32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டெலிவரி பாய் விமர்சனம் | Delivery Boy review

Dinesh R சேலம் Published: 28/11/2026 2 நிமிட வாசிப்பு இது புதிது
எழுத்து அளவு:

டெலிவரி பாயாக வேலை செய்யும் சிவா, ஒரு நெருக்கடியின் பொழுது முன் பின் அறிமுகமில்லாத கெளதம் என்பவரிடம் பணத்தைத் திருடி விடுகிறார். கெளதமின் பணத்தைத் திருப்பித் தர சிவா முயற்சி செய்யும் பொழுது, ஒரு கொலை வழக்கில் கெளதமைக் காவல்துறையினர் கைது செய்கின்றனர். கெளதம் ஏன் கைது செய்யப்படுகிறார், அவருக்கு எப்படி சிவா உதவுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிவா தேன்மொழியைக் காதலிக்கிறார். தேன்மொழியாக பிரிகடா சகா நடித்துள்ளர். படத்தில் நாயகி என ஒருவர் இல்லாமல் போய் விடக்கூடாதென்று கடைசியில் இணைக்கப்பட்டுள்ளார். முதல் பாதியில் ஒரு சிறு மலர்ச்சியை ஏற்படுத்தி விட்டுப் போகிறார். சுந்தரமூர்த்தியின் இசையில், மோகன் ராஜாவின் வரிகளில், ‘செங்காத்தியே மனசுல உட்கார்ந்தியே!’ எனும் பாடல் ரசிக்க வைக்கிறது.

கெளதமாக துஷ்யந்த் நடித்துள்ளார். படத்தின் இரண்டாவது கதாநாயகன் எனச் சொல்லுமளவு மிகச் சிறந்த கதாபாத்திரம் வாய்த்துள்ளது அவருக்கு. அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். மிகச் சிறப்பானதொரு கெளரவ வேடத்தில் உதயா தீப்பும் கலக்கியுள்ளார். ‘பாட்டில் கேங் (Bottle Gang)’ -ஐச் சேர்ந்த ஏழு பேரும் கண்களில் கொலைவெறி மின்ன அச்சுறுத்தலான நடிப்பை வழங்கியுள்ளனர். படத்தைத் தயாரிப்பாளரின் ஒருவரான நாமக்கல் எம்.எல்.ஏ. லெனின் மாதேஸ்வரன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். திரையில் நடித்துப் பழக்கப்பட்டவர் போல் அவரேற்ற கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்துள்ளார்.

“உன்னுடைய பணமாக இருந்தாலும் சரி, மற்றவரின் பணமாக இருந்தாலும் சரி, உடனடியாக யாருக்குத் தேவையிருக்கோ, அவர்களுக்கு அந்தப் பணம் தேவைப்படணும்” எனச் சொல்லி தன் மகனை வளர்க்கிறார் சிவாவின் அம்மா. ராதிகா சரத்குமாரிற்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், தனது அனுபவத்தால் கிடைத்த காட்சிகளில் முத்திரையைப் பதித்து விடுகிறார். அவர் பேசும் இந்த வசனம் தான் படத்தின் அடிநாதம்.

சிவாவாக, திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகன் வேடத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் போட்டுள்ள உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரை நாயகனாக ஏற்றுக் கொள்ள வைத்துவிடுகிறது. இயக்குநர் நானியின் எழுத்தும் அதற்கு சரி சமமாகத் துணை புரிந்துள்ளது. படத்தின் இரண்டாம் பாதி ஆக்ஷனிற்கு மிக அழகான அடித்தளம் அமைத்துக் கொண்டு போயுள்ளார் இயக்குநர். எதிர்பாராத ஓர் ஆக்ஷன் சர்ப்ரைஸை இப்படம் நிச்சயம் அளிக்கும். சண்டைக்காட்சிகளை மிக அழகாக கோரியோகிராஃப் செய்துள்ளார் ஃபீனிக்ஸ் பிரபு. க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியை ரசிக்கும்படியாகவும் நம்பும்படியாகவும் காட்சிப்படுத்தியுள்ளனர். ‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ எனும் திருக்குறளோடு படத்தை முடித்துள்ளது சிறப்பு!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.