Shadow

“திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெறமுடியும்” – காஸிமா | தி கேரம் குயின்

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6 ஆவது சர்வதேச கேரம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஸிமாவின் வாழ்க்கை சரிதம் என்பது மிகுந்த வலி மிகுந்தது.

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டைச் சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஸிமா.

இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. காஸிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘தி கேரம் குயின்’ எனப் பெயரிட்டு, பிரம்மாண்டமாகப் பூஜையுடன் படத் தொடக்க விழா நடை பெற்றது. இப்படத்தில் காஸிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கின்றார்.

விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஸிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட், “இந்தப் படத்தின் கதைமிக சுவாரசியமானது. முழுக் கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாகக் கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில், “நான் பெல்லாரி மாவட்டம். சில தொழில்கள் செய்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது. காஸிமா கதை என்னிடம் சொன்னார்கள். அந்த வலியும் வெற்றியும் என்னைப் பாதித்து, நானே அந்தக் கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளராகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசை படுகிறேன்” என்றார்.

இயக்குநர் முரளி, “நான் ஏற்கெனவே படங்கள் இயக்கி இருந்த போதும் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு நல்ல உண்மைச் சம்பவத்தை படமாக எடுக்கத் தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். அதே போல காஸிமா குடும்பத்தாரும் கதையைத் திரைக்கதையை உருவாக்க முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும் போது காஸிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மை தான். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கண்கலங்கும் விதமாகப் படம் இருக்கும்” என்றார்.

உண்மையான கேரம் குயினான காஸிமா, “நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். இதற்கு என் அப்பாவும் குடும்பத்தாரும் தான் காரணம். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது, அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்தப் பணத்தைக் கொண்டு என்னை விளையாட அழைத்துச் செல்வார். இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்குச் சொந்த வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். எல்லாப் பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும்” என்றார்.

நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா, “கேரம் குயின் கதையைக் கேட்டபோது அப்படியே என் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்தவகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர் சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.