ரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில் நாயகனாக நடித்த செல்வா தான் படத்தின் இயக்குநர் செல்வா. 1998இல் கோல்மால் எனும் படத்தை இயக்கிய பின், 19 வருடங்கள் கழித்து இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். தன் பெயரையும் கபாலி செல்வா என மாற்றிக் கொண்டுள்ளார். அந்தளவிற்கு செல்வா ஒரு தீவிர ரஜினி ரசிகர்.
ரஜினி படத்துப் போஸ்டரை ஒருவன் கிழித்து விட, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் ரஜினி ரசிகரான குங்ஃபூ மாஸ்டர் எதிர்பாராத விதமாக அவனைக் கொன்று விடுகிறார். சிறையில் இருக்கும் தனது மாஸ்டர், கபாலி படத்தை முதல் நாள் பார்க்கவேண்டுமென அவரால் வளர்க்கப்பட்ட மாணவர்கள் விரும்புகின்றனர். சிறையில் இருக்கும் மாஸ்டரை எப்படி அவரது மாணவர்கள் பரோல் எடுக்கின்றனர் என்பதும், கபாலி படத்தை மாஸ்டர் பார்த்தாரா இல்லையா என்பதும் தான் படத்தின் கதை.
மாஸ்டரின் மாணவர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் படத்தின் காமெடி போர்ஷன்க்குப் பொறுப்பேற்பது தம்பி ராமையாவும், ரிஷாவும், யோகி பாபுவும் தான். கமல் ஃபேனாகவும், டி.ஐ.ஜி. ஆகவும் வரும் தம்பி ராமையா படம் நெடுகேவும் வருகிறார். கமலை வம்புக்கு இழுப்பது போல் தெரிந்தாலும், “நானே அவர் பெயரை அசிங்கப்படுத்திட்டு இருக்கேன்” என்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் நீர்த்துப் போகச் செய்து விடுகிறார். யோகி பாபுவின் வழக்கமான டைமிங் கவுன்ட்டர் மிஸ் ஆனாலும், ரிஷாவுடனான அவர் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
வெள்ளை தாடி, கோட் சூட்டில் கபாலி படத்தில் வரும் ரஜினி போலவே இருக்கிறார் செல்வா. சிறையில் 10 வருடங்களும் ரஜினி பற்றிய புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருக்கிறார். தன் மகனைப் பார்த்துக் கலங்கும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். எனினும், முழு நீள நகைச்சுவைப் படமாகவும் இல்லாமல் சீரியசான படமாகவும் இல்லாமல், சீரற்று கலந்து கட்டி உள்ளதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. எம்.எஸ்.பாஸ்கரை இன்னும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கலாம்.
ஜான் விஜய், கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்த சக நடிகர் ஜான் விஜயாகவே தோன்றியுள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாய் உள்ளது. அவரது மனநிலை மாற்றம் (mood swing), பணியாளரை மிரட்டும் தொனி என தான் வரும் காட்சிகளை மிகவும் கலகலப்பாக்கியுள்ளார். இன்னும் கொஞ்சம் பெட்டரான க்ளைமேக்ஸாக வைத்திருக்கலாம் கபாலி செல்வா.