Shadow

கொடிவீரன் விமர்சனம்

Kodiveeran movie review

கொடிவீரன் எனும் பெயர் கொண்ட சாமியாடியின் அருள்வாக்கு பலிதம் ஆகிறது. தீர்க்கதரிசணங்கள் நிகழ்ந்தே தீரும் என்ற மனிதனின் ஆதி நம்பிக்கை தான் படத்தின் மையச் சரடு. வீரன் என்பதை நாயகன் கொடிவீரன் என்றும், கொடி என்பதை அவன் மனம் கவர்ந்த மலர்க்கொடி என்றும் கூடத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஆனால், கொடிவீரனுக்கும் அவன் தங்கை பார்வதிக்கும் உள்ள பாசப்பிணைப்புத்தான் கொடிவீரன் படத்தின் கதை.

பெண் கதாபாத்திரங்களை வழிபாட்டுக்குரியவர்களாகத் தன் படைப்புகளில் சித்தரித்து வருபவர் இயக்குநர் முத்தையா. இந்தப் படத்தின் தொடக்கமும் அப்படியொரு உணர்வுபூர்வமான அத்தியாயமே! ரத்தினச் சுருக்கமாய், அது பல விஷயங்களைப் பேசி விடுகிறது. சமூகத்தில் வேர் விட்டிருக்கும் ஆணாதிக்க மனோபாவம், குற்றவுணர்வின்றி அதைப் பெருமையாகக் கருதும் ஆண்கள், அத்தகைய ஆண்களுக்குத் துணையாக இருக்கும் ‘ஆம்பளடா!’ கடவுள்கள் என அந்தக் காட்சிகளில் பொதிந்திருக்கும் அடர்த்தி அதிகம். இத்தகைய ஆண்வய சமூகத்தில், தன்னிருப்பையும் அவநம்பிக்கையையும் உணர்த்த பெண்கள் முன்னிருக்கும் வாய்ப்புகள் இரண்டே இரண்டு தான். ஒன்று, ஊருக்கே தீ மூட்டுவது; மற்றொன்று, தன்னைத் தானே அழித்துக் கொள்வது. அப்படி இரண்டு வகைமையைச் சேர்ந்த பெண்களுக்கும் இடையில் ஏற்படும் சவாலில் வெல்வது யாரென்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

அண்ணன்களை இயக்கும் தங்கைகளாகப் படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர், வேல்விழியாகத் தகராறு பிடித்தவராய் நடித்திருக்கும் பூர்ணா; மற்றொருவர், தியாகத் திருவுரு பார்வதியாக நடித்திருக்கும் சனுஷா. நாயகன் சசிகுமாரும், வில்லன் பசுபதியும் தமிழ் சினிமாவின் பாரம்பரியத்தை நிலைநாட்ட முறுக்கிக் கொண்டிருக்கும் வெத்து ஆண்களே! இப்படியாகக் கதாபாத்திர உருவாக்கத்தில் இருக்கும் நேர்த்தி திரைக்கதையில் இல்லாதது பெருஞ்சோகம். நட்புக்குக் கோணார் உரை எழுதிய படங்களில் எல்லாம் சசிகுமாரிடம் இருந்த குறைந்தபட்ச ஈர்ப்பு, இந்தப் படம் முழுவதுமே ஒரு ஃப்ரேமில் கூட இல்லை. அவரது முகத்தில் தெரியும் முதிர்ச்சியும் சோர்வும், படத்தின் செயற்கைத்தன்மையைப் பன்மடங்கு பூதகரமாக்குகிறது.

தங்கை மீதுள்ள பாசமும், அதன் பொருட்டு அவர் எடுக்கும் தீர்மானத்தையும், ஒரு பார்வையில் அநாயாசமாய்க் காட்டி விடுகிறார் பசுபதி. எனினும், ‘போதும்டா சாமீ!’ என சில வருடங்கள் முன் சலித்துப் போய் அவர் ஏற்க மறுத்த கதாபாத்திரங்களே மீண்டும் பசுபதிக்கு அமைவது மிகத் துரதிர்ஷ்டவடமானது. வேல்விழி எனப்.பெயர் வைத்து விட்டதாலோ என்னவோ, பூர்ணாவை முறைக்க விட்டு நிறைய க்ளோஸ்-அப் ஷாட்கள் வைத்துள்ளனர். தனக்கிடப்பட்ட பணியைச் சரியாகச் செய்யும் பாசமலராக சனுஷா. சசிகுமாரின் ஜோடியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார் தான் பாவம் சும்மா தலையைக் காட்டி விட்டுப் போகிறார்.

தனது தங்கையால் இயக்கப்படாத படித்த அண்ணனாக விதார்த் நடித்துள்ளார். விதார்த்தின் தம்பி துரையாக, ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாறன் நடித்துள்ளார். ‘கல்லை உடை, சேலையைக் கட்டு, காலில் விழு’ எனப் படத்தில் சுத்தமாக ஒட்டாத கதாபாத்திரமாகவும், கதைக்குச் சம்பந்தமில்லாமலும் தனித்துத் தெரிகிறார். கர்மசிரத்தையாகச் சடங்குகளை ஆவணப்படுத்தி படத்தின் நீளத்தைக் கூட்டியுள்ளார் முத்தையா. ‘குற்றம் 23’ படத்தின் தயாரிப்பாளரான இந்தெர் குமார் ஆஜானுபாகு கெட்டவனாக வருகிறார்.

தியாகம், குடும்பம் என்று வட்டத்திற்குள்ளேயே பெண்களைப் புனிதப்படுத்திக் கொண்டிராமலும், ஆண்களை நல்ல முறையில் இயக்குவதுதான் பெண்ணின் வேலை என்று சொல்லிக் கொண்டேயிராமலும், பெண் சுதந்திரமானவள், தனக்காகவும் வாழ உரிமையுள்ளவள் என்ற புள்ளியை நோக்கி முத்தையா நகர்ந்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.