நீல நிறச் சூரியன் விமர்சனம்
வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில், தகிப்பையும் தவிப்பையும் ஒரு கணமேனும் மனிதராகப்பட்ட ஒருவரும் அனுபவித்திருப்பார்கள். செய்யாத குற்றத்துக்குத் தண்டனை ஏற்கும் பொழுது, தனது உழைப்பைப் பிறர் திருடி ஆதாயம் அடையும் பொழுது, தகுதியற்றவர் முன் கைகட்டி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது என தகிப்பும் தவிப்பும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஏற்பட்டிருக்கும். அதில், உடலால் ஒரு பாலினமாகவும், மனதால் வேறு பாலினமாகவும் உணரும் ஒருவரது தகிப்பும் தவிப்பும் அடங்கும். ஒப்பீட்டளவில் இது மிகக் கொடுமையானது. அக்கொடுமை ஆண்டுக்கணக்காக, சில சமயம் மரணம் வரையிலுமே கூட நீளும். தகிப்பைத் தணிக்க நீரில் இறங்கினால், மீண்டும் நீரில் இருந்து எழ முடியாதபடிக்குத் தலையைப் பிடித்து நீரிலேயே அமிழ்த்துவிடப் பார்க்கும் இந்தச் சமூகம், சமூக ஏளனம், குடும்ப மானம், உறவுகள், இத்யாதிகள். நாகரீக பாவனைக்குக் கீழ், இந்தச் சமூகம் ஒளித்து வைத...