32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வேதாளம் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 11/11/2015 2 நிமிட வாசிப்பு Updated: 08/03/2016 சினிமா
எழுத்து அளவு:

Vedhalam Tamil Review

மீண்டுமொரு ‘தல’ தீபாவளி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை.

வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், ‘உனக்கு குழந்தைச் சிரிப்பு’ என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார்.

‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது.

அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் கொண்டே சண்டையிடுவதும் ரசிக்க வைக்கிறது. இதை அவர் முதல் பாதியிலும் செய்யத்தான் செய்கிறார். ஆனால், அதையே காரணக்காரியங்களோடு இரண்டாம் பாதியில் பொருத்திப் பார்க்கும்பொழுது ரசிக்க முடிகிறது.

வசன உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் பின்னிப் பெடலெடுக்கும் வடிவேலு இல்லாத குறையைப் பூதகரமாகப் பெரிதுபடுத்திக் காட்டுகிறார் சூரி. வடிவேலாகும் முயற்சியை கைவிட்டு, ரசிகர்களைச் சோதிப்பதை அவர் கைவிட வேண்டும். இரண்டாம் பாதியில் வரும் அப்புகுட்டி ரசிக்க வைக்கிறார். கொல்கத்தா காளியாக, அஜித்தின் அறிமுகத்திற்கு உதவும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் வழக்கம் போல் ஈர்க்கிறார். சொல்லப் போனால் அஜித்தின் அறிமுகத்தைச் சாதாரணமாக்கி விடுமளவு ராஜேந்திரனின் ‘ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்’ படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது.

அஜித்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்தான் படத்தின் நாயகி. தமிழ் எனும் பாத்திரத்தில், படம் நெடுக்க வருகிறார். ஆடல், பாடல், லூசுத்தனம் என நேர்ந்து விடப்பட்ட ஸ்ருதி ஹாசனுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார் லட்சுமி மேனன்.

‘ரதகஜ துரக பதாதிகள் எதிர்த்தினும் அதகளம் புரிந்திடும் வீரம்’ என வீரம் படத்தின் அட்டகாசமான தீம், எதையும் யோசிக்க விடாமல் முழுப் படத்தையும் சுவாரசியப்படுத்தி இருந்தது. அந்த மட்டில் அனிருத் சறுக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும். ‘ஆலுமா டோலுமா’ என்ற ரோகேஷின் வரிகளில் திரையரங்கம் அதிர்கிறது. இயக்குநர் சிவா, அஜித்தைக் கொண்டு இரண்டாம் பாதியில் அதகளம் புரிந்துள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.