சினிமா உலகில் சிறிய படம், பெரிய படம் என்ற வேறுபாடு நட்சத்திரங்களையும் பட்ஜெட்டையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி படத்தின் வெற்றியைப் படத்தின் தரம் தான் தீர்மானிக்கிறது. அப்படியொரு தரமான படமாக தெளலத் படத்தைத் தயாரித்து இருக்கிறார் M.B.முகம்மது அலி. சக்தி சிவன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழு உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசியதாவது, “பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு டெளலத். டெளலத் என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது. ஆனால் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நடிகர் ஜீவா நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவே சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போது தான் தெரியும். அயோக்யா படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும். இங்கு தயாரிப்பாளரைப் பிடிப்பது முக்கியமல்ல. தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டியது தான் முக்கியம்” என்றார்.