எல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும் நிலமும் தமிழ்நாட்டின் பக்கமும், அந்த வீட்டுக்குப் பாத்தியப்பட்ட கிணறு கேரள பக்கமுமாகப் போய்விடுகிறது. அந்தக் கிணறு, அதன் உரிமையாளரான இந்திராம்மாவிற்கு மட்டுமல்லாமல் வறட்சியின் காரணமாக அந்த ஊரிற்கே அவசியமாகிறது. அந்தக் கிணறை மையப்படுத்திய அரசியல் தான் படத்தின் கதை.
தண்ணீர் இல்லாத ஒரு பொழுதை யோசிக்கவே குலை நடுங்குகிறது. படம் தண்ணீரின் தேவையை, அதைப் பகிர்த்து கொள்வதில் எல்லைகளுக்கு இடையேயான சிக்கல் என மிக ஆழமானதொரு கருவைத் தொட்டுள்ளது. எனினும் படம் அந்த மையப் புள்ளியில் இருந்து விலகி, ‘இந்திராம்மாடா! ப்பாஆஆ, என்ன ஒரு போராளி’ எனத் தொடர்ந்து பதிகிறது. அதுவும் காட்சிகளாக இல்லாமல் வசனங்களாக. புளியன் மலையின் தலைவர் பார்த்திபன், சமூக அக்கறையுள்ள வக்கீல் நாசர், தமிழக எல்லையின் கலெக்டரான ரேவதி, புளியன் மலை ஊர்வாசியான அனுஹாசன், நீதிபதி ரேகா என படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களுமே இந்திரம்மா புகழ் பாடுகின்றனர். அதனால் படம் ஒரு டாக்குமென்ட்ரி ஃபீலைத் தருகிறது.
இந்திரம்மாவாக ஜெயப்ரதா நடித்துள்ளார். சாமானிய பெண்ணான அவர் எந்தப் புள்ளியில் விஸ்வரூபம் எடுக்கிறார் என்ற மேஜிக் படத்தில் மிஸ்ஸிங். வறட்சியான திரைக்கதையில் அனைவருமே பொலிவிழுக்க, பார்த்திபன் மட்டும் தான் வரும் காட்சிகளில் அசால்ட்டாய் ஸ்கோர் செய்துள்ளார்.
படத்தின் தொடக்கம் மிக அருமை. ஜேசுதாஸும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்து பாடுகின்றனர். அப்பொழுது, ராஜாமுகமதின் ஒளிப்பதிவில் வரும் மாண்டேஜஸ் ரசிக்க வைக்கின்றன. படத்தின் பல காட்சிகள், நான்-லீனியராக இருப்பதால், அந்த ஊரின் வறட்சி பார்வையாளர்கள் மனதில் ஆழமாகக் காட்சிரூபமாகப் பதியப்படுவதில்லை. வசனங்களில் உள்ள தண்ணீரின் தேவை பற்றிய பதற்றமும் ஆவேசமும் காட்சிகளில் இல்லை. ஒரு முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்படுவதாக வரும் கிளைக்கதையும் அம்போவென விடப்பட்டுள்ளது.
மனதின் ஆழத்தைத் துளைத்துப் பதம் பார்த்திருக்க வேண்டிய படம். ஆனால், எம்.ஏ.நிஷாதின் ஆவணத்தனமான திரைக்கதையால் அது நிகழாமல் போய்விடுகிறது. நீதிமன்றத்தில் வென்ற பிறகும், கிணற்றை உபயோகிக்க முடியாமல் போய்விடுகிறது. அப்பொழுது ஜெயப்ரதாவும், ஊர் மக்களும் நம்பிக்கை இழக்காமல் ஒரு காரியம் புரிகின்றனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் போட்டிப் போட்டு பார்வையாளர்களின் உணர்வுகளை எழுப்பி, நீரைக் கண்ணில் இருந்து வரவழைத்திருக்கலாம். ஏனோ, க்ளைமேக்ஸ் காட்சியும் மிகச் சாதாரணமாய்க் கடக்கப்பட்டுவிடுகிறது.