Search

7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி

ind-vs-pak

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ரசிகர்களுக்கு இனம் புரியாத உற்சாகமும் மகிழ்ச்சியும் வந்துவிடும். அதுவும் உலகக்கோப்பைப் போட்டி என்றால் இந்திய ரசிகர்களுக்கு டபுள் தமாகா தான்!

இரு அணிகளுக்குள்ளும், இது வரை நடந்த உலகக்கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே வென்றிருக்கிறது. இம்முறையாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தானும், வெற்றியைத் தொடர வேண்டும் என்று இந்தியாவும் களம் கண்டனர்.

ஆஸிக்கு எதிராக போட்டியில் காயமடைந்த ஷிகார் தவான், மூன்று வார ஓய்வில் இருப்பதால் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களம் கண்டார். பாகிஸ்தான் அணியில் ஷாதப் கானும், இமம் வாசிமும் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் அகமது, பௌலிங்கைத் தேர்தெடுத்தவுடன் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது, காரணம் இந்த உலகக்கோப்பை டாஸ் வென்று பௌலிங்கைத் தேர்தெடுத்த அணிகள் எல்லாம் 300+ ரன்களை வழங்கியிருந்தது.

ராகுல், ரோகித் ஷர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறிங்கினார். முதல் ஓவரை முகமது அமீர் மெய்டினாக முடித்தார்.

ஒருமுனையில் ராகுல் பொறுமையாக ஆட, ரோகித் ஷர்மா வழக்கதிற்கு மாறாக ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார், குறிப்பாக ஹசன் அலி ஓவரில் ஃபோர், சிக்ஸாக விரட்டினார்.

ஒன்பாதவது ஓவரில் ரன் அவுட் வாய்ப்பை பாகிஸ்தான் வீணடித்தது. ரோகித் ஷர்மா பாதி கிரவுண்டில் இருக்க, ஃபீல்டர் கீப்பருக்கு பதிலாக பௌலருக்கு பந்தைக் கடாசியதால், ரோகித் கண்டத்திலிருந்து தப்பினார். அடுத்த ஓவரில் ஒரு ரன் அவுட் கண்டத்தில் ரோகித் தப்பினார்.

இந்த இரு ரன் அவுட் வாய்ப்பைத் தவிர, வேறு எந்த வாய்ப்பையும் இந்திய தொடக்க வீரர்கள் தரவில்லை .

ஷாதப் கான் வீசிய முதல் ஓவரில் அதிரடி காட்டின ரோகித் 34 பந்தில் அரை சதத்தைக் கடந்தார்.

இந்தியாவின் மாப்பிள்ளை ஷோகிப் மாலிக் வீசிய ஓவரில் சிக்ஸர் அடித்து, உலகக்கோப்பையில் தன் முதலாவது அரை சதத்தை ராகுல் பதிவு செய்தார்.

விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறிய பாகிஸ்தானுக்கு, கிரிக்கெட் விதிமுறை வித்தியாசமான முறையில் உதவி புரிந்தது, வாகப் ரியாஸ் பிட்சின் “Danger area”வில் பந்து வீசி முடித்தவுடன் ஓடுவதாக நடுவரால் இரு முறை எச்சரிக்கப்பட்டார் (ஏற்கனவே முகமது அமீரும், இதே போல் இருமுறை எச்சரிக்கப்பட்டார்). மூன்றாவது எச்சரிக்கையிலிருந்து தப்பிக்க, அதுவரை Over the wicket-இல் பந்து வீசிய அவர் Around the wicket-க்கு மாறினார்.

அப்படி மாறின இரண்டாவது பந்தில் ராகுலின் விக்கெட்டை எடுத்தார், ராகுல் 57 ரன்களுடன் விடைபெற்றார், அப்பொழுது அணியின் ஸ்கோர் 136. பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் இந்திய தொடக்க இணையின் அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும் .

அடுத்து கோலி களமிறங்க, இந்த இணையும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்தது .

