளர்ந்த டீனேஜ் பருவத்தினர் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். எது சரி, எது தவறு என்று புரியாததால், சுயமாக அவர்களின் எண்ணத்திற்கு ஏற்பவோ அல்லது தவறான சகவாசத்தினாலொ தடம் புரள்கிறார்கள். இந்த வயதில் மூன்றாவது நபரின் எந்த ஒரு அன்பான பேச்சும், செயலும் அவர்களை தடம் புரளச் செய்யும். விளைவு தெரியும் போது காலம் கடந்திருக்கும். கசப்பான சம்பவங்களாள் மன வேதனை மட்டுமே மிஞ்சும்.

உங்களுக்கும் குழந்தைகளுக்கும் நடுவில் தடுப்பு சுவர் தேவையில்லயே!! நீங்கள் ஒரு அன்பான தாய்/தந்தை என்று வைத்துக் கொள்ளுங்கள், என்ன கேள்வி கேட்டாலும் என்ன சந்தேகமாக இருந்தாலும் தோழமையோடு பொறுமையாக விளக்குவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால், பிரச்சனை என்று வரும்போதும் உங்களிடம் முதலில் வருவார்கள். அங்கே மூன்றாவது மனிதரின் தலையீடு வருவதில்லை. இதுவே எப்பொழுதும் சிடுசிடுவென்று இருப்பவரிடம் யாரவது செல்வார்களா??

குழந்தைகளுடன் குழந்தையாக மாறி, அவர்களின் நல்லொழுக்கத்தைப் பாரட்டுங்கள். தவறுகளை தோழமையோடு சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துங்கள்.

பிறகென்ன, உங்கள் வீடு “ஆயிரம் ஜன்னல் வீடு.. இது அன்பு வாழும் கூடு..” தான்.!

– லலிதாம்பிகா ராஜசேகரன்