
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை.
ஜக்காரி ஒரு புத்தகத்தைத் தெரியாத்தனமாகத் திறந்து விடுவதால், அதிலிருந்து எட்டி எனும் பனி மனிதன் வெளியில் வந்துவிடுகிறான். அதனைத் தொடர்ந்து நடக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
ஸ்லாப்பி எனும் வில்லன் பொம்மை உயிர் பெற்றதும் படம் சுவாரசியமாகிவிடுகிறது. அது, அனைத்துப் புத்தகங்களிலுமுள்ள கோரமான/ பயங்கரமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதோடு, அவர்களை வழி நடத்தவும் செய்கிறது. மேடிஸன் எனும் ஊரின் தகவல் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அங்குள்ளவர்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது ஸ்லாப்பி.
ஆர்.எல்.ஸ்டைன் எனும் அமெரிக்க எழுத்தாளர், 1992 இல் இருந்து 1997 வரையிலும், ‘கூஸ்பம்ப்ஸ்’ என்ற தலைப்பில் எழுதிய சிறுவர் திகில் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. அந்த திகில் கதைகளைப் படித்திருந்து, அந்தக் கதாபாத்திரங்களை அறிந்திருந்தால் படத்தோடு சுலபமாகப் பொருத்திப் பார்க்க இயலும். இல்லையெனில், படத்தை அதன் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்காக மட்டுமே ரசிக்க இயலும். அதுவும் ஓநாய் மனிதனின் வாய் க்ளோஸ்-அப்பில் காட்டப்பட்டு, அதன் வாயில் இருந்து ஒழுகும் எச்சில் நம் முகத்தில் விழுவது போன்ற முப்பரிமாணக் (3-டி) காட்சியில் உண்மையிலேயே மயிர்க்கூச்சு ஏற்படுகிறது.
இந்தக் கதையின் நாயகனுக்கு, ஆர்.எல்.ஸ்டைன் எனும் அந்த எழுத்தாளரின் பெயரையே சூட்டியுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான ஜாக் பிளாக், அந்தக் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். வில்லன் பொம்மையான ஸ்லாப்பிக்கும், மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத சேட்டைச் சிறுவனுக்கும் அவரே படத்தில் குரலும் கொடுத்துள்ளார்.
திரைக்கதையில் பெரிதாக திருப்பங்கள் வைக்காமல், சிறுவர்களை மனதில் கொண்டு நககைச்சுவையாக எடுத்துள்ளனர். பயங்கரமான கதாபாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்றுவிட்டால், என்ன செய்யும் என்பதைக் கவரும் விதமாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். ஸ்லாப்பியின் மந்தகாசப் புன்னகையும், விஷூவல் எஃபெக்ட்ஸும் நிச்சயமாகப் பெரியவர்களையும் ஈர்க்கும்.