85 பந்தில் ரோகித் ஷர்மா தன் சதத்தை நிறைவு செய்தார், இந்த உலகக்கோப்பையில் இது இரண்டாவது சதம். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் ரோகித் இருக்கிறார்.

பின்னர் களமிறங்கிய பாண்டியா வழக்கம் போல் இல்லாமல் தொடக்கதில் பொறுமையாக விளையாடினார், மறுமுனையில் கோலி தன் அரை சதத்தை நிறைவு செய்ய, பின்னர் இருவரும் கிடைத்த வாய்ப்பில் ஃபோர், சிக்ஸாக அடிக்க ஆரம்பித்த நேரத்தில், முகமது அமீர் விசிய பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க முயல, லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பாண்டியா.

பின்னர் வந்த தோனியும் ஒரு ரன்னில் வெளியேற, உலகக்கோப்பையில் முதல்முறையாக விஜய் சங்கர் களமிறிங்கினார், ஆரம்பம் முதலே தடுமாறிய அவர், வாகப் ரியாஸ் பந்தில் கீப்பர் கேட்ச் என நடுவர் அறிவிக்க, மூன்றாவது நடுவரிடம் முறையிட்டுத் தப்பினார், சரியாக அதே நேரத்தில் மழை குறுக்கிட்டது.

சிறு இடைவெளிக்குப் பின் தொடங்கிய ஆட்டத்தில் ஓவர் எதுவும் குறைக்கபடவில்லை. முகமுது அமீர் வீசிய அடுத்த ஓவரில் கோலியும் 77 ரன்னில் வெளியேற, இந்தியாவின் 350 கனவு தகர்ந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பில் 336 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அமீர் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் விளையாடத் தொடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆனாலும் ஓவர் எதுவும் குறைக்கப்படவில்லை.

ஆரம்பம் முதலே பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் பொறுமையாக விளையடினார். ஐந்தாவது ஓவரை வீசின புவனேஸ்வர் குமார், காயம் காரணமாக நாலாவது பந்தில் களத்தை விட்டு வெளியேற, விஜய் சங்கர் உலகக்கோப்பையில் தன் முதலாவது பந்தை வீச வந்தார். அந்தப் பந்தில் இமாம் உல் ஹைக்கை LBW முறையில் வெறியேற்ற, உலகக்கோப்பையில் தன் முதலாவது பந்தில் விக்கெட் வீழ்த்திய முதலாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் ஹார்வி, பெர்முடாவின் ஜோன்ஸ் இச்சாதனையைப் படைத்துள்ளனர் ( லீவர்லாக் பிடித்த அந்த சிலிப் கேட்சை மறக்க முடியுமா??? )

அடுத்து வந்த பாபர் அஸாம், ஜாமனுடன் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்து கொண்டாலும், தேவைப்படும் ரன்ரேட் உயர்ந்து கொண்டேயிருந்தது. சஹால் விசீய பத்தொன்பதாவது ஓவரில், பந்து பாபர் அஸாம் பேடில் பந்தில் பட்டது, இந்திய வீரர்கள் LBW கேட்க, அம்பயர் மறுக்க கோலி ரெவ்யூ கேட்க விரும்ப, தோணி வேண்டாம் என்றார். பின்னர் ரெவ்யூ கேட்டிருந்தால், அது அவுட் கொடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிய வந்தது . தோனி ரெவ்யூ சிஸ்டத்தின் ரேர் மிஸ் இது.

இருபது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 87 ரன்களைக் குவித்து ஒரு விக்கெட்டை இழந்திருந்தது. இருபது ஓவர் முடிந்து விட்டதால், இனி மழை பெய்தாலும், போட்டிக்கு முடிவுண்டு என ரசிகர்கள் நிம்மதி கொண்டனர். அப்பொழுது DLS-ப்படி 22 ரன்கள் பின் தங்கியிருந்தனர்.

