Shadow

மை லார்ட் – மக்களுக்கான சினிமா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குரு சோமசுந்தரம், “இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை, அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்குப் பெருமை. இந்தப் படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக சைத்ரா தமிழ் சினிமாவுக்குத் தேவையான நடிகை. அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பு. இந்தப் படம் ஒரு வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, அதன் சுகதுக்கங்களை நேர்மையாக பேசும் படம். அதுதான் மக்களுக்கான நல்ல சினிமாவை உருவாக்குகிறது.

இப்படிப்பட்ட படங்களைத் தயங்காமல் தயாரிக்கும் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றி. கமர்ஷியல் கணக்கை மட்டும் பார்க்காமல், மக்களுக்கான சினிமாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றியும் சொல்ல வேண்டும். ஷான் ரோல்டன் இசையில் வந்த என் படங்கள் எப்போதும் தனித்துவமாக இருந்துள்ளன. இந்தப் படத்திலும் இசை ஒரு முக்கிய பலமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார், “ஒரு படத்தைப் பார்த்த பிறகுதான் அதைப் பற்றி நிச்சயமாகப் பேச முடியும். சம்பிரதாயமான வாழ்த்துக்காக இல்லாமல், அந்தப் படம் நமக்குள்ளே என்ன உணர்வை உருவாக்குகிறது என்பதைத் தைரியமாகச் சொல்ல முடியும். அந்த வகையில் நான் உறுதியாகச் சொல்ல முடியும், இது ஒரு மிகச்சிறந்த படம். நிச்சயமாக ஒரு வெற்றிப்படம். ராஜு முருகன் அவர்களின் படங்களை வரிசைப்படுத்தினால், இதுதான் முதல் இடத்தில் நிற்கும் என்று தைரியமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு அழகாகவும் ஆழமாகவும் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதற்குள்ளேயே பல படங்களுக்கான விதைகள் ஒளிந்திருக்கின்றன. இந்தப் படத்தின் மைய கருத்து ரொம்ப அழகானது. மனிதன் தோற்கலாம்; ஆனால் மனிதநேயம் எப்போதும் தோற்காது. இந்த எண்ணமே படத்தை உயர்த்துகிறது.

இந்தப் படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், குறிப்பாக சசிகுமார் சாருக்கும் என் நன்றிகள். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஒரு மனிதநேய உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன. படம் முடிந்த பிறகும் மனசுக்குள் ஒரு நல்ல தாக்கம் இருக்கிறது.

இசை இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம்.அது நம்ம மனசுக்குள் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு, தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றன. மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு உணர்வுப்பூர்வமான, மனிதநேயமான, மக்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம்” என்றார்.

இயக்குநர் விஜய் மில்டன், “சினிமாவிலிருந்து சில பேர் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று நம்ம மனசார ஆசைப்படுவோம். அந்த வகையில் எனக்கு மிகவும் முக்கியமானவர் ராஜு முருகன். சும்மா ஒரு கதையைச் சொல்லி சம்பளம் வாங்கிப் போகாமல், ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கும் மாதிரி, ஒரு கருத்தோடு படம் பண்ணிக்கிட்டே இருக்கிறவர். இப்போ இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. இங்கே இவ்வளோ பேர் கூடிவந்திருக்கிறதுக்கே காரணம் அவருடைய எழுத்து தான். இந்தப் படம் பார்த்த பிறகு உறுதியாகச் சொல்ல முடியும், ராஜுமுருகனுக்கு இது இன்னொரு பெரிய அடையாளம். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட கதைகளை படம் ஆக்குறது சவாலான விஷயம். அதற்கு ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், அதை நம்பி நடிக்கிற நடிகர் தேவை. அந்தத் துணிச்சலை காட்டி இந்தப் படத்திற்கு ஓகே சொன்ன சசிகுமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் இந்த மாதிரி மனிதநேயமான, கருத்துள்ள படங்களைத் தொடர்ந்து ஆதரிப்பது ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு நேர்மையாக வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது கமர்ஷியலாகவும், கருத்து ரீதியாகவும் மக்களிடம் பேசக்கூடிய ஒரு நல்ல படம். ஜோக்கர், குக்கூ மாதிரி இந்த வருடத்தில் நினைவில் நிற்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.