இதனை உணர்ந்து கொண்டது போல், பாகிஸ்தான் வீரர்களும் அடித்து ஆட ஆரம்பித்தனர். அடுத்த மூன்று ஓவரில் 26 ரன்கள் குவித்தனர். 23 வது ஓவரின் முடிவில் பாகிஸ்தான் 113/1 என்றிருந்தது. DLS-ப்படி 11 ரன்கள் பின்தங்கியிருந்தனர். இந்தப் போட்டியில் அவர்கள் வெற்றிக்கு அருகிலிருந்தது இந்தக் கணத்தில் தான்.

24வது ஒவரை வீசிய குல்தீப், பாபர் அஸாமை அருமையான பந்து மூலம் வீழ்த்தினார். அதிலிருந்து பாகிஸ்தானின் சரிவு தொடங்கியது. குல்தீப் தன் அடுத்த ஓவரில் ஃபாக்கிர் ஜாமனையும் வீழ்த்த, பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர். பின்னர் வந்த ஹாபீஸ் சிக்ஸர் அடித்தாலும், பாண்டியா பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறிங்கிய இந்திய மாப்பிள்ளை ஷோகிப் மாலிக் முதல் பந்திலயே போல்ட் ஆகி பூஜ்ஜியத்தில் வெளியேறினார். 117/1 என்ற நிலையிலிருந்து 129/5 என்ற பரிதாப நிலைக்குப் பாகிஸ்தான் சென்றது.

கேப்டன் சர்ஃபரஸ், இமாமுடன் ஒன்றிரண்டு ரன்னாக சேர்த்து கௌரவமான ஸ்கோரை எட்ட நினைக்கையில், அவர் விஜய் சங்கர் ஓவரில் போல்ட் ஆகி வெளியேறினார் .

35 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 166/6 நிலையில் இருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது. அப்பொழுது DLS-ப்படி பாகிஸ்தான் 86 ரன்கள் பின்தங்கியிருந்தனர் .

மீண்டும் ஆட்டம் தொடங்காவிட்டாலும் இந்தியா வெற்றி என ரசிகர்கள் கொண்டாடத் தொடங்க, இந்திய வீரர்களின் முகத்திலும் அது தெரிந்தது. ஒருவழியாக மழை மீண்டும் விட, பாகிஸ்தானுக்கு 40 ஓவரில் 302 என இலக்கு நிர்மானிக்கப்பட்டது.

பாகிஸ்தான் 40 ஓவர் முடிவில் 212/6 குவிக்க, இந்திய 89 வித்தியாசத்தில் வென்று 7-0 என்று முன்னிலை பெற்றது .

பாகிஸ்தான் ரசிகர்களும் அடுத்த உலகக்கோப்பையிலாவது வெல்ல வேண்டும் என நடையைக் கட்டினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய மூணாவது இடத்திற்கு முன்னேற, பாகிஸ்தான் ஆப்கனிஸ்தானுக்கு மேல் ஒன்பதாவது இடத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது பாகிஸ்தான் ரசிகர்களின் ஒரே நம்பிக்கை, அவர்கள் கோப்பையை வென்ற 1992அம் ஆண்டும், இப்பொழுது நடக்கும் உலகக் கோப்பைக்கும் இருக்கும் ஒற்றுமையே. இரண்டும் ரவுண்ட் ராபின் முறை போட்டிகள்.

1992இல் முதல் போட்டியில் மே.இ.தீவுகளிடம் முதல் போட்டியில் தோற்றார்கள், இதிலும்.
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றார்கள், இதிலும்.
மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது, இதிலும் .
நாலாவது, ஐந்தாவது போட்டியில் தோற்றார்கள், இதிலும்.
இந்தியாவிடம் தோற்றார்கள், இதிலும்.

ஆனால், இந்தியா இத்தகைய ‘இதிலும்’ போன்றவற்றைப் பொருட்படுத்தாமல், வள்ளுவன் வாக்கில் நம்பிக்கை கொண்டு, ‘முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்’ என உலகக்கோப்பையை நோக்கி வெற்றி நடை போட்டு அசத்தி வருகிறார்கள்.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்